Friday, July 4, 2014

நகல் மனிதர்கள்

- செல்வன்


ஒவ்வொரு மதமும், சமூகமும் ஒரு லட்சிய மனிதனை, உதாரண புருஷனை முன்னிறுத்துகின்றன.அந்த லட்சிய மனிதன் போல் அனைத்து மனிதர்களும் ஆகவேண்டும் என அந்த மதம்/சமூகம் விரும்புகிறது.

பெண்கள் என்று எடுத்துகொண்டால் அவர்கள் பின்பற்ற கண்ணகி,நளாயினி என பல லட்சிய மனுஷிகள் உண்டு. அக்கால சமூகம் உருவாக்கிய பிரதிபிம்பங்கள் அவர்கள். அக்கால சமூகங்கள் அனைத்து பெண்களும் இவர்களின் பிரதிபிம்பங்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்த்தன.

உலகின் அனைத்து மதங்களும் இப்படி லட்சியபுருஷர்களை முன்னிறுத்தி உலகம் முழுவதும் இவர்களை பின்பற்ற வேண்டும் என எதிர்பார்த்தன."இதோ பார் லட்சிய புருஷன்" என ஒரு மனிதனை அவை முன்னிறுத்தின. "இந்த லட்சிய புருஷன் நீ எப்படி வாழவேண்டும் என்பதற்கான முன்னுதாரணம். இவனது நகலாக நீ மாறவேண்டும். அப்படி மாறினால்தான் சமூகம் நிலைக்கும், நீ சொர்க்கத்துக்குபோவாய், இவனைப் போல் நீ ஆகாவிட்டால் நீ அழிந்து போவாய்" என அவை மிரட்டின.

பெயர் வைப்பதிலேயே இந்த நகல் மனப்பான்மை துவங்கிவிடுகிறது. லட்சியபுருஷனின், லட்சிய புருஷியின் பெயரையே பலர் தங்களின் குழந்தைகளுக்கு வைக்கின்றனர்.பிறந்ததிலிருந்து "இவரைப் போல் நீ ஆகவேண்டும்" என அந்தக் குழந்தை உருவேற்றி வளர்க்கப்படுகிறது

இதன் விளைவு என்னவென்றால் ஒரு குறிப்பிட்ட சமூகம் முழுவதும் காலப்போக்கில் பிரதிபிம்பங்களாக மாறிவிடுவதுதான். அந்த சமூக மனிதர்கள் அனைவரும் அந்த லட்சிய புருஷனின் நகல்களாக மாறிவிடுகின்றனர்.

காலங்கள் மாற மாற சில சமூகங்கள் லட்சிய புருஷர்களை மாற்றிக்கொள்கின்றன. சிலவருடங்கள் முன்பு வரை நளாயினி, கண்ணகி போன்றவர்கள் இந்திய பெண்களின் முன்னிறுத்தப்பட்டனர். ஆனால் இப்போது வேறு ரோல்மாடல்கள்.

தன்னை ஒரு நகலாக தனது சமூகம் உருவாக்க முயல்வதை நீட்ஷே கண்டுபிடித்துவிட்டார். ஒரு நகல் மனிதனாக வாழ்வதை அவர் விரும்பவில்லை..

'உடைத்து எறி சமூகம் உருவாக்கிய உன்னை" என்று நீட்ஷே முழங்கினார்."அடுத்தவன் உன் எண்ணங்களை, உனக்கான சிந்தனைகளை, உன் வாழ்க்கையை உருவாக்குவது நீ ஒரு மனிதனாக தோற்று விட்டாய் என்பதன் பொருள்" என்றார் அவர்.

தான் எப்படி சிந்திக்க வேண்டும் என்பதை வேறொருவர் திட்டமிடுவதை அவர் வெறுத்தார். சமுதாயத்தின் பல்வேறு கட்டமைப்புக்களும் தன் வாழ்கை, எண்ணம், சிந்தனை எப்படி இருக்கவேண்டும் என்று நிர்ணயித்து வைத்திருப்பதையும், தான் அது போலவே உருவாகி இருப்பதையும் அவரால் தாங்க முடியவில்லை


கவிதாயானி ப்ளூம் நீட்ஷேயை விஞ்சினார்.அவர் தன் வாழ்வில் மிகப்பெரும் அதிர்ச்சி தன்னைப் போல் பலரைக் கண்டதுதான் என்று எழுதினார். அவர் குறிப்பிட்டது தான் தன் சமூகத்தால் உருவாக்கபட்ட ஒரு ப்ரதிபிம்பம் என்பதைத்தான். தன்னைப் போலவே பல நகல்களை சமூகம் உருவாக்கி இருப்பதையும் அதில் தானும் ஒருத்தி என்பதை அறிந்ததும் தன் வாழ்வில் மிகப்பெரும் அதிர்ச்சியை சந்தித்ததாக ப்ளும் எழுதினார்.(My horror is finding myself to be only a copy or replica). தன் நம்பிக்கைகளை, எண்ணங்களை, விருப்பு வெறுப்புகளை சமூகம் உருவாக்குவதை அந்த கவிதாயினியால் தாங்க முடியவில்லை.


"இந்த உலகம், நான் வாழும் உலகம், நான் உருவாக்கியது அல்ல" என்ற எண்ணமே அவருக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.(The world one lives is an inherited world,A world which one never made) "தான் தன்னை உருவாக்கிக் கொள்வது தனக்குத் தானே பிறப்பளிப்பது" என்றார் ப்ளும்.(Giving birth to oneself)

சுயத்தை இழந்து பழங்கால மனிதர்களின் நகல்களாக தாங்கள் வாழ்வதை இந்த இரு தத்துவ மேதைகளும் விரும்பவில்லை.இவர்கள் இருவரும் நகல்களல்ல. ஒரிஜினல்கள்.






நன்றி: சாரல்,  13 பிப்ரவரி 2006
http://www.nilacharal.com/

No comments:

Post a Comment