Thursday, October 31, 2013

தீபாவளி (கவிதை) - பார்வதி இராமச்சந்திரன்

தீபாவளி!

வானம் அதிர வெடி வகைகள்!
வண்ணப் பூ பொழி வாணங்கள்!
வீசும் காற்றிலும் சிரிப்பலைகள்!
வந்து விட்டதே தீபாவளி!

மின்னுது மின்னுது மத்தாப்பு!
பொங்குது குழந்தையின் புன்சிரிப்பு
பொங்கி எழுந்தொளிரும் பூவாளி
பொலிவாய் வந்தது தீபாவளி!

எண்ணைக் குளியல் புத்தாடை
உண்ண வகையாய் சிற்றுண்டி
எண்ணம் முழுதும்  இன்பமயம்
இகமெல்லாம் மகிழும் தீபாவளி!!!

விருந்தினர் வந்திடும் வேளையிலே
நிறைந்திடும் உவகை மனதினிலே
வெடியாய் அதிருது சிரிப்பொலி பார்!!
வெல்லமாய் இனிக்குது தீபாவளி!!

இந்த நாளில் நலம் நிறைய‌
எளியோர் வாழ்விலும் வளம் பெருக‌
என் மனம் உள்ளதை நான் சொல்வேன்
இதை நீ கேட்பாய் என் தோழி!!

உம்மால் முடிந்த பொருள் தன்னை
உருகும் வறியோர் மடி சேர்த்து
உயர்த்திடும் நாளில் உலகுயரும்
உன்னத தினமே தீபாவளி!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

No comments:

Post a Comment