Monday, February 9, 2015

அண்ணமார்சாமி கதை

அண்ணமார்சாமி கதை

நம் ஊரில் அண்ணமார் சாமி எனும் பெயரில் பொன்னர்- சங்கர் கதை பிரபலமாக இருப்பதுபோலவும், பஞ்சபாண்டவர் கதை பிரபலமாக இருப்பது போலவும் சீனாவிலும் ஒரு அண்ணமார் சாமி கதை இருக்கிறது. பொன்னர்- சங்கர் போல இந்த அண்ணமாருக்கும் கோயில்கள் உள்ளன. சுவாரசியமான இந்த அண்ணமார்களின் வரலாற்றை நெட்ப்ளிக்ஸில் கண்டு ரசித்தேன். இவர்கள் வரலாற்றைசிறிது பார்ப்போம்.

ஏழாம் நூற்றாண்டுவாக்கில் சீனா இரு பேரரசுகளாக பிரிந்து கிடந்தது. சாங் எனும் சீனபேரரசு மேல் கிடான்கள் (மங்கோலியர்களின் மூதாதையர்) படையெடுத்துத்தொல்லை கொடுத்துவந்தார்கள். சீன அரசரிடம் யாங் எனும் தளபதி பணிபுரிந்து வந்தார். ஒருமுறை படையெடுத்த யூலுவ் எனும் தளபதி தலைமையிலான மங்கோலிய படையை முறியடித்து அந்த தளபதியின் தலையை வெட்டிவிடுகிறார். போர்முடிவில் தளபதி உடல் கூட கிடைக்காதாதால் அவரது மனைவி கவலையில் இறக்கிறார். இதனால் கோபமடைந்த தளபதியின் மகன் யான் தன் தந்தையை இக்கதிக்கு ஆளாக்கின யாங் தளபதியின் வம்சத்தைக்கறுவறுக்க சபதம் செய்கிறார்

யாங்குக்கு ஏழு மகன்கள். ஏழுபேரும் மாவீரர்கள். இந்த சூழலில் சாங் அரசின் மேல் மங்கோலியர்கள் யான் தலைமையில் மீண்டும் போர் தொடுக்கிறார்கள். அரசர் கோழையும், முட்டாளுமான பிரபு பான் என்பவர் தலைமையில் ஒரு படையை அவர்களுடன் போரிட அனுப்புகிறார். பானுடன் ஜெனெரல் யாங்கும் போருக்கு செல்கிறார்

யாங் வீரமாக போராடி வெற்றியை அடையவிருக்கும் சூழலில் பிரபுபான் முட்டாள்தனமாக பின்வாங்கிவிடுகிறார். யாங் களத்தில் இருந்து தப்பினாலும் காயம்பட்டு மலைகுகை ஒன்றில் ஒளிந்துகொள்கிறார். அவரை மீட்க ஏழு அண்ணமாரும் கிளம்புகிறார்கள். அவர்கள் முதலாம் அண்ணன், இரண்டாம் அண்ணன் என எண்கள் பெயராலேயே அழைக்கப்படுகிறார்கள்




மங்கோலியர் படையை துவம்சம் செய்து தந்தை இருக்கும் மலைகுகையை அடைகையில் அது மங்கோலியர்கள் அவர்களை பூண்டோடு அழிக்க பின்னிய வலை என்பதைப்புரிந்துகொள்கிறார்கள். குகையை மங்கோலியர் படை சூழ்கிறது. ஏழாம் சகோதரன் மட்டும் தப்பி பிரபு பானிடம் உதவி கேட்க செல்கிறான். ஆனால் படையை அனுப்ப மறுக்கும் பான் ஏழாம் சகோதரனை அம்புகளை ஏவிக்கொன்றுவிடுகிறார். தன் கோழைத்தனம் தெரியகூடாது என்பதற்காக இறந்தது மங்கோலியவீரன் எனவும் கூறிவிடுகிறார்.

சகோதரர்கள் அறுவரும் மீண்டும் மங்கோலியர படையை துவம்சம் செய்தபடி குதிரையில் தந்தையுடன் தப்புகிறார்கள். நடந்த யுத்தத்தில் நூறு மங்கோலியரும், இவர்கள் எழுவரும் மட்டுமே மிஞ்சுகிறார்கள். நூறுபேர் அடங்கிய படை இவர்களைத்துரத்துகிறது.

தன்னால் மகன்கள் உயிருக்கு ஆபத்து விளைந்த குற்ற உணர்வில் தளபதி யாங் தற்கொலை செய்துகொள்கிறார். அதன்பின் அவரது உடலை தாயிடம் சேர்க்க தனயன்கள் சபதம் எடுக்கிறார்கள். தன் தந்தை உடல் எப்படி தன் தாயிடம் சேரவில்லையோ அதுபோல யாங்கின் உடலும் அவர் மனைவியிடம் சேராது என மங்கோலிய தளபதி யான் உறுதிபூணுகிறார்.

அதன்பின் மங்கோலியர் படை நெருங்கவும் மூத்த அண்ணன் மற்ற தம்பிகளை அனுப்பிவிட்டு 100 பேரை எதிர்கொள்கிறார். சண்டையிட்டு நேரத்தை கடத்தியபடி தம்பிகள் தப்ப வழிகாண்கிறார். ஆனால் சண்டை முடிவில் தளபதியால் கொல்லபடுகிறார்.

இதன்பின் மீண்டும் மங்கோலியபடை நெருங்க நெருங்க ஒவ்வொரு அண்ணனாக அவர்களுடன் சண்டையிட்டு பிறதம்பிகள் தப்ப வழிசெய்கிறார்கள். கடைசியில் ஆறாவது அண்ணனும், மங்கோலிய தளபதி இருவரும் மட்டுமே எஞ்சுகிறார்கள்.

சீன அரண்மனை அருகே நெருங்கவும் இருவரும் மோதுகிறார்கள். கடுமையான போரில் ஆறாம் அண்ணன் சீனதளபதி யானைக்கொன்று வீழ்த்தி தாயிடம் தந்தை உடலை சேர்க்கிறார். அதன்பின் சீன தளபதியாக தந்தை இடத்தில் அமர்ந்து மங்கோலியரை விரட்டி சீனாவைக்காக்கிறார்.

இக்கதை 9 முதல் 13 நூற்ராண்டுவரை வாய்மொழியாக பரவி சீனாவெங்கும் புகழடைந்தது. ஒவ்வொரு ஊரிலும் இது வேறு வடிவங்களில் சொல்லபட்டு வருகிறது. ஆனால் இதில் வரும் சீனத்தளபதி யாங்கும், அவரது ஆறாம் மகனும் உண்மையில் வாழ்ந்து சீனாவை மங்கோலியர்களிடம் இருந்து காப்பாற்றியவர்கள் எனத்தெரிகிறது. தளபதி யாங்கின் உடல் புதைக்கபட்ட 11ம் நூற்ராண்டு கோயில் சீனாவில் இன்னும் உள்ளது. காண்க புகைப்படம்




பின்னாளில் 16ம் நூற்ராண்டுவாக்கில் இவர்கள் கதை நாவல், நாடகம், கவிதை என பரவியது. பல திரைப்படங்களும், டிவி சீரியல்களும் எடுக்கபட்டன

அண்ணன் தம்பி ஒற்றுமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதையே நம் ஊர் அண்ணமார் சாமிகளும், பஞ்சபாண்டவரும், சீனத்து அண்ணமாரும் கூறும் கதைநீதி
Authored by: Selvan

No comments:

Post a Comment