Wednesday, June 25, 2014

"இயல் திரிந்தும்" "இயல் திரியா"மலும் வாழ்பவர்கள்

-செ.அ.வீரபாண்டியன்-


பழந்தமிழ் இலக்கியங்களை உரையாசிரியர்கள் தரும் விளக்கங்கள் அல்லது அவ்விளக்கங்கங்களின் அடிப்படையில் தமிழில் புலமையுள்ளோர் எழுதிய புத்தகங்கள் மூலம் மட்டுமே அணுகுபவர்களாகவே தமிழார்வளர்களில் பெரும்பாலோர் இருக்கின்றனர்.

ஆனால் சொற்களால் விவரிக்க முடியாத இன்பத்தை அனுபவிக்க வேண்டுமானால், தமக்கிருக்கும் தமிழறிவு பற்றிய பயமின்றி, ஆர்வத்துடன் கூடிய உழைப்புடன் துணிச்சலாக பழந்தமிழ் இலக்கியங்களில் உள்ள வரிகளை (texts) அணுகலாம். புதையல் தேட தமது பயணத்தைத் தொடங்குபவர்கள், புதையல் வேட்டையின் ஊடேயே வேட்டைக்கான திறமைகளை அடையாளம் கண்டு வளர்த்து இறுதியில் வெற்றியும் பெறுவார்கள். அது போலவே, பழந்தமிழ் இலக்கியங்களிலும் புதையல் தேடி வெற்றி பெற முடியும் என்ற தன்னம்பிக்கையையும் துணிச்சலையும் ஆர்வமுள்ளவர்களுக்கு ஏற்படுத்தும் நோக்கிலான 'அனுபவபூர்வ' கட்டுரை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
(http://www.musicresearch.in/categorydetails.php?imgid=84 )

பழந்தமிழ் இலக்கியங்களில் உள்ள சொற்களின் பொருள் இன்று அதே சொற்களுக்கு உள்ள பொருளுடன் வேறுபட்டிருக்க வாய்ப்புண்டு என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

உதாரணமாக சங்க இலக்கியங்களில் 'கழகம்' என்ற சொல்லுக்கு 'சூதாடும் இடம்' (திருக்குறள் 937) என்பதே பொருளாகும். எனவே திறந்த மனதுடன் ஆர்வத்துடன் ஆராய்ந்தால் உரைகள் வெளிப்படுத்தாத பொருளையும் நம்மால் கண்டுபிடிக்க முடியும் என்பதையும் இணைப்பில் உள்ள கட்டுரை மூலம் புரிந்து கொள்ளலாம். உதாரணமாக 'இன்று இசையில் வரும் 'சுருதி' என்ற பொருளில் சங்க இலக்கியங்களில் 'அத்தம்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதை கண்டுபிடித்த வழிமுறையும் அக்கட்டுரையில் உள்ளது.

அதே போல் இன்றும் எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் உற்சாகமாக நான் ஆராய்ந்து வரும் சொற்கள் 'இயல்பு' , 'இனம்' போன்றவையாகும். தொல்காப்பியம், திருக்குறள் உள்ளிட்டு பழந்தமிழ் இலக்கியங்களில் இந்த சொற்கள் இடம் பெற்றுள்ள பகுதிகள் என்னை மிகவும் ஈர்த்து வரும் பகுதிகளாகும்.

உதாரணமாக 'இயல்பு' என்ற சொல் கீழ்வரும் திருக்குறளில் இடம் பெற்றுள்ளது.
‘ இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை’ -  திருக்குறள் - 47

இல்வாழ்க்கையின் பண்பும் பயனும் பற்றி கீழ்வரும் திருக்குறள் விள‌க்குகிறது.
‘அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
 பண்பும் பயனும் அது’  -திருக்குறள்  - 45

இன்று தமிழ்நாட்டில் குடும்பங்கள் பற்றி எனது அறிவு, அனுபவ அடிப்படையில் என்ன 'பண்பும் பயனும்' உள்ளன என்றும் ஆராய்கிறேன். அப்பா, அம்மா, கணவன்,மனைவி, சகோதரன், சகோதரி, மகன், மகள் உள்ளிட்ட குடும்ப உறவுகளில் எந்த அளவுக்கு 'அன்பும் அறனும்' செல்வாக்கு செலுத்துகிறது என்பதும் அந்த ஆராய்ச்சியில் அடக்கம். 'அன்பும் அறனும்' பலகீனமாகி குடும்ப உறவுகள் உள்ளிட்ட மனித உறவுகளில் 'லாப நட்டம்' பார்த்து பழகும் 'பண்பும்', அதன் மூலம் கிடைக்கும் 'செல்வம், செல்வாக்கு' ஆகிய பயன்களும் தமிழ்நாட்டு 'இல் வாழ்க்கையில்' 'அதிர்ச்சி தரும்' அளவுக்கு அதிகரித்து வருகிறது. அத்தகைய செல்வாக்கிற்கு அடிமைப்பட்டுள்ள மனிதர்களின் 'இயல்பு' எப்படி இருக்கிறது என்பதும் அந்த ஆராய்ச்சியில் அடக்கம்.

திருக்குறள் 45இல் குறிப்பிடப்பட்ட 'பண்பும் பயனும் ’ இன்றுள்ள சமுகத்தில் மேலேக் குறிப்பிட்ட போக்கில் பெற்று வரும் மாற்றத்தை .’இயல் திரிதல்’ என்று தொல்காப்பியம் (எழுத்து 1:10 ) குறிப்பிடும் சொற்களால் விளக்குவதே சரியாக இருக்கும். 

இந்த காலத்திலும் திருக்குறள் 45 குறிப்பிடும் 'அன்பும் அறனும் உடைய‌ இல்வாழ்க்கை' வாழ்பவர்கள் வணங்குதற்குரிய மனித தெய்வங்களே ஆவர். அவர்கள் தொல்காப்பியம் (எழுத்து 1:20)  குறிப்பிடும் சொற்களின்படி, இல்வாழ்க்கைக்கான 'இயல் திரியா' மல் வாழ்பவர்கள் ஆவர்.

 இயல்பில் திரிவது பற்றி விளங்கிக் கொள்ள, ஒரு சொம்பு பாலில் சில துளிகள் தயிர் சேர்ந்தவுடன் பாலின் இயல்பில் தொடங்கும் 'திரிதல்' எவ்வாறு வளர்கிறது என்பது பற்றிய ஆய்வுகள் மிகவும் துணைபுரியும்.

எனக்கு 1960களிலிருந்து இன்று வரை தமிழ்நாட்டில் சமூக அளவில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை கவனிக்கும் வாய்ப்புகள் இருந்தன;இருக்கின்றன. தமிழ்நாட்டுக் குடும்பங்களில் மேலேக் குறிப்பிட்ட 'இல்வாழ்க்கைக்கான இயல்பில்' திரிதல் போக்கில் கவனிக்கத்தக்க அளவுக்கு மாற்றங்கள் 1970களில் துவங்கி, 1980 களில் திரிதல் வேகம் அதிகரித்து, 1990 களில் இன்னும் அதிகமாகி இப்போது உச்சக்கட்டத்தை அடைந்து, அதன் அழிவுப் பயணமும் தொடங்கிவிட்டதற்கான அறிகுறிகளும் வெளிப்படத் தொடங்கிவிட்டன. மத்தியிலும் தனிமனித பலகீனங்கள் உள்ள அரசியல் வாதிகளின் செல்வாக்கில் வளர்ந்து உச்சக்கட்டத்தை, லட்சக்கணக்கான கோடி ஊழல்களில் தொட்டு, அத்தகைய செல்வாக்கிலிருந்து பெருமளவில் விடுப்பட்டவர்களிடம் , ‘புதிய' மத்திய ஆட்சி தொடங்கியுள்ளது. தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் முகப்புத்தகத்தில் 'உணர்வு போதை' போக்கிற்கு எதிராக வெளிப்பட்ட கருத்து, இந்துத்வா தொடர்புள்ள முகப் புத்தகத்தில் பாராட்டுதலுடன்  வெளியாகியுள்ளது. சமூகத்திற்கு கெடுதலான வகையில் இயல்பில் திரிந்தவர்கள் தனிமைப்பட்டு பலகீனமாகும் போக்கும் தொடங்கி விட்டது.

சமுகத்திடமிருந்தும், இயற்கையிடமிருந்தும் அந்நியமாகாமல் பழந்தமிழ் இலக்கியங்களை ஆராய்வதன் ஒரு பலனே மேலே குறிப்பிட்டதாகும்.


கட்டுரை ஆசிரியர்: செ.அ.வீரபாண்டியன் (pannpandi@yahoo.co.in)
http://musicdrvee.blogspot.in/                        
http://musictholkappiam.blogspot.in/

No comments:

Post a Comment