Monday, November 17, 2014

முல்லை நிலச் செய்திகளைத் தருபவர் மேகலா!

நம் தமிழர் வாழ்வைப் படம் பிடித்துக் காட்டுபவை சங்க இலக்கியங்கள். மனித வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு புறத்திணை, அகத்திணை என இருவகைத் திணைகள் இவ்விலக்கியங்களில் சுட்டப்படுகின்றன. இவற்றில் புறத்திணை என்பது வாழ்வின் புறத்தே நிகழ்பவையான வீரம், போர், கொடை உள்ளிட்ட செய்திகளைப் பேசுவது; அகத்திணை என்பது பெயருக்கேற்றபடி அகத்தே – மனத்தே நிகழும் (பிறருக்குப் புறத்தே புலப்படுத்த இயலாத) காதலொழுக்கத்தைப் பேசுவது.

தமிழரின் மூத்த இலக்கண நூலான ’ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்’ புறத்திணையை ’வெட்சி முதல் பாடாண் இறுவாய்’ ஏழு திணைகளாகவும், அகத்திணையைக் “கைக்கிளை முதல் பெருந்திணை ஈறாய்” ஏழாகவும் வகைப்படுத்தியுள்ளது. இவ்வகத்திணையில் ’நடுவண் ஐந்திணை’ என்று சிறப்பித்துச் சொல்லப்படுபவை நாம் நன்கறிந்த முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை ஆகியன.

சங்க இலக்கியப் பாடல்களைக் கற்குங்கால் இவை அகத்திணைச் செய்திகளையே பெரிதும் பாடியிருப்பது புலப்படும். நம் தமிழர்கள் காதலொழுக்கத்திற்குத் தந்த முதன்மையையே இது எடுத்துக்காட்டுகின்றது எனலாம்.

ஐந்திணைகள் ஒவ்வொன்றையும் வி(வ)ரிக்கப் புகுந்தால் செய்திகள் மிகும். ஆகவே அவற்றுள் தலைசிறந்த ஒன்றாகக் கருதப்படும் முல்லைத் திணையை மட்டும் நாம் இங்கு ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம்.

’நடுவண் ஐந்திணை’ என்றும் ’அன்பின் ஐந்திணை’ என்றும் சிறப்பு அடையொடு குறிக்கப்படும் ஐந்திணைகளின் வரிசையை நோக்கினால் அதில் முதலிடத்தில் வைத்து எண்ணப்படுவது முல்லைத் திணையே என்பது தெரியவரும். இதற்கு உரையாசிரியர்கள் கூறும் காரணம் யாதெனின், ’கற்பு நெறி பிறழாது மகளிர் இல்லில் ஆற்றியிருந்து நல்லறஞ் செய்தலே ஒழுக்கங்களில் தலைசிறந்தது; ஆகவே ஆசிரியர் (தொல்காப்பியர்) முல்லைத் திணையை முதலில் வைத்தார்’ என்பதாகும்.

தொல்காப்பிய நூற்பாவும் “மாயோன் மேய காடுறை உலகமும்” (மாயோனை/திருமாலைத் தலைவனாகக் கொண்ட காடுறை உலகமும்) என்றே தொடங்குவது சிந்திக்கதக்கது. முல்லை நிலமென்பது காடும், காடு சார்ந்த பகுதியும் ஆகும். முல்லைத் திணைக்குரிய காலமாகக் குறிக்கப்படுவன காரும் (கார்காலமும்), மாலையும் (மாலைப் பொழுதும்). காடுறை உலகமாகிய முல்லை நிலத்தில் முல்லை, காயா, குருந்தம், தோன்றி, குல்லை, பிடவம் எனக் கணக்கிலடங்கா மலர்கள் மலர்ந்தபோதினும் அவை யாவற்றுள்ளும் ’முல்லை’ மலரே சிறந்ததெனக் கருதப்பட்டதாகலின் அப்பூவின் பெயரே அதுசார்ந்த நிலத்திற்கும் வழங்கு பெயராயிற்று.

அகவொழுக்கத்தில், ஆற்றியிருத்தல், புணர்தல், ஊடல், இரங்கல், பிரிதல் என்பன முறையே முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை ஆகியவற்றின் உரிப்பொருள்களாகச் (ஒழுக்க நெறிகளாக) சுட்டப்படுகின்றன. இவ்வொழுக்கங்களில் மனத்திண்மையும், மனக்கட்டுப்பாடும் அதிகம் தேவைப்படுவது கணவனைப் பிரிந்து தனித்து ஆற்றியிருக்கும் (தன்னை ஆறுதல்படுத்தியிருக்கும்) காலத்தும் கற்புநெறி பிறழாது வாழ்ந்துவரும் முல்லை நிலப் பெண்ணுக்கே என்று தமிழ்ப்பெருமக்கள் எண்ணினர்.

கணவனைப் போர் நிமித்தமாகவோ அல்லது பொருள் தேடுதற் பொருட்டோ பிரிந்து ’அவன் எப்போது திரும்பி வருவான்?’ என்றெண்ணி ஏக்கத்துடன் அவன் வரும் வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கும் ஓர் இளம்பெண்ணின் அவலநிலை மிகவும் வருந்தத்தக்கது.

இவ்வேளையில், “ஏன்..மற்ற நிலப் பெண்கள் கற்புநெறியைப் பின்பற்றவில்லையா…முல்லைநிலப் பெண்ணுக்கு மட்டும் என்ன முதன்மை?” என்றொரு வினா எழக்கூடும். கற்புநெறியைப் பின்பற்றுவதில் பிறநிலப் பெண்களும் குறைந்தவர்களில்லைதான்; கற்பு என்பது பெண்களுக்கான பொது அறமாகவே அன்று வகுக்கப்பட்டிருந்தது; எனினும், கற்புநெறி கால்கோள்(தொடக்கம்) கொண்டது - வேரூன்றியது முல்லை நிலத்திலேயே என்பது தமிழறிஞர்களின் துணிபு. ஆகையால், கற்புநெறி ’முல்லை சான்ற கற்பு’ என்றே பெருமிதத்தோடு அழைக்கப்பட்டது. இந்நிலத்தில் மலர்ந்த தூய்மையும், மணமும் மிகுந்த முல்லை மலரோடும் அந்நெறி பி(இ)ணைக்கப்பட்டு முல்லை மலரும் கற்பின் அடையாளமாக இலக்கியங்களில் பாராட்டப்பெற்றது.

தலைவனின் வரவுக்காகக் காத்திருந்து அவன் வரக்காணோமே என்று ஏங்கித் தன்னருமைத் தோழியிடம் புலம்பும் முல்லை நிலத் தலைவியின் மனநிலையைப் படம்பிடித்துக்காட்டுகிறார் ’ஒக்கூர் மாசாத்தியார்’ எனும் புலவர் குறுந்தொகைப் பாடலொன்றில். அப்பாடல்...

”இளமை பாரார் வள நசைஇச் சென்றோர்
இவணும் வாரார் எவணரோ எனப்
பெயல்புறந் தந்த பூங்கொடி முல்லைத்
தொகுமுகை இலங்கெயிறு ஆக
நகுமே தோழி நறுந்தண் காரே.” (ஒக்கூர் மாசாத்தியார்: குறுந் - 126)

”என்னுடைய இளமையை நினையாது பொருளே பெரிதெனச் சென்ற தலைவர் இன்னும் திரும்பி வரவில்லை; அவர் எங்குள்ளார் எனவும் நானறியேன். இதனைக் கண்டு, ”கார்காலத்தில் திரும்பி வந்துவிடுவேன்!” என்று வாக்குக்கொடுத்த உன் தலைவர் பொய்த்துவிட்டார் பார்! என முல்லை மொட்டுக்களையே தன் ஒளி பொருந்திய பற்களாகக் கொண்டு இந்தக் கார்காலம் என்னை எள்ளி நகையாடுகின்றது” என்கிறாள் தலைவனைப் பிரிந்து ஆற்றியிருக்கும் முல்லைத் தலைவி தன் தோழியிடம்.


முல்லைக்கும் கற்புநெறிக்குமுள்ள இலக்கியப் பின்னணியை இதுகாறும் கண்டோம். இனி, அதன் குமுகப் பின்னணியையும் ஆராய்வோம்.


மனித சமூகத்தின் தொடக்ககால வாழ்விடமாக இருந்தது மலைகளும், குகைகளுமே. எனவே, குறிஞ்சி நிலமக்களே உலகின் ஆதிகுடிகள்; மக்கள்தொகை பெருகப் பெருக அவர்கள் மெல்ல மெல்லப் புலம்பெயர்ந்து  காட்டுப் பகுதிகளில் குடியேறத் தொடங்கினர். அங்குதான் மனித நாகரிகத்தின் இரண்டாம் படிநிலை ஆரம்பமாயிற்று.

மலையைவிடக் காட்டுப்பகுதி வளம் நிறைந்ததாயிருந்தது. வேட்டையாடிக்கொண்டு நாடோடியாய் அலைந்துகொண்டிருந்த மாந்தக் கூட்டம் காட்டுப் பகுதிகளில் நிலையான குடியிருப்புக்களில் வாழத் தொடங்கியது; அதற்குள்ளாகவே மனிதர்கள் விலங்குகளை வளர்க்கப் பழகியிருந்தனர். எனவே முல்லைநிலப் பகுதிகளில் அவர்கள் ஆநிரைகளையும், ஆடுகளையும் அதிக எண்ணிக்கையில் வளர்க்கத் தொடங்கினர். ’ஆயர்கள்’ எனும் பெயரோடு அவர்கள் அடையாளப்படுத்தப்பட்டது அங்குதான்!

பசுக்கூட்டங்களை வளர்ப்பது, அவற்றினால் கிடைக்கும் பால்படு பொருள்களைப் பிறருக்கு விற்பது என்று ஆரம்பித்துச் செல்வ வளம் மிக்கதாய் அவர்கள் வாழ்க்கை மாறத் தொடங்கியது; ’மாடு’ என்றாலே ’செல்வம்’ என்ற பொருள் இதனால்தான் ஏற்பட்டது. திருவள்ளுவரும் ’மாடல்ல மற்றையவை’ எனச் செல்வத்தைக் குறிப்பது எண்ணத்தக்கது. ஏராளமான சொத்துக்களையுடைய ஆண்மகன் ‘கோன்’ எனும் பெயரோடு தலைவன் எனும் அதிகாரத்தைப் பெற்றான். இப்படியாகத் தந்தைவழிச் சமூகம் சிறிது சிறிதாகத் தலையெடுக்க ஆரம்பித்தது.

காதல் மணம், சடங்குகளற்ற மணமுறை முதலியவற்றிலும் சிறிது சிறிதாக மாற்றம் ஏற்பட்டு இன்று நாம் பின்பற்றுகின்ற ‘கற்பு மணமுறை’யும் இங்குதான் தொடக்கம் பெற்றது. முல்லை நிலத்தில் ஏறு தழுவுதலில் வெற்றிபெறும் காளைக்கே (ஆண்மகனுக்கே) தன் மகளைத் தருவான் முல்லை நிலத் தகப்பன்! ’கொல்லேற்றுக் கோடஞ்சுவானை  மறுமையும் புல்லாளே ஆய மகள்’ என்கிறது முல்லைக்கலி. பாவம் ஆண்கள்! :-)))

கற்பு மணத்தில் ஒருவனையே மணந்து அவ்வொருவனுக்காகவே வாழ்தல் என்று தொடங்கிய பெண்களின் வாழ்க்கைநிலை பின்பு, அவன் பிரிவின்போது அவனுக்காகத் காத்திருத்தல், அவன் இறந்தவிட்டானாயின் அவனோடு தானும் உடன்கட்டை ஏறுதல் அல்லது கைம்மை நோன்பு நோற்றல் என்று அடுத்தடுத்த படிநிலைகளுக்குச் சென்றிருக்கவேண்டும். L

ஆகவே பெண்களுக்கு இன்றும் வலியுறுத்தப்படும் கற்புநெறி அன்று காலூன்றியது முல்லை நிலத்திலேயே எனக் கொள்வதில் தவறில்லையல்லவா? இதனால்தான் ’முல்லை மாந்தர் கற்புடை மாந்தர்’ என்ற தனிப் பெருமையும் அவர்களுக்கே அளிக்கப்பட்டது. இவ்வாறு முல்லையும் கற்பும் இரண்டறக் கலந்த ஒழுக்கநெறியாய் அறியப்படுகின்றது.

முல்லை நில வாழ்க்கை முறையை, அதன் சிறப்பைக் கற்பனை கலந்து (சற்றே மிகைப்படுத்திச்) சித்தரிக்கும் ’முல்லைப் பாடல்கள்”  (’Pastoral Poetry’) மேல்நாட்டு இலக்கியங்களிலும் உண்டு.

அன்புடன்,
மேகலா

1 comment: