Monday, December 11, 2017

வள்ளுவர் பாடிய "கானா"ப்பாட்டு


——  ருத்ரா இ பரமசிவன்.  


ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு.....(குறள் 760)


காசு மணி துட்டு ...
இப்படி ஒரு கானாப்பாட்டின்
பொருள் ஒலிக்கும் படி
அன்றே "பொருள் "அதிகாரத்தில்
பாடி இருக்கிறார் வள்ளுவர்.

அறம் பொருள் இன்பத்துக்கு
தூண்டில் போடுங்கள்.
பொருள் மீன் சிக்கினால் போதும்.
மற்றது தானே வரும்.

எண்ணிப்பார்த்து மகிழலாம்
அறம் இன்பம் எல்லாம்.
ஒரு ரூபாய்க்குள் தான் தெரியும்
ஒன்பது உலகங்கள்.

காற்றின் சித்திரங்கள்
அறமும் இன்பமும்.
கரன்சியில் கட்டலாம்
கணக்கற்ற இன்பங்கள்.

சிவனும் விஷ்ணுவுமே
கனக தாராவில் உன்னை
குளிப்பாட்டுவார்கள்
கனமான உன் வங்கிக்கணக்கிற்கு.

"தர்மம்" போடுங்க சாமி என்று
கேட்டவுடன்
அவன் தட்டில் விழுவது
காசுகள் மாத்திரமே.

இல்லாதவனும் திருடுகிறான்.
இருப்பவனும் திருடுகிறான்.
கறுப்புப்பணத்திற்கு வர்ணம் அடித்தால்
அறம் பொருள் இன்பம் வீடு.

பெருமாள் மார்பையே
மணிப்பர்சு  ஆக்கினார்
லெட்சுமியை குடியமர்த்த.

"சொர்க்கவாசல்"பார்க்க‌
கோடி மக்கள் திரண்டனர்.
கோடி ரூபாயில் வைரக்கிரீடம் ஒரு
கோடீஸ்வரர் உபயம்.

ஐம்பொறி இன்பங்களுக்கும்
இன்ப ஊற்று
ரொக்கம் சுரக்கும்
கைகளில் மட்டுமே.

ஆகா! வண்ண வண்ண சீரியல் லைட்
சரங்களோடும் பவனி வருகிறது
சாமி சப்பரத்துக்கும் சமேதரராய்
"உண்டியல் பெட்டி"

"ஜலம்" தெளித்து "தோஷம்" நீக்கினால்
நோட்டுகள் கிழிந்து அல்லவா போகும்?
அழுக்கோடு உக்கிராண அறை சென்றது.
அத்வைதம் "பொருள்" புரிந்தது.


________________________________________________________________________
தொடர்பு: ருத்ரா இ.பரமசிவன் (ruthraasivan@gmail.com)

பேசல் மிஷன்-மங்களூர்——  து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.


முன்னுரை:
    இணையத்தில், வரலாறு, கல்வெட்டு தொடர்பான சில தேடுதல்களின்போது எதிர்பாராமல் சில செய்திகள் ஈர்க்கின்றன. அவ்வாறான ஒரு தேடுதலின்போது மங்களூரில் இருக்கும் ”பேசல் மிஷன்”  (BASEL  MISSION)  பற்றிய ஒரு கட்டுரையைக் கருநாடக வரலாற்றுக் கழகத்தின் தொகுப்பு ஒன்றில் பார்க்க நேரிட்டது. கட்டுரையைப் படிக்கத் தொடங்கியதுமே, ஒரு நாற்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்னால் மனம் பாய்ந்துவிட்டது. மங்களூரின் ”பேசல் மிஷன்”  (BASEL  MISSION) வளாகத்துக்கருகிலேயே நாம் மூன்று ஆண்டுக்காலம் தங்கியிருந்துள்ளோமே என்று ஒரு வியப்புக் கலந்த மகிழ்ச்சி உண்டாயிற்று. ஆனால், மகிழ்ச்சியைக் கடந்து, ஒரு கழிவிரக்க உணர்வு.  வரலாறு பற்றிய இப்போதிருக்கும் ஒரு விழிப்புணர்வும், ஆர்வமும், தேடுதலும் அப்போது இல்லாமல் எத்துணை மடமையோடு இருந்திருக்கிறோம் என்று ஓர் ஏமாற்ற உணர்வு. 

    1970-ஆம் ஆண்டு. கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர் ஒருங்கிணைந்த ‘அஞ்சல்-தொலைத்தொடர்பு’த்துறையில் எழுத்தர் பணியில் சேர்ந்து மங்களூர் சென்ற ஆண்டு அது. பணிக்கு முன்பு, பெங்களூரில் இரண்டு மாதப் பயிற்சியின்போது அறிமுகமான நண்பருடன் மங்களூரில் ‘பல்மட்டா’  (BALMATTA)  என்னும் இடத்தில் வாடகை அறையொன்றில் உறைவிடம். தங்குமிடத்துக்கருகிலேயே ”பேசல் மிஷன்”  (BASEL  MISSION) அமைந்திருந்தது. அன்றாடம், இரவு உணவுக்காகத் தங்குமிடத்திலிருந்து பல்மட்டா கடைத்தெருவுக்குச் செல்லவேண்டும். ”பேசல் மிஷன்”  (BASEL  MISSION) வளாகத்துச் சுற்றுச் சுவரை ஒட்டியிருந்த மண்பாதையில் நடந்து செல்லவேண்டும். ”பேசல் மிஷன்”  என்பது தெரிந்திருந்தது. அது ஓர் இந்திய அமைப்பல்ல; கிறித்தவச் சமயத்தைச் சார்ந்த ஒரு வெளிநாட்டு அமைப்பு என்று தெரிந்திருந்தது. ஆனால், அந்த அமைப்பு எவ்வாறு இயங்குகிறது, என்னென்ன பணிகள் நடைபெறுகின்றன, வளாகத்தின் உள்ளே சென்று அறிந்துகொள்ளவேண்டாமா என்பதான சிந்தனைகள் எழாமலே காலத்தைக் கழித்துவிட்டிருக்கிறோம் என்று இப்போது நினைக்கிறேன்.

    கருநாடக வரலாற்றுக் கழகக் கட்டுரையை முழுதும் படித்தேன். அது கன்னட மொழியில் எழுதப்பட்ட ஒரு கட்டுரை. மங்களூரில் இருந்தபோது மொழிப்புலமை மிகுதியாக ஏற்படாவிடினும், எழுத்துகளின் (லிபிகளின்) மீதான ஓர் ஈர்ப்பு, என்னைக் கன்னட எழுத்துகளைக் கற்கத் தூண்டியது. ஓரளவு பயிற்சியேற்பட்டதும், எழுத்தாளர் சிவராம காரந்த் அவர்கள் கன்னட மொழியில் எழுதியிருந்த “அழித மேலே”,  “மூக்கஜ்ஜிய கனசுகளு”  ஆகிய இரு புதினங்களைப் படித்துக் கதைகளைப் புரிந்துகொண்டேன். (’அழிதமேலே’ என்னும் புதினத்தைச் சித்தலிங்கையா என்பவர் தமிழில் பெயர்த்திருந்தார். அதையும் பின்னாளில் படித்திருக்கிறேன். மூலத்தின் முழு உணர்வையும் தமிழில் மிக இயல்பாக – மொழிபெயர்ப்பு என்னும் எண்ணமே தோன்றாதவகையில் – மிக அழகாகப் படைத்திருந்தார். தலைப்பு ‘அழிந்த பிறகு’.  அருமையான ஒரு புதினம்.. அடுத்த புதினம் ‘மூக்கஜ்ஜிய கனசுகளு’. அஜ்ஜி என்பது பாட்டியைக் குறிக்கும் கன்னடச் சொல்; ’மூக2’  என்பது ஊமையைக் குறிக்கும் சொல். கனசு என்னும் கன்னடச் சொல் கனவு என்னும் தமிழ்ச் சொல்லின் திரிபாதலைக் காணலாம். சிவராம காரந்தரின் எழுத்து நடை அழகானது).

    ஆண்டுகள் நாற்பத்தேழு கடந்துவிட்டதென்றாலும், மங்களூரின் சில நினைவுகள் மறையவில்லை. நாங்கள் தங்கியிருந்த பகுதி பல்மட்டா. எங்கள் அலுவலகம் ஹம்பனகட்டா என்னும் பகுதியில் அமைந்திருந்தது. தங்குமிடத்திலிருந்து அலுவலகம் நோக்கி நடந்து செல்வோம். போகும் வழியில், நகரின் புகழ் பெற்ற மோத்தி மகால் ஓட்டல். புத்தம் புதிய, அகன்ற திரை கொண்ட ”பிளாட்டினம்” என்னும் பெயருடைய திரையரங்கும் வழியிலேயே அமைந்திருந்தது. அடுத்து, மிலாக்ரஸ் (MILAGRES) தேவாலயம். அதன் வளாகத்தை ஒட்டி எங்கள் அலுவலகக் கட்டிடம். தேவாலயத்தாருக்குரியது. எங்கள் அலுவலகம் தவிர வங்கி ஒன்று இயங்கியது என நினைவு. அலுவலகத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் இரயில் நிலையமும், வெண்லாக் (WENLOCK) மருத்துவமனையும். இந்த மருத்துவ மனை 1848-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. கதிரி மஞ்சுநாதர் கோயில் (சமணக்கோயிலாக இருந்த இக்கோயில் சைவக்கோயிலாக மாற்றம் பெற்ற வரலாறு அப்போது தெரிந்திருக்கவில்லை. சமண எச்சங்கள் இன்னும் உள்ளன எனத்தெரிகிறது), மங்கலாதேவி கோயில் (இது கண்ணகிக் கோயில் என்று கருதப்படுகிறது) ஆகிய கோயில்கள் மங்களூரின் சிறப்பு மிகு அடையாளங்கள். ப3ந்தர் (கடலை ஒட்டிய துறை), உள்ளால் கடற்கரை, கலையரங்கக் கட்டிடம், அதன் எதிரே பெரிய திடல் ஆகியன அடிக்கடி சென்றுவந்த ஒரு சில இடங்கள். (கலையரங்கில் புல்லாங்குழல் கலைஞர் மாலி அவர்களின் குழலிசையைக் கேட்க ஆவலுடன் சென்றதும், மேடையில் இசை நிகழ்ச்சி தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே அவருடைய குடிப் பழக்கத்தால் நிகழ்ச்சி நின்றுபோனதும் நினைவில் நின்றவை. அப்போது அவருடன் துணையாக ஒரு வெளிநாட்டுப்பெண்மணி (மனைவி?) யும் இருந்தார்.) திடலில், ஏதோ ஒரு விழாவின்போது கேட்ட, மதுரை சோமு, சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோரின் இசை நிகழ்ச்சிகளும், யக்‌ஷ கானமும் நினைவில் அடக்கம். இன்னொன்றும் உண்டு. திரைப்படம் பற்றியது. தமிழ்த் திரையுலகின் புகழ் பெற்ற இயக்குநர் பாலச்சந்தர் தம் ஆசான் என்று கூறுமளவு பெயர் பெற்ற கன்னட இயக்குநர் புட்டண்ண கணகலின் திரைப்படங்களும், கிரீஷ் கார்நாடின் திரைப்படங்களும். முதன்முதலாகத் துளு மொழியில் எடுக்கப்பட்ட திரைப்படத்தின் ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பை நேரில் பார்த்த நிகழ்வு. அடடா! ஒளிப்படக் கருவி ஒன்றிருந்திருந்தால் பல ஆவணங்கள் இப்போது கைவசம் இருக்கும். முன்னுரை நீண்டுவிட்டது. நினைவுகளின் தாக்கம்.

பேசல் மிஷன்:
    பேசல், சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு நகரம். பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய இரு நாடுகளின் எல்லையில் ரைன் நதிக்கரையில் அமைந்தது. சுவிஸ் நாட்டின் 23 மண்டலங்கள் அல்லது உள்நாட்டுப் பிரிவுகளுள் (CANTON) ஒன்றின் தலை நகர். வணிகம், கல்வி ஆகியவற்றின் மையம். 1815-ஆம் ஆண்டு. நெப்போலியனின் காலம். இரஷ்யாவுக்கும், பிரான்சுக்கும் இடையிலான போர் தொடர்பான அச்சம் எப்போதும் நிலவிக்கொண்டிருந்த சூழ்நிலை. பேசல் ஊரார் ஒன்றுகூடுகிறார்கள். போரின் தாக்கமின்றி ஊர் காக்கப்படவேண்டும் என்னும் ஒரே வேண்டுதல். வேண்டுதல் நிறைவேறினால் கிறித்தவ இறையியல் பள்ளி ஒன்று (SEMINARY)  நிறுவப்படும். இவ்வாறு, 1816-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-இல் உருவானதுதான் ”ஜெர்மன் இவாஞ்சலிகல் சொசைட்டி”  (GERMAN EVANGELICAL SOCIETY)  என்னும் இறையியல் கழகம். பின்னர், பேசல் மிஷன் எனப்பெயர் மாற்றம் பெற்றது. தொடக்கத்தில், சமயப் பரப்புக்காக ஆப்பிரிக்க நாட்டுக்கு மட்டும் சென்ற பரப்புநர்கள் நாளடைவில் வேறு நாடுகளுக்கும் செல்லத்தொடங்கினர்.

மங்களூரில் பேசல் மிஷன் (1834):
    1834-ஆம் ஆண்டு, ஜான் கிறிஸ்டோஃப் லெஹனர் (JOHN CHRISTOPH LEHNER), கிறிஸ்டோஃப் லியோனார்ட் க்ரெனர் (CHRISTOPH LEONARD GRENER), சாமுவெல் ஹெபிக் (SAMUEL HEBICH) ஆகிய மூவர் கள்ளிக்கோட்டை வழியாக மங்களூர் அடைந்து செயல்படத் தொடங்கினர். கருநாடகத்தின் தென் கன்னடம், தார்வாடா, பிஜாப்பூர் ஆகிய பகுதிகளில் கல்வி, தொழிற்சாலைகள் ஆகிய துறைகளில் தங்கள் பணியைத் தொடங்கினர். மேற்கத்திய கல்வி முறை மதமாற்றத்துக்கு முதன்மையானது என்று கருதி மேற்கத்திய கல்வி முறையில் கருத்தைச் செலுத்தினார்கள். மேலே குறிப்பிட்ட ஹெபிக் என்பார், 1836-ஆம் ஆண்டு நான்கு மாணவர்களைக் கொண்டு ஆங்கிலப்பள்ளி ஒன்றைத் தொடங்கினார். அடுத்த ஆண்டே, மோக்லிங் (MOEGLING) என்பார் தார்வாடாவில் பள்ளியைத் தொடங்கினார். அடுத்தடுத்து, ஹுப்ளி, கடக், கொடகு (குடகு) ஆகிய இடங்களில் “ஆங்கிலோ வெர்னாகுலர் பள்ளி”  என்னும் பெயரில் பள்ளிகள் உருவாயின.

பேசல் மிஷன்


பள்ளிகள்:
    பேசல் மிஷன் உருவாக்கிய பள்ளிகள் வியத்தகு முறையில் விரிவடைந்தன. ஒழுக்கம், தொழிற்கல்வி ஆகிய இரண்டுக்கும் முதன்மை அளிக்கப்பட்டது. 1853-இல் ஏறத்தாழ ஐம்பது தொடக்கப் பள்ளிகள்; எட்டு உயர்நிலைப் பள்ளிகள். மங்களூரில் பெல்மாண்ட் (BELMONT)  என்னும் ஒரு பெரிய மாளிகை கட்டப்பெற்று அங்கு பேசல் மிஷன் இயங்கியது. பெல்மாண்ட் என்னும் பெயர் நாளடைவில் மருவி, மிஷன் இயங்கிய அந்தப்பகுதிக்கு பல்மட்டா (BALMATTA) என்னும் பெயர் நிலைத்துவிட்டது. அங்கே பெல்மாண்ட் சர்ச் என்னும் பெயரில் ஒரு தேவாலயம் 1862-இல் கட்டப்பெற்றது. தொடர்ந்து ஹுப்ளி, தார்வாடா பகுதிகளிலும் தேவாலயங்கள் கட்டப்பெற்றன. பெல்மாண்ட் தேவாலயம் நூறாண்டுகளுக்குப் பின்னர் 1962-இல் அதன் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது.
பெல்மாண்ட் (பல்மட்டா) தேவாலயம்

ஆங்கிலப்பள்ளி


மதமாற்றங்கள்:
    1842-ஆம் ஆண்டு வாக்கில் மதமாற்றங்கள் நிகழ்ந்திருந்தன. அந்த ஆண்டில், ஆனந்தராவ் கௌண்டின்யர் என்னும் பிராமணர் கிறித்துவத்தைத் தழுவினார். அவரைத் தொடர்ந்து பகவந்தராவ் கௌசிக்,  முகுந்தராவ் கௌசிக் ஆகிய இரு பிராமணர்களும் மதம் மாறினர். இதற்குக் காரணமானவர் மோக்லிங் (REV. MOEGLING) என்பாரே. ஆனந்தராவ், குடகுப்பகுதிக்குச் சென்று சமயப்பரப்புப் பணியைக் கைக்கொண்டார். ’ஹொலெய(ர்)’, ’பில்லவர்’  ஆகிய குலத்தவர் மதம் மாறினர். கன்னட மொழியில் ‘ஹொலெயர்’  எனில், தமிழில் ‘பொலெயர்’  என்றாகிறது. தமிழகத்தில் நாம் குறிப்பிடும் புலையரே இவர்கள் என்பதில் ஐயமில்லை. பில்லவர் என்பவர் வில் கொண்டு வேட்டைத் தொழிலில் ஈடுபட்ட வில்லிகள் என்று கன்னடக் கட்டுரை எழுதிய ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.

தொழிற்பயிற்சிகள் (1844):
    மதமாற்றம் பெற்றவர்கள் சமுதாயத்தினரால் புறக்கணிக்கப் பட்டதால் அவர்களின் தற்சார்பு வாழ்க்கைக்கு உதவும் பல்வேறு தொழிற்பயிற்சிகளை மெட்ஸ் (REV. METZ) என்னும் ஜெர்மானியப் பாதிரியார் வழங்கினார். குறிப்பாக நெசவுப்பயிற்சி. இது நடைபெற்றது 1844-ஆம் ஆண்டு.

மங்களூர் ஓடுகள் (1865):
    அடுத்து, ஓடுகள் செய்தல். மங்களூர்ப் பகுதியில் கும்பாரர் என்று வழங்கும் மண்ணாளர்கள் திகரி என்னும் சக்கரத்தைக் கொண்டு கைகளால் உருவாக்கிய நாட்டு ஓடுகளுக்கு மாற்றாக இயந்திரங்கள் கொண்டு ஓடுகள் உருவாக்கும் தொழிற்சாலையை பிளெபாத் (PLEBOT) என்னும் பெயருடைய ஜெர்மன் பாதிரியார்  1865-ஆம் ஆண்டு தோற்றுவித்தார். இவருடைய இயற்பெயர் ஜார்ஜ் பிளெப்ஸ்ட் (GEORGE PLEBST) என்பதாகும். பேசல் மிஷன் ஓட்டுத்தொழிற்சாலை என்னும் பெயரில் அது செயல்படத் தொடங்கியது. (நாட்டு ஓடு என்னும் தமிழ் மொழி வழக்கை அப்படியே கன்னட மொழியில் “நாட ஓடு”  என்று கன்னட ஆய்வாளர் வழங்குவது குறிப்பிடத்தக்கது. பழங்கன்னடச் சொல் தமிழை ஒட்டியே இருந்தது என்பதற்கு இதுவே சான்று. ஓடு என்பதற்குப் பின்னர் வழங்கிய கன்னடச் சொல் ஹென்ச்சு என்பதாகும்).
ஓட்டுத் தொழிற்சாலை - பெயர் முத்திரை


ஓட்டுத் தொழிற்சாலை


மற்றுமொரு தொழிற்சாலை

மங்களூர் ஓடுகள் -  ஒரு தோற்றம்


    நாள்தோறும் பன்னிரண்டு தொழிலாளிகளின் உழைப்பில் ஐந்நூற்று அறுபது ஓடுகள் வெளிவந்தன. இந்த ஓடுகள் ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாயின. பின்னர், ஐம்பத்திரண்டு தொழிற்சாலைகள்; ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள்.

பேசல் மிஷன்-அச்சுத்தொழில் (1841):
    பேசல் மிஷன் பதிப்புத்தொழிலிலும் இறங்கியிருந்தது. 1817-இல் ‘கன்னட மொழியின் இலக்கணம்’  (A GRAMMAR OF THE KARNATA LANGUAGE)  என்னும் பெயரில் கல்கத்தாவிலிருந்து பேசல் மிஷன் பதிப்பித்த நூல் வெளியானது. தொடர்ந்து, கன்னட மொழிக்கான நிகண்டு, இலக்கியம் ஆகிய துறைகளில் நூல்கள் பதிப்புப் பெற்றன. முதன் முதலில் கன்னட மொழியில் கன்னட லிபியில் விவிலியத்தை ஜான் ஹாண்ட்ஸ் (JOHN HANDS) என்பார் நூலாக வெளியிட்டார். இது அப்போதைய மதராசில் ”கமர்ஷியல் பிரெஸ்”  என்னும் அச்சகத்தின் வாயிலாக அச்சேறியது. 1824-இல், ரெவரெண்ட் ரீவ் (REV.REAVE) என்பவரது முயற்சியால் ஆங்கிலம்-கன்னடம் அகரமுதலி பதிப்பிக்கப்பெற்றது. 1840-ஆம் ஆண்டு, பெங்களூரில் வெஸ்லி மிஷனரியைச்  (WESLEY MISSIONARY)  சேர்ந்த காரெட் (GARETTE) என்பார் அரசு அச்சகத்தை நிறுவினார். இதைத் தொடர்ந்து 1841-இல் பேசல் மிஷன் அமைப்பினரும் மங்களூரில் ”ஜெர்மன் இவாஞ்சலிகல் மிஷன் பிரஸ்”  (GERMAN EVANGELICAL  MISSION PRESS)  என்னும் பெயரில் அச்சகம் ஒன்றை நிறுவினார்கள். கன்னட லிபியில் “துளு கீர்த்தனைகள்”  நூலாக வெளிவந்தது. 1843-இல் “மங்களூரு சமாச்சார”  என்னும் இதழ் வெளியாயிற்று. 1859-இல் கொங்கணி மொழியில் கன்னட லிபியில் நூல்கள் வெளியாயின. மற்ற மொழிகளிலும் செய்தித் தாள்கள் வெளியாயின. ஜெர்மன் மிஷனரியைச் சேர்ந்த ரெவ. குண்டர்ட் (REV.GUNDERT) என்னும் மொழியியல் அறிஞர் மலையாளம்-ஆங்கிலம் அகர முதலியை அச்சேற்றினார். அண்மையில் 2016-ஆம் ஆண்டு, பேசல் மிஷன் அச்சகம், 175 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடியுள்ளது.
அச்சகம்

மங்களூரில் அச்சான மலையாளம் - ஆங்கிலம்  அகரமுதலி


முடிவுரை:
    பல்லாயிரம் கற்கள் தொலைவைக் கடந்து கிறித்தவ இறையியல் பரப்பு என்னும் நோக்கத்தில் கருநாடகத்துக்கு வந்த பேசல் மிஷன் அமைப்பு பலவகைப்பட்ட சமுதாயப் பணிகளை ஆற்றிக் கருநாடக வரலாற்றில் நீண்டதொரு இடத்தைக் கொண்டுள்ளது என்பதும் நூற்று எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் நிலைத்து நின்று செயலாற்றியுள்ளது என்பதும் பெருஞ்செயலாகும்.

ஒளிப்படங்கள் : இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை.

________________________________________________________________________
தொடர்பு:
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை (doraisundaram18@gmail.com)
அலைபேசி : 9444939156.

Monday, November 20, 2017

இமையோரத்தில்....——  ருத்ரா இ பரமசிவன்."என்ன நடக்குது இங்கே?"
நாம் இந்த தூசிப்படலங்களில்
இமை விரிக்கிறோம்.
திடீரென்று கருட புராணம்
சிறகடித்துக்கொண்டு பறக்கிறது.
"கும்பி பாகம் கிருமி போஜனம்"
தூள் பறக்கிறது.
குற்றமும் தண்டனையும்
தராசுத்தட்டுகளில்
தட தடக்கிறது.
பாற்கடல் எனும் அரசியல் அமைப்பின்
ஷரத்துக்கள்
கடையப்படுகின்றன.
யார் அசுரர் ? யார் தேவர்?
எதுவும் தெரியவில்லை.
எதுவும் தேறவில்லை.
ஜனநாயகச்  சிவனின்
தொண்டைக்குள் நஞ்சு!
வெளியில் சில அசுரர்கள்
தேவர்களின் மடியில் சில அசுரர்கள்.
கொள்ளை உறிஞ்சலில்
கார்ப்பரேட்டுகளின் கோரைப்பற்கள்
இவர்களின்  எல்லா சந்நிதானங்களிலும்
தரிசனம் தருகின்றன.
அமுத குடம் எனும் ஓட்டுப்பெட்டிக்குள்
இன்னும்
அலையடித்துக்கொண்டிருக்கிறது
பாற்கடல் எனும் போலியான
ஒரு நச்சுக்கடல்.
சிவன் என்ன? அரி என்ன?
ஊழல் சிந்தனையில்
உருண்டு திரண்டு
வரும்
அந்த பொருளாதாரப்பேயாசைகள்
எந்தக்குரல் வளையையும்
நெறிக்காமல் விடுவதில்லை.
சாதி மதங்களின்
சாக்காட்டு சாஸ்திரங்கள்
"ஓட்டு"  சாஸ்திரங்களை
ஓட ஓட விரட்டுகின்றன.
அரசியல் சாசனத்தில்
தனக்கு வேண்டியவாறு
பொந்துகள் ஏற்படுத்திக்கொண்டு
பொல்லாத சாஸ்திரங்கள்
மகுடம் சூட்டி வலம் வருகின்றன.
பணத்தை மட்டும் கருப்பு என்று சொல்லி
அதே கருப்புப்பொருளாதாரத்தை
வெள்ளையடித்து
வெறும் நகப்பூச்சு செய்தாலும்
அந்த கூர்நகங்களில்
சொட்டும் ரத்தம் எங்கும் தெரிகிறது.
தூங்கிக்கிடப்பவர்களே ..இந்த
தூசிக்கடல் தாண்டி
எதிர் நீச்சல் போடுங்கள்.
உங்கள் விடியலுக்கு
இன்னும் எத்தனை எத்தனை
நூற்றாண்டுகள்  வேண்டுமோ  தெரியவில்லை?
திடீரென்று சோம்பல் முறித்து
படுத்துக்கிடக்கும்
மூடத்தனத்தின் இந்த பழம்பாயை
சுருட்டியெறியுங்கள்!
அதோ இமையோரத்தில்
வருடும்
ஒரு புத்தம் புதிய‌
பூங்காலையின் ஒளிக்கீற்றுகள்!________________________________________________________________________
தொடர்பு: ருத்ரா இ.பரமசிவன் (ruthraasivan@gmail.com)

Tuesday, October 31, 2017

கல்லாபுரம் பாறை ஓவியங்கள்


து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர்


வாணவராயர் அறக்கட்டளை வரலாற்று உலா
கோவை-வாணவராயர் அறக்கட்டளை சார்பாக மாதந்தோறும் ஒரு வரலாற்று உலா நிகழ்வு நடைபெற்றுவருகிறது. அவ்வகையில், சென்ற 22-10-2017 ஞாயிறன்று உடுமலைப் பகுதியில் கல்லாபுரம் அருகில் பாறை ஓவியங்களைக் காணச் சென்றிருந்தோம். அண்மையில், பழநியைச் சேர்ந்த நாராயணமூர்த்தி என்னும் ஆய்வாளர் உடுமலைப் பகுதியில் தொன்மையான பாறை ஓவியங்களைக் கண்டறிந்து செய்தி வெளியிட்டிருந்தார். அந்த வரலாற்றுத் தொன்மையை நேரில் பார்த்த பயணம் குறித்த பதிவு இங்கே பகிர்ந்துகொள்ளப்படுகிறது.

பயணம் தொடங்கியது
எங்கள் பயணம் காலையில், கோவையிலிருந்து தொடங்கியது. வெவ்வேறு பணியிலும் தொழிலிலும் இருப்பவர்கள், பணியை நிறைவு செய்தவர்கள், கல்லூரி மாணவர்கள், இல்லத்தரசிகள் எனப் பல்வகை மக்களும் வரலாற்று ஆர்வம் காரணமாகக் கலந்துகொண்டனர். ஏறத்தாழ நாற்பது பேர். கோவையிலிருந்து உடுமலை சென்றதும் அங்கு உடுமலைப்பகுதி ஆய்வாளர் உடுமலை இரவி என்பார் எங்களுடன் இணைந்துகொண்டார். உடுமலையிலிருந்து கல்லாபுரம் செல்லும் சாலையில் பயணம்.

கல்லாபுரம்-வரலாற்றுப் பின்னணி கொண்ட ஊர்
உடுமலைப்பகுதி, பழங் கொங்குநாட்டின் இருபத்து நான்கு நாட்டுப்பிரிவுகளுள் ஒன்றான கரைவழி நாட்டில் அமைந்திருந்தது. உடுமலைக்கு மிக அருகில் இருக்கும் பழநி, கொங்குநாட்டின் வைகாவி நாட்டில் இருந்தது. கரைவழி நாட்டில் கல்லாபுரம் அமைந்திருந்தது. கி.பி. 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கொங்குச் சோழன் விக்கிரம சோழனின் கல்வெட்டில் கரைவழி நாட்டுக் கல்லாபுரமான விக்கிரம சோழ நல்லூர் என்னும் குறிப்பு காணப்பெறுகிறது.

சங்கிராம நல்லூர் சோழேசுவரர் கோயில் கல்வெட்டு (A.R. No.145/1909)
1 ஸ்வஸ்திஸ்ரீ த்ரிபுவநச்சக்ரவத்தி கோநேரிந்
2 மை கொண்டாந் கண்டந் காவநாந சிவபத்த
3 னுக்கு  நம் ஓலை குடுத்தபடியாவது கரைவழி
4 நாட்டுக் கல்லாபுரமான விக்ரமசோழ நல்லூ
5 ரில் நாம் இவனுக்கு இட்ட ..... ஒந்றுக்கு நி
6 லமாவது

13-ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்து இன்று வரை கல்லாபுரம் என்னும் இயற்பெயரைக் கொண்டிருந்த இவ்வூர் 13-ஆம் நூற்றாண்டில் விக்கிரமசோழனின் ஆட்சிக்காலத்தில் அவன் பெயரால் விக்கிரமசோழ நல்லூர் என்னும் சிறப்புப் பெயர் கொண்டிருந்தது என்பதைக் கல்வெட்டு வாயிலாக அறிகிறோம்.

மதகடிப்புதூர்
கல்லாபுரம் சாலையில், தமிழக நீர்வள ஆதாரத்துறை, உலக வங்கி நல்கையின் உதவியுடன் மேற்கொண்ட ”நீர்வள நிலவளத் திட்ட”த்தின் கீழ் வடிநிலப்பணியாகப் பழைய வாய்க்காலைச் சீரமைத்த இராம குளம் வாய்க்கால் குறுக்கிட்ட இடத்தில் பேருந்துப் பயணத்தை நிறுத்தினோம். அது மதகடிப்புதூர் என்னும் பெயருடைய பகுதி. பெயருக்கேற்றவாறு, அந்த இடத்தில் வாய்க்காலில் ஒரு மதகு கட்டியிருந்தார்கள். அருகே, வயலில் ஒரு பகுதியில் நெற்பயிரின் நாற்றங்காலில் சிலர் வேலை செய்துகொண்டிருந்தனர். மதகுக்கு அருகில் இரண்டு சிறுமிகளும் ஒரு சிறுவனும் வயல் நீரில் நண்டு பிடிக்கும் விளையாட்டில் களிப்புற்று ஈடுபட்டிருந்தனர். ஆவல் மேலிட அவர்களை அழைத்து நண்டைக் காட்டச் சொல்லி, அவர்கள் காட்ட, அதைப்பார்த்து அச்சிறார்களின் களிப்பில் நானும் பங்கு கொண்டேன். பசுமை வயல்களின் பக்கம் சென்று பல நாளாயின. பள்ளிப் பருவத்தில், புக்கொளியூர் அவினாசியில் சுந்தரர் முதலைவாய்ப் பிள்ளையை மீட்ட தாமரைக்குளத்தில் மீன் பிடித்த நிகழ்வு, நினைவுக் களத்தில் (நினைவுக்குளத்தில் என்றும் சொல்லலாம்) மேலெழுந்ததைத் தடுக்க இயலவில்லை. அங்கிருந்த முதிய உழவர் ஒருவர், இங்குக் காணும் மதகு நடுமதகு என்றும் இன்னும் இரு மதகுகள்  இப்பகுதியில் இருப்பதாகவும் சொன்னார். வாய்க்காலும், மதகுகளும் சேர்ந்து மதகடிப்புதூர் என்னும் பெயருக்குச் சான்று பகர்ந்தன. பகலுணவை இந்த வாய்க்கால் கரையில் அமர்ந்து உண்டுவிட்டு, ஓவியங்கள் இருக்கும் மலைப்பாறை நோக்கிப் பயணமானோம்.
இராம குளம் வாய்க்கால்

நாற்றங்கால்

நண்டு பிடிக்கும் சிறார்கள்

குகைத்தளம் நோக்கி
மதகடிப்புதூர் வாய்க்காலிலிருந்து கிளைத்துச் செல்லும் மண்பாதையில் (இட்டேரிப் பாதை என்றும் கூறுவதுண்டு) சிறிது நேரம் நடந்து சென்றோம். வழியில், ஆங்காங்கே அவரைச் செடிகள் பயிரிட்டிருந்தார்கள். இட்டேரியின் முடிவில், கருவேல மரங்கள் அடர்ந்த ஒரு தொகுப்பு காணப்பட்டது. வனச் சூழ்நிலையை நினைவூட்டியது. அதைக்கடந்ததும் பாதை ஒற்றையடிப்பாதையாக மாற்றம் பெற்றது. அதனூடே சற்று நேரம் நடந்த பின்னர் பாதையின் வடிவம் மறைந்து, காலடியில் பாறைக்கற்களும், பக்கப் பகுதிகளில் கள்ளி போன்ற சிறு மரங்களும் காணப்பட்டன. ஆங்காங்கே, சரிந்த பாறைப்பரப்புகள். கால்கள் இடறி விடாமல் கண்ணும் கருத்துமாக அடியெடுத்து வைக்கவேண்டிய சூழ்நிலை. சில இடங்களில் நம்மைக் குனிந்து கையூன்ற வைக்கும் பாறைச் சரிவுகள்; பாறை இடுக்குகள். அரை மணிக்கூறு இவ்வாறான பயணம். முடிவில் குகைத் தளத்தை அடைந்தோம்.
              
குகைத் தளம் நோக்கி -  பயணக்காட்சிகள்

குகைத்தளமும் ஓவியங்களும்
குகை, ஒரு விரிந்த குடையின் பாதி வடிவத்தில், கடல் பரப்பில் ஒரு நீண்ட அலை தலை உயர்த்திக் கரைநோக்கிக் கவிந்து வரும் தோற்றத்தில் காணப்பட்டது. நீண்ட குகை. மேற்பரப்பில் ஆங்காங்கே சில தேன் கூடுகளும், குருவிக்கூடுகளும். குருவிக்கூட்டினுள் குருவிக்குஞ்சுகளை உண்ணும் நோக்கத்தில் பாம்புகள் வந்துபோனதன் அடையாளமாகப் பாம்புகள் உரித்த சட்டைகள் பறவைக்கூடுகளை ஒட்டித் தொங்கிக்கொண்டிருந்தன. குகையின் கூரைப் பகுதியில் பாறையில் வெள்ளை நிறத்தில் (WHITE OCHRE) வரையப்பட்ட சிறு சிறு ஓவியங்கள் நிறைய இருந்தன.
குகைக் காட்சிகள்

ஓவியம்-1  குழு நடனம்
சிறு வடிவங்களைக் கொண்ட ஓவியங்களுக்கிடையில், அனைத்து ஓவியங்களுக்கும் தலையாகக் காணப்பட்டது ஒரு பேரோவியம். மற்ற சிறு ஓவியங்களில் இல்லாத ஒரு அழகும் நேர்த்தியும் இந்த ஓவியத்தில் இருந்தன. ஓவியத்தில் பதினேழு மனித உருவங்கள். ஒரு விலங்குருவம். நமது பார்வையில், வலப்பக்கம் காணப்படும் மனித உருவங்கள் பதினொன்று. அவற்றில் எட்டு உருவங்கள் பெரியவர்கள்; மூவர் சிறார்கள்; இடப்பக்கம் காணப்படும் மனித உருவங்கள் ஆறு. இவர்கள் அனைவர்க்கும் நடுவில் ஓர் ஆட்டின் உருவம் வரையப்பட்டுள்ளது. ஆணும் பெண்ணுமாகக் கலந்திருக்கும் இவ்வுருவங்கள் கைகோத்து ஆடிக்கொண்டிருக்கின்றன. பயண ஏற்பாட்டாளரான தொல்லியல் ஆய்வாளர் இரா.ஜெகதீசன் அவர்கள், இந்த ஓவியம் ஒரு வழிபாட்டு நிகழ்வைக் குறிக்கிறது என்றார். வழிபாட்டுக்கான சடங்கில் ஆடு பலியிடப்பெறுகிறது. மக்கள் குழுவாக நடனமாடுகிறார்கள். அருமையானதோர் ஓவியம். இரா.ஜெகதீசன் அவர்கள் குறிப்பிடும்போது, "சங்க இலக்கியங்களில் வேலன் வெறியாடல் போன்ற வழிபாடு கூறப்பட்டுள்ளது. வெற்றியின் காரணமாக எல்லாரும் சேர்ந்து ஆடுகின்ற ஆட்டம் இங்கே குகை ஓவியமாகியுள்ளது. கரூரில் கொங்கர்கள் ஆடும் ஆட்டம் பற்றிய குறிப்பு சங்க இலக்கியத்தில் உள்ளது. அது போலவே, இறை வழிபாட்டு மரபில் மனிதரைப் பலியிட்டு வழிபடும் மரபும், பகைவரைப் பலியிட்டு வழிபடும் மரபும் இருந்துள்ளன. பின்னாளில், மனிதரின் இடத்தில் தாம் வளர்க்கும் கால்நடைகளைப் பலியிட்டுள்ளார்கள். இது காட்டுப்பகுதியாக இருந்தபோது, கால்நடை தொடர்பான போர் அல்லது வேட்டை ஆகிய நிகழ்வுகளில் தமக்குத் தேவையானவை கிடைக்கவேண்டும் என்னும் வேண்டுதலுக்காகப் பலி கொடுத்தல் நடைபெற்றிருக்கக்கூடும். அந்த வகையில், இங்கே குழு நடன ஓவியத்தில் ஆடு காட்டப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.


ஓவியம்-1  குழு நடனம்
சிறு வடிவங்களைக் கொண்ட ஓவியங்களுக்கிடையில், அனைத்து ஓவியங்களுக்கும் தலையாகக் காணப்பட்டது ஒரு பேரோவியம். மற்ற சிறு ஓவியங்களில் இல்லாத ஒரு அழகும் நேர்த்தியும் இந்த ஓவியத்தில் இருந்தன. ஓவியத்தில் பதினேழு மனித உருவங்கள். ஒரு விலங்குருவம். நமது பார்வையில், வலப்பக்கம் காணப்படும் மனித உருவங்கள் பதினொன்று. அவற்றில் எட்டு உருவங்கள் பெரியவர்கள்; மூவர் சிறார்கள்; இடப்பக்கம் காணப்படும் மனித உருவங்கள் ஆறு. இவர்கள் அனைவர்க்கும் நடுவில் ஓர் ஆட்டின் உருவம் வரையப்பட்டுள்ளது. ஆணும் பெண்ணுமாகக் கலந்திருக்கும் இவ்வுருவங்கள் கைகோத்து ஆடிக்கொண்டிருக்கின்றன. பயண ஏற்பாட்டாளரான தொல்லியல் ஆய்வாளர் இரா.ஜெகதீசன் அவர்கள், இந்த ஓவியம் ஒரு வழிபாட்டு நிகழ்வைக் குறிக்கிறது என்றார். வழிபாட்டுக்கான சடங்கில் ஆடு பலியிடப்பெறுகிறது. மக்கள் குழுவாக நடனமாடுகிறார்கள். அருமையானதோர் ஓவியம். இரா.ஜெகதீசன் அவர்கள் குறிப்பிடும்போது, "சங்க இலக்கியங்களில் வேலன் வெறியாடல் போன்ற வழிபாடு கூறப்பட்டுள்ளது. வெற்றியின் காரணமாக எல்லாரும் சேர்ந்து ஆடுகின்ற ஆட்டம் இங்கே குகை ஓவியமாகியுள்ளது. கரூரில் கொங்கர்கள் ஆடும் ஆட்டம் பற்றிய குறிப்பு சங்க இலக்கியத்தில் உள்ளது. அது போலவே, இறை வழிபாட்டு மரபில் மனிதரைப் பலியிட்டு வழிபடும் மரபும், பகைவரைப் பலியிட்டு வழிபடும் மரபும் இருந்துள்ளன. பின்னாளில், மனிதரின் இடத்தில் தாம் வளர்க்கும் கால்நடைகளைப் பலியிட்டுள்ளார்கள். இது காட்டுப்பகுதியாக இருந்தபோது, கால்நடை தொடர்பான போர் அல்லது வேட்டை ஆகிய நிகழ்வுகளில் தமக்குத் தேவையானவை கிடைக்கவேண்டும் என்னும் வேண்டுதலுக்காகப் பலி கொடுத்தல் நடைபெற்றிருக்கக்கூடும். அந்த வகையில், இங்கே குழு நடன ஓவியத்தில் ஆடு காட்டப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.
ஓவியம்-1:  குழு நடனம்

குழு நடனம் - ஓவியத்தின் இடப்புறம்

குழு நடனம் -   ஓவியத்தின் வலப்புறம்

குழு நடனம் - மையத்தில் ஆடு
ஓவியம்-2: சதிக்கை
மற்றொரு ஓவியத்தில், பெரியதாக ஒரு கை மட்டும் வரையப்பட்டுள்ளது. கை, பெண்ணின் கையைக் – குறிப்பாக வளைக்கை – குறிப்பதாகும். கை என்பது சதிக்கல் வகையைச் சார்ந்த நடுகற்களில் காணப்படும் ஒன்று. வீரக்கை என்று தொல்லியலில் குறிப்பிடுகிறார்கள். உடன் கட்டை ஏறிய பெண்டிரை வழிபடும் செயலைக் குறிக்க காட்டப்படுவது கையாகும்.  இங்குள்ள சதிக்கை உருவம் உடன்கட்டை ஏறிய பெண்ணின் வழிபாட்டிடத்தைக் குறிக்கலாம். குழு நடன ஓவியத்தை இந்தப் பெண்ணைத் தெய்வமாக வழிபடும் காட்சியாகக் கருதலாம்.
 சதிக்கை ஓவியம்
படம்-உதவி ஆதிரை சின்னசாமி (முக நூல்)
  
ஓவியம்-3: போர்க்காட்சி
போர் வீரன் ஒருவன் வில்லெடுத்து வேறொருவன் மீது அம்பு எய்வதுபோல் ஓர் ஓவியம் காணப்படுகிறது. மற்றவன் குதிரைமீது இருப்பதாகக் கருதலாம். முதல் வீரனின் உருவத்துக்குக் கீழே இன்னொரு வீரனும் வில் கொண்டு தாக்குவது போல் வரையப்பட்டுள்ளது.


ஓவியம்-4: வழிபாடு
ஓர் ஓவியத்தில், ஒரு கட்டம் வரையப்பட்டு அதனுள் குதிரை மீதமர்ந்த வீரனின் உருவம் காட்டப்பட்டுள்ளது. இக்கட்டத்துக்கு மேற்புறம், பெரிய உருவம் ஒன்று வரையப்பட்டுள்ளது. இது கடவுள் வழிபாட்டைக் குறிப்பதாகலாம். மனித உருவத்தைவிடப் பெரிதாக ஓர் உருவம் வரையப்படுவது தெய்வ உருவத்தைக் குறிக்கவே. பெரிதாக இருக்கும் உருவங்களில் யானையின் உருவமும் காணப்படுகிறது. இப்பகுதி ஆனை மலையின் அருகில் இருப்பதைக் கருதிப்பார்க்கலாம். இக்குகை ஓவியங்களைக் கண்டறிந்த நாராயணமூர்த்தி அவர்கள் பழநிக்கருகில் உள்ள ஆண்டிப்பட்டி மலை என்று குறிப்பிட்டதால், பலரும் இக்குகையின் இருப்பிடத்தைச் சரியாகக் கண்டறிந்து ஓவியங்களைக் காண இயலவில்லை.

ஓவியம்-4 வழிபாடு


உடுமலையைச் சேர்ந்த தென்கொங்கு சதாசிவம் என்னும் ஆய்வாளர், பெரிதும் முயன்று இக்குகையின் இருப்பிடத்தைக் கண்டதால், கோவைக் குழுவினர் மேற்படி பாறை ஓவியங்களைக் கண்டு மகிழும் வாய்ப்பு ஏற்பட்டது.

சில ஓவியங்களை இனம் காண இயலவில்லை. இவ்வோவியங்களைத் தொல்லியல் துறையினர் முறையாக ஆய்ந்து இவற்றின் விளக்கங்களையும், இவற்றின் காலத்தையும் வெளிக்கொணரும் வரலாற்றுச் செய்திகளை எதிர்பார்த்து நிற்போம்.

நாயக்கர் கால வாய்க்கால் பாலம்

பாறை ஓவியங்களைப் பார்த்து முடிந்ததும் கல்லாபுரத்தைக் கடந்து திருமூர்த்திமலை அணைப்பகுதியில் காட்சிக்கு வைத்திருக்கும் தளி பாளையக்காரர்களின் நினைவுக் கற்சிற்பங்களைக் காணப்புறப்பட்டோம். கல்லாபுரம் இந்தப்பகுதியிலேயே மிகச் செழிப்பான பகுதி. நீர்வளத்தால் நெல்வளம் பெருகும் நிலங்கள். வழியில் உழவோட்டும் அழகான காட்சிகள். அருகிலேயே, நீண்ட பாலம் போன்ற கட்டுமானம் ஒன்று காணப்பட்டது. ஆனால் அது பாலம் அன்று. நீரை எடுத்துச் செல்லும் ஒரு வாய்க்கால் தரைமட்டத்திலிருந்து உயர்த்தப்பட்டு அமைக்கப்பட்டிருந்தது. கல்லாபுரத்தின் அந்த இடத்தில் தரைவழிச் செல்லும் வாய்க்கால், தாழ்வான பகுதியைக் கடந்து செல்வதற்காகத் தரை மட்டத்திலிருந்து உயர்த்தி எழுப்பப்பட்டு மீண்டும் கிடை மட்டத்தில் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. உடுமலை ஆய்வாளர் இரவி அவர்கள், இந்த வாய்க்கால் கட்டுமானம் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நாயக்கர் காலத்தில் கட்டப்பெற்றது என்னும் செய்தியைச் சொன்னார்.


நாயக்கர் கால வாய்க்கால் பாலம்

தளி பாளையப்பட்டு-நினைவுச் சிற்பங்கள்
அடுத்து நாங்கள் திருமூர்த்திமலை அணைக்குச் சென்றோம். அணை கட்டியபோது சுற்றும் இருந்த சில கிராமங்களில் தளி பாளையக்காரர்களின் வரலாற்று எச்சங்களாகத் திகழ்ந்த நினைவுச் சிற்பங்களை இங்கே பாதுகாப்பாக ஒரு மேடையில் பதித்து வைத்துள்ளனர். காண்பதற்கு அருமையானவை.

படம் உதவி ராஜா ராமசாமி (முகநூல்)

தூக்குமரத்தோட்டக் கல்வெட்டும் எத்தலப்ப நாயக்கரும்
அடுத்து நாங்கள் சென்ற இடம் தளியில் இருக்கும் தூக்குமரத்தோட்டம். ஜல்லிப்பட்டிக்கும் தளிக்கும் இடையில் அமைந்துள்ளது இந்தத் தூக்குமரத்தோட்டம். இங்குள்ள ஒரு கல்வெட்டு தனிச் சிறப்புப் பெற்றது. ஆங்கிலேயன் ஒருவனைத் தளி பாளையப்பட்டின் எத்தலப்ப நாயக்கர் தூக்கிலிட்ட இடம் என்று கருதப்படுகிற இடத்தில் இருக்கும் கல்வெட்டு. தளி என்னும் ஊர், வரலாற்றுச் சிறப்புடைய ஓர் ஊராகும். பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ஆங்கிலேயருக்கு எதிராக அப்போதிருந்த பாளையக்காரர்கள் போரிட்டார்கள். பாஞ்சாலங்குறிச்சியை ஆண்டுவந்த கட்டபொம்மன், வஞ்சனையால் ஆங்கிலேயரால் 16-10-1799 அன்று தூக்கிலிடப்பட்டான். அவன் தம்பி ஊமைத்துரை மற்ற பாளையக்காரர்களோடு சேர்ந்து வெள்ளையரை எதிர்த்துப் போரிட்டபோது தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்ப நாயக்கரும் சேர்ந்துகொண்டார். 1801-ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ஆம் நாள் தொடங்கி நூற்று நான்கு நாள்கள் நடைபெற்ற போரில் ஊமைத்துரைக்கு ஆதரவாக 14 பாளையக்காரர்களை ஒன்றிணைத்து அதற்குத் தலைமையேற்றவர் இந்த எத்தலப்ப நாயக்கர், எத்தலப்ப நாயக்கரை அடக்குவதற்காக அப்போதைய ஆங்கிலேய அரசு தந்திரமாக ஒரு தூதுக்குழுவை அவரைச் சந்திக்க அனுப்பிவைத்தது. கட்டபொம்மனின் நண்பரான எத்தலப்ப நாயக்கர், கட்டபொம்மனைச் சதியால் தூக்கிலிட்டதற்கு எதிர்வினையாகத் தனது படை வீரர்களை அனுப்பி ஆங்கிலத் தூதுக்குழுத் தலைவனை மட்டும் தனியே கைது செய்து அவனைத் தூக்கிலிட்டார்.

வெள்ளையர் இந்தியரைத் தூக்கிலிடும் செயலுக்கிடையில், இந்தியர் ஒருவர் வெள்ளையனைத் தூக்கிலிட்ட துணிவான அருஞ்செயல புரிந்தவர் என்னும் பெருமை எத்தலப்ப நாயக்கருக்கு உண்டு.  


கல்வெட்டுச் செய்தி
கல்வெட்டு தனியார் ஒருவரின் தோட்டத்தில் அமைந்துள்ளது. சிலுவைக்கல் ஒன்று நின்ற நிலையிலும், அதன்கீழ், கல்வெட்டு பொறிக்கப்பெற்ற ஒரு கற்பலகை தரையில் கிடத்தப்பெற்ற நிலையிலும் காணப்படுகின்றன. கோவை பூ.சா.கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்வெட்டியல் பட்டயப்படிப்புப் பொறுப்பாசிரியர் மற்றும் இணைப்பேராசிரியர் ச.இரவி  அவர்கள் இக்கல்வெட்டைப் படித்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அவர் கூற்றிலிருந்து :

“திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டத்திற்குட்பட்ட கிராமம் தளியில்  ஆங்கிலேயர் ஒருவரைத் தூக்கிலிட்டதற்கு ஆதாரமாகக் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. அதனைப் படிக்க முயற்சித்த போது அது ‘அந்திரை கெதி’ அல்லது ‘எங்கிரை கெதி’ என்னும் ஆங்கிலேயரின் அடக்கம் செய்யப்பட்ட சமாதி எனக் கண்டறியப்பட்டது.”

நாங்கள் நேரில் பார்த்தபோது கல்வெட்டின் பாடம் பின்வருமாறு காணப்பட்டது.

கல்வெட்டின் பாடம்:
                                I N ( R I )
1         1801 வரு. (ஆபுரி)ல் மீ 23
2         உ வியாழ கிழமை வரை
3         க்கும் செல்லா நென்ற
4         துன்முகி வரு. சித்திரை மீ (..)
5         3 உ தஞ்சை நகரத்தி
6         லிருந்த அந்திரை கெதிஷ்
7         பறங்கி யிருபத்தேழு வ
8         யதில் தெய்விகமாகி அ
9         டங்கின சமாது + I H S


கல்வெட்டின் உச்சியில் I N R I  என்று எழுதப்பட்டுள்ளது.  இது Jesus Nazarenus Rex Judaeorum என்னும் இலத்தீன் மொழித் தொடரின் குறுக்க வடிவம். ஆங்கிலத்தில் “J” என்பது இலத்தீனில் “I”  என்பதாக அமையும். இதன் பொருள் ”நாசரேத்தின் இயேசு யூதர்களின் அரசர்” என்பதாகும். வட சொல்லின் “ஜ”  ஒலிப்பு, தமிழ் மொழியில் ”ய”  என்பதாக ஒலிப்பதைக் கருதிப்பார்க்க. தமிழுக்கும் இலத்தீனுக்கும் இடையில் ஓர் ஒற்றுமை. அரசு என்னும் தமிழ்ச் சொல் அரைசு என்று திரிதலை விளக்கும் தமிழறிஞர் தேவநேயப்பாவாணர், இந்தச் சொல்தான் இலத்தீன் மொழிக்குச் சென்று “ரெக்ஸ்”  எனத்திரிந்து வழங்குவதாகக் குறிப்பிடுவார். கல்வெட்டின் இறுதியில் ஒரு சிலுவைக்குறியும் அதைத் தொடர்ந்து I H S என்னும் எழுத்துகளும் காணப்படுகின்றன. இது Iesus Hominum Salvator என்னும் இலத்தீன் மொழித் தொடரின் குறுக்க வடிவம். ஆங்கிலத்தில் “J”  என்பது இலத்தீனில் “I”  என்பதாக அமையும் என்பதை முன்னரே கண்டோம். இதன் பொருள் ”மாந்த இனத்தைக் காக்கும் இயேசு”  என்பதாகும்.

கல்வெட்டு கூறும் செய்திகள்

கி.பி. 1801-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ஆம் நாள் (தமிழாண்டு துன்முகி, சித்திரை மாதம்) தஞ்சையைச் சேர்ந்த பறங்கி அந்திரை கெதிஷ் (Andre Katie/Andrew Katie) என்பவன் (இருபத்தேழு வயதினன்) இறந்துபட்ட (தெய்விகமாகி அடங்கின) சமாதி இது என்னும் செய்தி கல்வெட்டு வாயிலாக அறியப்படுகிறது. கல்வெட்டில் தூக்கிலிடப்பட்டதாகவோ, தூக்கிலிட்டவர் எத்தலப்ப நாயக்கர் என்ற குறிப்போ இல்லை. எனவே, ஆங்கிலேயரைத் தூக்கிலிட்டதற்கு இக்கல்வெட்டு ஆதாரம் என்று கூறவியலாது. செவி வழிச் செய்திகள், ஆங்கிலேயன் தூக்கிலிடப்பட்டான் என்பதாகவும், தூக்கிலிட்டவர் எத்தலப்ப நாயக்கர் என்பதாகவும் அமைகின்றன. இதை உறுதிப்படுத்த வேறு சான்றுகள் – எடுத்துக்காட்டாக, மெக்கன்சி ஆவணங்கள் போன்றவை -  தேவைப்படுகின்றன. இந்த நிலையில், ஆய்வாளர் உடுமலை இரவி அவர்கள், கல்வெட்டுள்ள இந்த இடம் (தூக்குமரத்தோட்டம்) எத்தலப்ப நாயக்கர் தூக்கிலிடப்பட்ட இடமாகும் என்றொரு கருத்தைச் சொன்னார். இந்தச் செய்திக்கும் தகுந்த சான்றுகள் தேவைப்படுகின்றன. வரலாற்றுப் பேராசிரியர் கோவை இளங்கோவன் அவர்கள் மற்றொரு கருத்தை முன்வைக்கிறார். 1799-இல் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டபின்னர், 1801-1802 காலகட்டத்தில்  ஆங்கிலேய அரசுக்கெதிராக ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதில், பாளையக்காரர்கள், மருது பாண்டியர், கட்டபொம்மனின் சந்ததிகள், திப்புவின் சந்ததிகள், ஆங்கிலேய அரசுக்குப் பகை நாடான பிரஞ்சு அரசு ஆகியோர் ஒன்றிணைந்து எதிர்க்கிறார்கள். அந்த வகையில், தளி பாளையப்பட்டுக்கு உதவிய பிரஞ்சுக்காரர் ஒருவர் இறந்ததற்காக இந்தச் சமாதியும் கல்வெட்டும் எழுப்பப்பட்டிருக்கலாம். வரலாற்றுப் பேராசிரியரின் இக்கருத்து ஆய்வு நோக்கில் கருதற்பாலது. கல்வெட்டு ஆங்கிலேயர் வைத்திருந்தால் ஆங்கிலத்தில் இருந்திருக்கவேண்டும். தமிழில் கல்வெட்டு அமைவதால் இளங்கோவன் அவர்களின் கருத்து முன்னிலை பெறுகிறது. இறந்து போன பறங்கியின் பெயரான கெதிஷ் என்பது பிரஞ்சுப் பெயர்போலத் தோற்றமளிக்கிறது. இப்பெயர், பிரஞ்சுப்பெயர்தானா என்ற ஐயம் நீக்கப்படல்வேண்டும்.
 
எத்தலப்ப நாயக்கரின் வரலாறு-நாட்டார் புனைவுகள்?

 

1988-ஆம் ஆண்டு, தளியைச் சேர்ந்த சுந்தரசாமிக் கவுண்டர் என்பவர், “கீர்த்தி வீரன் எத்தலப்பன் வரலாறு”  என்னும் தலைப்பில் நூல் வெளியிட்டுள்ளார். அதில், தளியில் திருமூர்த்தி மலைச் சாரலில், சரக்கூட ஆசிரமம் ஒன்றை 1970களில் அமைத்துத் துறவு வாழ்க்கை மேற்கொண்ட யோகி இராமசாமி அவர்களுக்கு நேர்ந்த ஒரு நிகழ்வினை அடிப்படையாகக் கொண்டு எத்தலப்ப நாயக்கரின் வரலாற்றை எழுதியுள்ளார். எத்தலப்ப நாயக்கனின் மெய்க்காப்பாளன் சின்னையன் என்பவனின் ஆவி, பல இரவுப்போதுகளில்  யோகி அவர்கள் முன்பு தோன்றி எத்தலப்ப நாயக்கன் வரலாற்றைச் சொன்னதாக நூல் விரித்துரைக்கிறது.

ஆங்கிலேயர்கள், தளி பாளையக்காரர் எத்தலப்ப நாயக்கருடன் சமாதானமாகப் போவதென ஒரு சிறு தூதுக்குழுவுடன் தளிக்கருகில் வந்து கோட்டைத்தளபதியிடம் எத்தலப்ப நாயக்கரைக் கண்டு பேசவேண்டும் என்று தூதுத் தகவல் அனுப்பியபோது, நாயக்கர் இதனை ஒரு சதியென நினைத்து வீரர்களை அனுப்பி ஆங்கிலேயத் தூதுவனைப் பிடிக்கச்செய்து தூக்கிலிடச் செய்தார். இதற்கு எதிர்வினையாக ஆங்கிலேயர் தளி மீது இரவு நேரத்தில் பீரங்கித் தாக்குதல் நடத்தினர். எத்தலப்ப நாயக்கரின் தம்பியும், அரண்மனைப் பெண்டிர் அனைவரும் இறந்துபடுகின்றனர். எத்தலப்ப நாயக்கர் தாம் வணங்கும் ஜக்கம்மா சிலையருகில் இருக்கும் சுரங்கப்பாதை வழியே வெளியேறித் தன்னுணர்வின்றி திருமூர்த்திமலை மேல் சென்றார். அங்கு அவரைக்கண்ட முதுவர் குடியினர், அவர் கைகாட்டியதிசையில் அவரை  அகத்தியம்பாறை என்னுமிடதில் விட்டு அகன்றனர். அவரைத் தேடி அலைந்த மெய்க்காப்பாளன் சின்னையனுக்கு எத்தலப்ப நாயக்கரின் குரலில் ”தெற்கே மலைக்குப்போகிறேன் வந்து சேர்” என்னும் ஒலி கேட்டது. முதுவர் உதவியுடன் அகத்தியம் பாறை சென்ற சின்னையன், நாயக்கர் அங்கு உயிரோடு வீடுபேறுற்றார் என உணர்ந்தான். கனத்த குட்டையான, நீண்ட தாடியுடைய ஒரு முனிவர் சின்னையனை எதிர்கொண்டு, “நீ இன்னும் இருநூறு ஆண்டுகள் தூல உடலில் இருந்து இறைவனடி சேர்வாய்” என்று சொன்னதால் ஆவி வடிவில் யோகி இராமசாமியைச் சந்தித்து எத்தலப்ப நாயக்கரின் வரலாற்றைச் சொன்னதாக நூல் விரிகிறது.

ஆனால், தளி பாளையப்பட்டின் வரலாறும், எத்தலப்ப நாயக்கரின் வரலாறும் இன்னும் முற்றாகச் சான்றுகளோடு  நிறுவப்படவில்லை என்றே கருதவேண்டியுள்ளது.
________________________________________________________________________
தொடர்பு:
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை (doraisundaram18@gmail.com)
அலைபேசி : 9444939156.Monday, October 30, 2017

மறக்க இயலாத மாமன்னர் இராசராசன்!

——அண்ணாமலை சுகுமாரன்


 இன்று சதயத்திருநாள் !
மாமன்னர் இராசராசனின் 1032வது சதய விழா !!
மாமன்னர் இராசராசன்  அவதரித்தநாள் !!!

சதயம் என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 24 ஆவது பிரிவு ஆகும். அது ஒரு பெருமைபெறுகிறது இராசராசன் அதில் பிறந்ததால்.

இந்தியவரலாறு  குப்தர்களையும்,மௌரியர்களையும்  விஜயநகர அரசர்களைப் பற்றிச் சொல்லுமளவிற்கு  ராஜராஜ சோழனைப் பற்றியோ, தமிழரசர்களைப் பற்றியோ அதிகம் சொல்வதில்லை. ஆதாரங்கள் என்னமோ கொட்டிக்கிடக்கிறது.

தமிழில் பொருள் காண முடியாத சொற்களில் "சோழ" என்பதும் ஒன்றாகும். 'நீர் சூழ்நாடு' என்பது நாளடைவில் 'சூழநாடு', பிறகு சோழநாடு என மாறியிருக்கலாமோ என்று தோன்றுகிறது. மிகப் பழமையானது சோழநாடு. இதனைப் பற்றிய குறிப்புகள் மகாபாரதத்திலும் அசோகரது கல்வெட்டிலும் கூடக் காணப்படுகிறது.சூரிய குலத்தவர் என்று தங்களை அழைத்துக் கொண்ட சோழர்கள் சங்க காலத்திலேயே (கி.மு. 2ம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி. 2ம் நூற்றாண்டு வரை) வாழ்ந்திருந்தாலும் அந்தக் காலகட்டத்தின் முடிவில் தென்னாட்டு வரலாற்றிலிருந்தே காணாமல் போய்விட்டிருக்கிறார்கள். ஆயினும் சங்கம் வளர்த்த இந்த இனத்தவர் குறுநில மன்னர்களாக உறையூர், பழையாறை போன்ற பழைய தலைநகரங்களிலே தொடர்ந்து வாழ்ந்தனர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன.  சிபி, முசுகுந்தன், மனு, செம்பியன் என்று புராணங்களில் அவர்களின் மரபு இடம் பெற்றிருக்கிறது. அதனால் தான் வரலாற்றில் இருந்து அவர்கள் விடுபட்டார்களா என்று தெரியவில்லை .

இராசராச சோழன் சோழர்களின் புகழ் பெற்ற மன்னர்களுள் மிக முக்கியமானவர் ஆவார். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1012 வரையாகும்.

இராசராச சோழனின் முப்பதாண்டு ஆட்சிக்காலமே சோழப் பேரரசின் வரலாற்றில் மிக முக்கியமாக விளங்கியது.  ஆட்சி முறை, இராணுவம், நுண்கலை, கட்டடக்கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்ட சோழப்பேரரசின் கொள்கைகளை இவனுடைய ஆட்சியில் உருப்பெற்றவையே ஆகும்.

அவரது பிறந்த நாள்  - 943 ஐப்பசி சதயம் நட்சத்திரம் (கி.பி. 943) என்று பேராசிரியர் சி. கோவிந்தராசனார் மற்றும் முனைவர் சி. கோ.தெய்வநாயகம் எழுதிய சோழர் வரலாறு (பக்கம் 102) எனும் நூல் குறிப்பிடுகிறது. (உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுச் சிறப்பு வெளியீடு) மேலும் வேறுபட்ட கருத்துக்களும் சில உண்டு.

இராசராசன் சித்திரைத் திங்கள் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர் என மன்னரது திருப்புகலூர் கல்வெட்டும் முதலாம் இராசேந்திர சோழரின் எண்ணாயிரம் கல்வெட்டும் செப்புவதாக முனைவர் சூ. சுவாமிநாதன் (கல்வெட்டாய்வாளர் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறை மைசூர்) கல்லெழுத்தில் காலச்சுவடுகள் (பக்கம் 38, 39) என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

இராசராசன் வரலாற்றில் பெற்றிருந்த சிறப்பை அவரது சிறப்புப் பெயர்கள் - 42 குறிப்பிடுகின்றன .
  1. இராசகண்டியன்
  2. இராசசர்வக்ஞன்
  3. இராசராசன்
  4. இராசகேசரிவர்மன்
  5. இராசாச்ரயன்
  6. இராசமார்த்தாண்டன்
  7. இராசேந்திரசிம்மன்
  8. இராசவிநோதன்
  9. இரணமுகபீமன்
10. இரவிகுலமாணிக்கன்
11. இரவிவம்சசிகாமணி
12. அபயகுலசேகரன்
13. அருள்மொழி
14. அரிதுர்க்கலங்கன்
15. பெரியபெருமாள்
16. அழகியசோழன்
17. மும்முடிச்சோழன்
18. பண்டிதசோழன்
19. நிகரிலிசோழன்
20. திருமுறைகண்டசோழன்
21. செயங்கொண்டசோழன்
22. உத்தமசோழன்
23. மூர்த்தவிக்கரமாபரணன்
24. உத்துங்கதுங்கன்
25. உய்யக்கொண்டான்
26. உலகளந்தான்
27. தெலிங்ககுலகாலன்
28. கேரளாந்தகன்
29. மூர்த்தவிக்கரமாபரணன்
30. சோழேந்திரசிம்மன்
31. சோழநாராயணன்
32. சோழகுலசுந்தரன்
33. சோழமார்த்தாண்டன்
34. பாண்டியகுலாசனி
35. சிவபாதசேகரன்
36. சிங்களாந்தகன்
37. சத்துருபுஜங்கன்
38. சண்டபராக்ரமன்
39. ஜனநாதன்
40. சத்திரியசிகாமணி
41. கீர்த்திபராக்கிரமன்
42. தைலகுலகாலன்

அரியனை அமர்ந்தநாள் - ஆடி மாதம் 22ம் நாள் 985வது வருடம் 18/07/985
ஆட்சி ஏற்ற வயது - 42ம் வயது
தஞ்சை பெரியகோயில் கட்டியது - ஆட்சியாண்டு 25, 275ம் நாள் சனிக்கிழமை
குடமுழுக்கு  செய்த நாள் - 22/04/1010 (புனர்பூச நட்சத்திரத்தில்)
இறந்த நாள் - 17/01/1014 (ஆட்சியாண்டு 29, மார்கழி மாதம் பூர்வபட்சம் சதூர்த்தசி திதி)  
வாழ்ந்த கால வயது - 71 ஆண்டுகள்

தஞ்சை பெரியகோயில் என்றும் ஒரு அதிசயமாகும்.  யுனெஸ்கோவின் உலக பாரம் பரிய நினைவுச்சின்னங்கள் பட்டியலில் இக்கோயில் இடம் பெற்றுள்ளது.  உலக அளவில் இதன் கட்டிடக் கலை சிறப்பை வியக்காத வல்லுநர்களே கிடையாது. இராசராச சோழன் சிவபெருமானுக்கு ஆத்மார்த்தமாகக் கட்டிய (கி.பி.985 - 1012) அரும்பெரும் ஆலயம் இது.  இங்குள்ள மூலவர் பிரம்மாண்டமானவர், 13 அடி உயரம் உடையவர். ஆவுடை மட்டும் 54 அடி சுற்றளவு உடையது. மேல் பாணத்தின் சுற்றளவு மட்டும் 23 அடி. இவ்வளவு பெரிய லிங்கம் வேறு எங்கும் இல்லை.  அம்பாள் 9 அடி உயரம் உள்ளவர். இந்த லிங்கம், மத்தியபிரதேச மாநிலம், நர்மதா நதிக்கரையிலுள்ள ஒரு மலையிலிருந்து கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. எனப்படுகிறது.

முதலாம் இராசராசன் மூன்று வித மெய்க்கீர்த்திகளைக் கையாண்டாலும் 'திருமகள் போல' என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியையே எட்டாம் ஆண்டிலிருந்து பெரும் அளவில் பயன்படுத்தப்பட்டது. இவ்வகை மெய்க்கீர்த்தி இவனது ஆட்சியில் நடைபெற்ற முதற்போரைக் குறிக்கும் வகையில், 'காந்தளூர்ச்சாலை கலமறுத்த' என்ற பட்டத்தைக் குறிப்பிடுகிறது.

ஸ்வஸ்திஸ்ரீ  திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் களமறூத்தருளி வேங்கை நாடும் கங்கைபாடியும் நுளம்பபாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றி தண்டால் கொண்டதன் பொழில் வளர் ஊழியுள் எல்லா யாண்டிலும் தொழுதகை விளங்கும் யாண்டே செழிஞரை தேசுகொள் ஸ்ரீகோவிராஜராஜகேசரி பந்மரான ஸ்ரீராஜராஜ தேவர்.

எத்தனை அழகாகத் தனது வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை வரிசைப்படுத்தியிருக்கிறார் பாருங்கள். இன்னமும் தமிழர்கள் வரலாற்று அறிவு இல்லாதவர்கள் என்று பழி சுமத்தப்படுகிறது. பதிவுகள் என்னமோ மிகவும் உண்டு ஆனால் சரிவர ஆராயப்படவில்லை.

மாமன்னர் இராசராசன் ஆண்ட காலத்தில் நடைமுறையில் இருந்த வரிகள் சில சோழர் காலத்தில் மக்களுக்கு இடப்பட்ட வரிகள். மக்களின் தேவைகள், மகேசனின் தேவைகள் இவற்றை  நிறைவேற்ற அரசுக்குப் பொருள் வேண்டாமா? இதோ அரசின் வருவாய்க்கான வரிகள்:
1. அங்காடிப் பட்டம்
2. இடப்பாட்டம்
3. இலைக் கூலம்
4. இரவுவரி
5. இறை
6. ஈழம்
7. உல்கு
8. ஊரிடுவரி
9. எச்சோறு
10. ஏரிப்பாட்டம்
11. ஓடக்கூலி
12. கண்ணாலக்காணம்
13. காவேரிக்கரை வினியோகம்
14. குசக்காணம்
15. குடிமை
16. சபாவினியோகம்
17. சித்தாயம்
18. சில்லிறை
19. சில்வரி
20. செக்கிறை
21. தட்டார்ப் பாட்டம்
22. தரகு
23. தறியிறை
24. நாடுகாவல்
25. நீர்க்கூலி
26. பாடிகாவல்
27. பூட்சி
28. போர்வரி
29. மரமஞ்சாடி
30. மரவிறை
31. மனை இறை
32. மீன் பாட்டம்
33. வண்ணாரப்பாறை

கடல் கடந்து வாணிகத்திலும் ஆதிக்கத்திலும் கோலோச்சிய சோழர்கள் நீர்ப்போக்குவரத்திலும் சிறந்து விளங்கினர். இதோ கி.பி. 9 - 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சேந்தன் திவாகரம் என்னும் நூல் குறிப்பிடும் கப்பலின் பெயர்கள்:
1. வங்கம்
2. பாடை
3. தோணி
4. யானம்
5. தங்கு
6. மதலை
7. திமில்
8. பாறு
9. அம்பி
10. பாரி
11. சதா
12. பாரதி
13. நௌ
14. போதன்
15. தொள்ளை
16. நாவாய்

இவரின் பெருமைக்கு இன்னமும் பல சிறப்புச்செய்திகள் வரலாற்றில் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால் முக்கிய ஒன்றைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. அது ஒரு அறிவியல் அற்புதம் ! சோழநாட்டின் நிலம் அனைத்தையும் துல்லியமாக அளக்கவும், அவற்றின் தரத்தை நிர்ணயிக்கவும் குரவன் உலகளந்தான் இராசராச மாராயன் என்பவன் தலைமையில் இராசராசன் ஒரு குழு அமைத்தான். இக்குழு தனது பணியைக் குறைவறச் செய்து அரசனின் பாராட்டைப் பெற்றது. நிலத்தை அளக்கப் பயன்படுத்தப்பட்ட பதினாறு சாண் நீளமுடைய கோல் “உலகளந்தான் கோல்” என்றழைக்கப்பட்டது.

எந்தவித சாதனங்களும் கண்டறியாத அந்த காலத்திலேயே நிலத்தை அளந்து தரம் பிரிப்பதென்பது ஒரு அசாதாரண பணி, இதனை மிகவும் சீரிய முறையில் சாதித்த சோழராஜனின் மகுடத்தில் இந்த அரிய பணி ஒரு வைரம்.

உலகளந்தான் கோல் பற்றிய சில விவரங்கள்:
24 விரல் கொண்ட முழம் - கிஷ்கு
25 விரல் கொண்ட முழம் - பிரஜாப மத்தியம்
26 விரல் கொண்ட முழம் - தனுர் முஷ்டி
27 விரல் கொண்ட முழம் - தனுர் கிரஹம்
28 விரல் கொண்ட முழம் - பிராச்யம்
29 விரல் கொண்ட முழம் - வைதேகம்
30 விரல் கொண்ட முழம் - வைபுல்யம்
31 விரல் கொண்ட முழம் - பிரகீர்ணம்
33” ஆங்கில அளவிற்குச் சமமானது கிஷ்கு முழமாகும்.

இத்தனையும் செய்த மாமன்னரின் சிலை இருக்குமிடம் அறிந்தால் வருத்தம் மிகும் .பெரியகோவில் கட்டி முடிக்கப்பட்டவுடன் அதற்கு நிர்வாக அலுவலராக இருந்த ஆதித்தன் தென்னவன் மூவேந்த வேளாளன் என்பவர் இராசராச சோழனுக்கும் அவரது மனைவி லோகமாதேவிக்கும் செம்பில் உருவச் சிலைகள் செய்தார். இராசராச சோழன் உயிருடன் இருக்கும் போதே செய்யப்பட்ட இச்சிலைகள் இப்போது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள கெளதம் சாராபாய் தனியார் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இராசராசசோழன் மறைந்த பிறகு, அவருடைய வெண்கலச்சிலை ஒன்றும் வடிவமைக்கப்பட்டது. அதை, பிரகதீஸ்வரர் வீதி உலா செல்லும்போது முன்னால் எடுத்துச் செல்ல வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார் ராஜேந்திர சோழர். பயபக்தியோடு, கைகூப்பியவாறு இருக்கும் இந்தச் சிலையும் தற்போது வடக்கே சாராபாய் அருங்காட்சியகத்தில்  இருக்கிறது.

இந்த அற்புத வரலாற்று முக்கியம் வாய்ந்த சிலைகளை மத்திய அரசின் உதவியோடு மீண்டும் தமிழக அரசு மீண்டும் தமிழ் மண்ணுக்குக் கொண்டுவந்து தஞ்சைக் கோயிலில் வைக்கவேண்டும்.இதுவே மாமன்னர் இராசராசனுக்கு நாம் செய்யும் நன்றி கூறல் ஆகும்.


அண்ணாமலை சுகுமாரன்
 (30-10-2017)
________________________________________________________________________
தொடர்பு: அண்ணாமலை சுகுமாரன் (amirthamintl@gmail.com)
 

Wednesday, October 25, 2017

நேமி என்ற சொல்லின் பொருள் விளக்கம்


"நிலந்தவ உருட்டிய நேமி யோரும் சமங்கண் கூடித் தாம்வேட் பவ்வே" என்று புறநானூற்றுப் பாடல் ஒன்று  வேந்தரின் ஆட்சிச் சக்கரத்தையும் ; 
"பூண்வனைந் தன்ன பொலஞ்சூட்டு நேமி"  என்று குறுந்தொகைப் பாடலொன்று பொன்னால் ஆகிய விளிம்பை உடையத் தேரின் சக்கரத்தினையும்; 
"பொன் அணி நேமி வலங்கொண்டு ஏந்தி" என்று பரிபாடல் பாடலொன்று திருமால் தனது வலது கையில் ஏந்திய சக்கரத்தையும் குறிக்கும். 

பொதுவாக, நேமி என்பது வட்டவடிவம் கொண்டவற்றைக் குறிப்பதுடன் பூமி, கடல், கணையாழி, சக்கரவாகம் எனும் பறவை, சக்கராயுதனாகிய திருமால், தீர்த்தங்கரர் இருபத்துநால்வருள் ஒருவரான நேமிநாதரையும் குறிக்கவும் பயன் கொள்ளப்படுவதுண்டு.

நேமி என்ற சொல்லின் தோற்றம் அதன் பெயர்ச்சொல், வினைச்சொல் பொருள் குறித்து முனைவர் நா. கணேசன் கொடுக்கும் விளக்கம்தனை இனி காண்போம். 
——————————— 

நேமி
~ முனைவர் நா. கணேசன் ~


முறம் அல்லது சுளகைக் கொண்டு உமி, பதர், கல் போன்றனவற்றைப் பிரிப்பதில் பல வினைகள் உள்ளன. கொழித்தல், புடைத்தல், தெள்ளுதல், நேம்புதல் போன்ற செயல்பாடுகள் அடங்கும் (https://ta.wikipedia.org/wiki/முறம்).
 
புடைத்தல் = அடித்தல்.  புடைத்தல் என்றால் தானிய மணிகளைத் தூக்கி மேலே வீசி, கீழே முறத் தட்டில் வீழுமாறு செய்தல்.  ஒருபுடை புடைத்தான் என்பதுபோன்ற உலகியல் வழக்கங்களை நோக்குக. புடைத்தல் = அடித்தல்.

தெள்ளுதல் = தெறித்தல். பிரிந்த பதடு, சிறுகல், குப்பை போன்றவற்றை வெளியே தெறித்து அகற்றுதல். தெள்ளுதல் = தெறித்தல்.
பொன்னினும் வெள்ளி யானும் பளிங்கினும் புலவன் செய்த
நன்னிறக் கலத்திற் கூர்வா ணட்டென வாக்கிச் சேடி
மின்னனா ரளித்த தேறற் சிறுதுளி விரலிற் றெள்ளித்
துன்னிவீழ் களிவண் டோச்சித் தொண்டையங் கனிவாய் வைப்பார்.
http://www.tamilvu.org/slet/l41d0/l41d0sn3.jsp?x=82
புலவன் செய்த நல் நிறக் கலத்தில் - கம்மப் புலவனாற் செய்யப்பட்ட நல்ல  ஒளியையுடைய கலங்களில், கூர்வாள் நட்டென வாக்கி அளித்த - கூரிய  வாளை நட்டாற்போல வார்த்துக் கொடுத்த, தேறல் - மதுவில், சிறு துளி  விரலில் தெள்ளி - சிறிய துளியை விரலாற்றொட்டுத் தெறித்து, துன்னி வீழ்  களிவண்டு ஓச்சி - நெருங்கி வீழும் மதுமயக்கத்தையுடைய வண்டுகளை  ஓட்டி, கள்ளுண்பார் அதனை விரலாற்றொட்டுப் பூச்சி, வண்டுகளை தெறித்து நீக்கிப் பின் குடித்தலுக்கான  அழகான வர்ணனையைப் பரஞ்சோதி முனிவர் மரபுச்செய்யுளில் பதிந்துள்ளார்.

தெள்ளு- (1) To sift, as grain; கொழித்தல். Colloq. (2). [M. teḷḷuka.] To sift gently in a winnowing fan; புடைத்தல். (3) To waft, as the sea; to cast upon the shore; அலைகொழித்தல். கரிமருப்புத் தெள்ளி நறவந் திசைதிசை பாயும் (திருக்கோ. 128).

நேம்புதல்:  தமிழில் நேம்பு- என்னும் வினைச்சொல் தெலுங்கில் நேமு- எனப்படுகிறது. Ref. MTL. சேந்துகிணற்றில் நேமி மீது கயிற்றை இட்டு குடமோ,வாளியே கீழே செலுத்தி, நீரை மொண்டு மேலே நீர் சேந்துகின்றனர். நீர் இறைக்கும்போது, உருள்நேமி தன் அச்சில் வலம்புரியாகவும், இடம்புரியாகவும் சுழலும். இச் செயல்தான் த்ராவிட மொழிகளில் நேம்புதல்/நேமுதல் என்ற வினைச்சொல் ஆகும் (https://www.youtube.com/watch?v=_afbxTenEzc).

முறத்தில் பெண்கள் தானியம் நேம்பும்போதும், மேல் இருந்து பார்த்தால், சேந்துகிணத்து நேமி போலவே, வலம்புரியாகவும் (clockwise), இடம்புரியாகவும் (anti-clockwise) சற்றெ மாறிமாறிச் சுழற்றுவது காணலாம்.

படம் உதவி- நன்றி: பழமைபேசி


குதிரை பூட்டிய தேர்களின் சக்கரத்தில் நேமி (felloe or felly)


Max Sparreboom, Chariots in the Veda, 1985, E. J. Brill, Leiden
pg. 130
"The spoked chariot-wheel consisted of a felloe (nemi) with a rim (pavi), with spokes (ara) fitted in holes of the nave (naabhi) and it was secured in its place by a linch-pin (aaNi)."

தியானத்தில் ஆழ்ந்த தீர்த்தங்கரர்களுக்குக் கல்வெட்டுகளில் முதலில் ஆழ்வார் என்று பெயர். ஆழ்-தல் “to sink" > ஆணி (=lynch pin) என்னும் தமிழ்ச் சொல் வேதத்தில் இருக்கிறது. ஆர், அர- = தண்டு. தாமரைத்தண்டு = ஆர், அர-. தாமரைத்தண்டின் மேல் பூ விரிகிறது. அர-விரிந்த > அரவிந்த. எனவே, இவுளிச் சாரட்டுகளில் ஆணி போலவே, அர ‘spoke' தொல்தமிழ் என்க. நேம்பு-/நேமு- வினைச்சொல் (உ-ம்: ) தானியத்தை நேம்புவதும், அதே போல கிணற்றில் நேமியின் செயல்பாடும் பார்த்தோம். எனவே தான், நேமி = framework for well-rope (pulley).

குவி/குமி, சவரி/சமரி(=கவரி/கமரி, சாமரை), கோமணம்/கோவணம், உமணர்/உவளம், கமலை/கவலை (ஏற்றத்தின் சால்) ... போல நேம்பு-/நேமு- > நேவு- > நாவுதல் (அ) நாம்புதல் என்றும் வழங்குகிறது.

”உமியும் தவிடும் நீக்கிய பின்னர் சுளகின் அடிப்பாகத்தில் தங்கியிருக்கும் அரிசியை இடதுபக்கமுள்ள இன்னொரு சாக்கில் தட்டுவார்கள். பட் பட்-என்று சுளகைத் தட்டி அனைத்து அரிசியையும் ஒன்று சேர்த்து மிக லாவகமாக அவர்கள் சாக்கில் கொட்டும் அழகே தனி. இப்படியே அடுத்தடுத்து குற்றப்பட்ட அரிசி-உமிக் கலவையை எடுத்து, உமி தவிடு நீக்கி அரிசியை எல்லாம் தனியே சேர்த்துவைப்பார்கள்.
இதற்குள் நெல்குத்திய அக்காமார் தம் வேலையை முடித்து, முந்தானையால் முகத்தை அழுத்தித் துடைத்துக்கொண்டே அத்தை பக்கத்தில் வந்து அமர்வார்கள். அவர்களுக்குச் செம்பு நிறைய தண்ணீர் கொண்டுவந்துகொடுப்பார் அம்மா. இருவரும் மடக் மடக்-என்று குடித்துச் செம்பைக் காலிசெய்வர். “அடுத்து என்ன செய்ய” என்றும் கேட்பர். “நான் பொடச்சுப்போட்ட அரிசிய நல்லா நேம்பி வையி. ஒத்தக் கல்லு இருக்கக்கூடாது" என்று ஒரு அக்காவிடம் அத்தை கூறுவார். அடுத்தவரிடம், “நீ அவ நேம்பிக்கொடுக்கறதக் கொழிச்சுப்போடு” என்பார். அப்பப்ப நாவிக்க. எல்லாக் குருணையையும் அந்தச் சட்டியில கொட்டிவையி. பொடிக்குருணை கோழிக்கு ஆகும். என்பார். நேம்புதல், கொழித்தல், நாவுதல் எல்லாம் சுளகைக் கையாளுவதில் வெவ்வேறு வழிகள். அரிசியினின்றும் கல்லைப் பிரித்தெடுக்க, குருணை எனப்படும் குறு நொய்யைத் தனியே பிரிக்க என்று பல்வேறு முறைகள். இறுதியில் மணிமணியாக முழு அரிசி ஒரு பக்கம், குருணை ஒருபக்கம், கல்லும் கழிவும் ஒருபக்கம், தவிடு ஒரு பக்கம், உமி ஒரு பக்கம் என அந்தப் பகுதியே நிறைந்துவிடும்.” (பேரா. ப. பாண்டியராஜா, 3/31/2015).

நேம்- என்ற தாதுவில் இருந்து நேமு-/நேம்பு- என்றும், நேமி என்ற பெயர்ச்சொல்லும் தோன்றியுள்ளன.

எழுத்தோசைகளை உருவாக்குவதற்காக நாக்கு அலைகொழித்துக் கொண்டிருக்கும் வாயுறுப்பு. ஆதாவது, நேவிக்கொண்டே/நேமிக்கொண்டே > நாவிக்கொண்டே இருக்கும் நாவு.
நவ்வி என்றால் மான், முக்கியமாகப் பெண் மான். ஏனெனில், தன் இனநிரைக்கு ஆபத்து வருகிறதோ என தலையைத் தூக்கி நேம்பிக்கொண்டே/நாவிக்கொண்டே அங்குமிங்கும் பார்த்துக்கொண்டு புல்மேயும் பண்பினதால், நவ்வி என்பது பண்பாகுபெயர். (கோவை:கொவ்வைக்காய், ... போல, நாவிக்கொண்டிருப்பது நவ்வி. எப்பொழுதும் வெளியே தெரியுமாறு நாவு(நாக்கு) இருப்பதால் நாய் (நாஇ - தொல்காப்பியம்) என்கிறோம். நாயாட்டு என்றால் வேட்டையாடல்.

ஆகவே, நேமி என்பது வட்டவடிவில் சுழலும் பண்பை, சுழலும் தன்மை கொண்டவற்றைக் குறிப்பதாகக்  கொள்ளலாம்.________________________________________________________________________
தொடர்பு: முனைவர் நா. கணேசன் (naa.ganesan@gmail.com)காட்டைப் பார்

—— பழமைபேசி

வெளியே போ
காட்டைப் பார்
குருவி
கொத்தித்தின்னும்
அழகைப் பார்
கோரைப் புல்லின்
மலரைப் பார்
தடத்தின் குறுக்கேவோடும்
அணிலைப் பார்
தலைக்கு மேலே போகும்
பட்டாம்பூச்சியைப் பார்
வெடித்து
விதைகளைத் துப்பும்
காயைப் பார்
காற்றில் தவழும்
கொடியைப் பார்
போகிறபோக்கில்
புணர்ந்து போகும்
தட்டான் பார்
வேலியில் பூத்திருக்கும்
கள்ளிப்பூவைப் பார்
வெளியின் ஊடாய்
விதையைச் சுமக்கும்
பஞ்சைப் பார்
ஊர்ந்து செல்லும்
கரையான் பார்
கொம்பின் கீழே
தொங்கும் அந்த
கூட்டைப் பார்
தாவிப் போகும்
முயலைப் பார்
கண்டங்கத்திரி
முள்ளைப் பார்
தும்பைச்செடியின்
இலையைப் பார்
மரத்தைக் கொத்தும்
கொண்டைலாத்தி பார்
இன்று இருக்கும்
நாளை இருக்காது
வெளியே போ
காட்டைப் பார்
காட்டைப் பார்

 
________________________________________________________________________
தொடர்பு: பழமைபேசி (pazamaipesi@gmail.com)