Sunday, April 26, 2015

கவுதம் சன்னாவுடன் ஓர் நேர்காணல் - 2

கவுதம் சன்னாவுடன் பேட்டி. பேட்டி எடுப்பவர் எடின்பர்க் பல்கலைகழகத்தை சேர்ந்த ஹ்யூகோ கொரிங்கே


கேள்வி: பெரியாரிய இயக்கங்களும் நடுவே வந்த இயக்கங்களும் முந்தைய இயக்கங்களின் வரலாற்றை மறைத்துவிட்டனவா? நாம் அயோத்திதாசரையும் பிற தலைவர்களைப்பற்றியும் பேசுவதில்லை. பெரியார் மேலேயே கவனம் செலுத்துகிறோம். எங்கே பார்த்தாலும் பெரியார் சிலைகளும், படங்களுமே இருக்கிறதே ஒழிய இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசர் ஆகியோரது சிலைகளும், படங்களும் மிக அரிதாகவே காணக்கிடைக்கின்றன

பதில்: ஆம்

கேள்வி: திராவிட இயக்கங்களின் வரவால் பழைய தலித் இயக்கஙக்ளை நாம் மறந்துவிட்டோமா?

பதில்: இதை நாம் திராவிட இயக்கத்தின் நன்மைகள், தீமைகள் என்ற இருவிதங்களாக பிரித்துப்பார்த்து புரிந்துகொள்ளலாம். சற்று விரிவாக பேசவேண்டிய விஷயம் இது. திராவிட இயக்கம் 1917ல் துவங்கியது என ஏன் அனைவரும் கூறுகிறார்கள்? 1912ல் சென்னையின் மேல்சாதி வியாபாரிகளும், நிலக்கிழார்களும் கைகோர்த்து தென்னிந்திய வணிகர் சங்கம் எனும் அமைப்பை துவக்கினார்கள். அது 1916ல் தென்னிந்திய நல உரிமைச்சங்கமாக 1916ல் மாறுகிறது. இது பின்னாளில் நீதிக்கட்சியாக மாறுகிறது. திராவிட இயக்கத்தின் வரலாறு இதுதான். அவர்களின் தொடக்ககாலக்குறிக்கோள் என்னவென கேட்டால் அது தலித் விடுதலையாக இல்லை. அதற்காக அவர்கள் இயக்கத்தில் சேரவும் இல்லை. முதல்முதலாக நீதிக்கட்சி வெளியிட்ட சாசனத்திலும் பிந்தங்கிய மக்களின் அடிப்படைதேவைகள் பூர்த்தி செய்யபடவேண்டும் எனத்தான் உள்ளதே ஒழிய , உரிமைகளைப்பற்றி எதுவும் கூறப்படவில்லை. ஆக அவர்களின் அடிப்படை நோக்கம் என்னவெனப்பார்த்தால் பிராமணர்கள் வெள்ளையருடன் (ப்ரிட்டிஷ் அரசு) கூட்டு சேர்ந்து அரசியல் அதிகாரத்தில் ஒரு பங்கை அடைந்துவிட்டார்கள். அந்த அதிகாரத்தில் ஒரு பங்கை அடையவே பார்ப்பனரல்லாதோர் இயக்கம் துவக்கபட்டது. அவர்கள் விரும்பியது அதிகாரமும், அதிகாரத்தை அடைவதற்கான ஒரு அடிப்படையுமே

தங்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய அதிகாரம் மறுக்கப்பட்டதாகவும், அதை அடைய சமூகநீதி எனும் காரணத்தை முன்வைத்து அதிகாரத்தில் தமக்கான உரிமைகளை அவர்கள் கோரினார்கள். இந்த அடிப்படையில் அவர்கள் திரண்டதாலேயே நீதிக்கட்சிக்கு அன்று அடையாளம் கிடைத்தது. ஆனால் இது உருவான விதத்தை வைத்துப்பார்த்தாலே தமக்கும் கீழ் இருக்கும் தலித் மக்களை உயர்த்த அவர்கள் முன்வருவார்கள் என நாம் எதிர்பார்க்க முடியாது. அவர்களுக்கு பொதுவான சமூகநீதியில் துளியேனும் ஆர்வம் இருந்திருந்தால் 1921ல் வந்த கோயில் நுழைவு மசோதாவை தோற்கடித்திருக்கமாட்டார்கள். ஆனால் அன்று அந்த கோயிலில் நுழையும் மசோதாவை தோற்கடித்தது அவர்களே.

கோயில் நுழைவு மசோதாவுக்கு எதிராக ஒன்றாக திரண்டு அது தோற்பதை உறுதி செய்தார்கள். பின்னாளில் (தலித் தலைவர்களான) இரட்டைமலை சீனிவாசன், எம்.சி. ராஜா ஆகியோரின் இடைவிடாத அழுத்தம் காரணமாகவே அந்த மசோதா நிறைவேறியது.  அடித்தட்டு மக்களை முன்னேற்ற அன்று தொழிலாளர் கமிஷன் ஒரு நிதியை உருவாக்கச்சொல்லி வலியுறுத்தியது. பதவிக்கு வந்ததும் இவர்கள் செய்த முதல் வேலை அந்த நிதிக்கான ஒதுகீட்டைக்குறைத்ததுதான். அந்த நிதியை தொடர்ந்து குறைத்துக்கொண்டே வந்து, அதை சுத்தமாக காலி செய்து அடித்தட்டு மாணவர்கள் படிப்பதற்கான வாய்ப்புகளை சுத்தமாக ஒழித்தார்கள்.

இவர்கள் சமூகத்தை மூன்று பிரிவாக பிரித்ததைக்காண்கிறோம். பார்ப்பனர், பார்ப்பனர் அலலதோர், தலித். இத்தகைய பிரிவினையால் அன்றும், இன்றும் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் ஒடுக்கப்பட்டோரே.

பெரியாரிய இயக்கம் ஒடுக்கப்பட்டோருக்கு எதாவது உருப்படியான நன்மையைச் செய்தது எனும் கண்ணோட்டமே போலியானது. அதன்பின் பெரியார் திராவிட இயக்கத்தில் சேர்ந்து சுயமரியாதை இயக்கத்தைத்துவக்கி ஒடுக்கப்பட்டோரை ஒன்றிணைக்க முயன்றார். அதில் சிறிதளவு அவர் வெற்றி பெற்றாலும் சமூகம் அன்று இயங்கிய பழைய மாடலிலேயே அவர் இயங்கி அதற்கே உண்மையானவராக இருந்தார். அதைத்தாண்டி அவரால் செல்ல முடியாதற்கு காரணம் அன்று ஒடுக்கபட்ட மக்களுக்கு தலைவர்கள் இருந்ததால் அவர்களைத்தாண்டி இவரை அவர்களால் ஏற்க முடியவில்லை.

திராவிட இயக்கம் தலித் அல்லாதோரை மையமாக வைத்தே உருவானதால் ஒடுக்கப்பட்டோரை அதில் சேர்க்க சமூகரீதியான தடைகள் அவர்களுக்கு இருந்தன. அவர்களது விருப்பம் என்னவாக இருந்திருந்தாலும், ஒடுக்கபட்டோருக்கும், பார்ப்பனரல்லாதோருக்கும் இடையே உள்ள சமூகத்தடைகள் ஒடுக்கப்பட்டோரை இவ்வியக்கத்தில் சேர்க்க தடையாக இருந்தன. அதன்பின் திராவிட இயக்கம் வலுவான அரசியல் சக்தியாக மாறுகிறது. 1939ல் திராவிடர் கழகம் பிறக்கிறது. 1949ல் திமுக பிறக்கிறது.

1939ல் இருந்து 1949ல் அரசியலில் நுழைந்து அதிகாரத்தைப்பிடிக்க அவர்கள் முனைந்த இந்தப்பத்தாண்டு காலத்தில் அதிகாரத்தைப்பிடிக்க திராவிட அடையாளத்தை முன்வைத்தே அவர்கள் மக்களைத்திரட்டினார்கள். இந்த நிலையிலும் ஒடுக்கப்பட்டோரின் அடையாளத்தை அவர்கள் வெளிவரவிடாமல் மறைத்தே வந்தார்கள். ஒடுக்கப்பட்டோரின் அடையாளம் அவர்களுக்கு அன்று அவசியமானதாக இல்லை. ஒடுக்கபட்டோர் தம் அடையாளத்தை ஒட்டுவங்கியாக மாற்றாவிடில் அவர்களுடன் ஒன்றிணைய திராவிட இயக்கங்களுக்கு எந்த அவசியமும் இல்லை.

ஆக பார்ப்பனரல்லாதோர் இயக்கம் அன்று தலித் அடையாளத்துடன் நேருக்கு நேர் மோதி அதை ஒடுக்கும் நோக்கிலேயே சென்றது. நீதிக்கட்சி, திராவிடர் கழகம், ரிபப்ளிக்கன் கட்சி என அந்த இயக்கத்தின் எந்த வடிவிலும், எந்த வகையிலும் அவர்கள் ஒடுக்கட்டோரை ஆதரிக்கவோ, அவர்களுக்காக பாடுபடவோ முனையவே இல்லை. குறிப்பிட்டு சொல்லவேண்டுமெனில் அக்காலத்தில் வெளிவந்த காண்டீபம் எனும் பத்திரிக்கையை நான் படிக்கையில் "வடநாட்டவரான அம்பேத்காரை தென்னாட்டுக்கு ஏன் அழைக்க வேண்டும்?" என எழுதப்பட்டிருந்ததை படித்தேன். ஆக இப்படித்தான் அவர்கள் அன்று பேசிவந்தார்கள். இந்த வகையில் அம்பேத்கரின் அடையாளத்தை மறைக்கவும் அவர்கள் முயன்றார்கள். பெரியாருக்கு அம்மாதிரி நோக்கம் இல்லையெனினும் திராவிட இயக்கத்தால் ஜாதியின் பிடியை விட்டு வெளியே வரமுடிந்ததில்லை. ஆக தெரிந்தோ, தெரியாமலோ திராவிட இயக்கம் தலித்துகளின் அடையாளத்தையும், அரசியலையும், சமூக வரலாற்றையும் ஒடுக்குவதில் மிகமுக்கியமான பங்கை வகித்தது.

____________________

http://www.southasianist.ed.ac.uk/article/view/147/88

Interview with Gowthama Sannah, Propaganda Secretary of the VCK, Chennai,
26th September 2012
by Hugo Gorringe
Dr. Hugo Gorringe (Hugo.Gorringe@ed.ac.uk)

J. Gowthama Sanna g.sannah@gmail.com or http://gsannah.wordpress.com


மொழியாக்கம்: செல்வன்

________________________________________________________


செல்வன் - holyape@gmail.com
________________________________________________________



No comments:

Post a Comment