Sunday, October 25, 2015

தமிழ்நாட்டை தனி நாடாக்க குரல் கொடுத்த “விழுப்புரம் கோவிந்தராஜுலு நாயுடு காரு”


- கோ.செங்குட்டுவன்.


விழுப்புரம் என்.கோவிந்தராஜுலு நாயுடு காரு


திராவிட இயக்க வேர்களில் ஒருவர்.

1922இல் நீதிக்கட்சியைச் சேர்ந்த என்.சுப்புராயப் பிள்ளையை தலைவராகக் கொண்டு விழுப்புரத்தின் முதல் நகர மன்றம் அமைந்தது.

இதில் இடம்பெற்ற 16 உறுப்பினர்களில் கோவிந்தராஜுலு நாயுடு காருவும் ஒருவராவார்.

02.11.1927 - 30.11.1931, 17.04.1941 - 30.03.1947 ஆகிய காலங்களில் விழுப்புரம் நகர மன்றத்தின் தலைவராகவும், 20 ஆண்டுகளுக்கும் மேல் நகரமன்ற உறுப்பினராகவும் கோவிந்தராஜுலு நாயுடுகாரு பதவி வகித்துள்ளார்.

10.01.1953 அன்று நடந்த விழுப்புரம் நகரமன்றக் கூட்டத்தில் பேசிய உறுப்பினர் ஏ.பக்தவச்சலு நாயுடு, சென்னை நகரில் தமக்கு உரிமை கொண்டாடி பேராசைக் கிளர்ச்சியில் ஈடுபடும் ஆந்திரத் தலைவர்களைக் கண்டித்தார்.

இதற்கும் ஒருபடி மேலே சென்ற மூத்த உறுப்பினர் என்.கோவிந்தராஜுலு நாயுடுகாரு “வடக்கே திருப்பதி மலையில் இருந்து தெற்கே கன்னியாகுமரி வரை தமிழ்நாட்டை ஒன்றாக்கி தனி நாடாக்க வேண்டும்” என்று சென்னை முதன் மந்திரியை வலியுறுத்தினார்.   

விழுப்புரம் பகுதியில் திராவிட இயக்கத்தைப் பரவச் செய்த முன்னோடி கோவிந்த ராஜுலு நாயுடுகாரு. பெரியாரின் அன்பிற்கும் பாசத்திற்கும் உரியவர்.

இவர், விழுப்புரம் நகரமன்றத்தின் தலைவர் பதவியினை வகித்தபோது, நடிகவேள் எம்.ஆர்.இராதாவின் நாடகங்களை, நகராட்சியின் சார்பிலேயே நடத்தினார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

என்.எஸ்.கே. மற்றும் தியாகராஜ பாகவதர் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டபோது இவர்களை விடுதலை செய்ய அரசாங்கத்தை வலியுறுத்துவதற்காக,  கீழ்க்காணும் கமிட்டி அமைக்கப்பட்டது.

ஈ.வெ.ரா.பெரியார், தி.பொ.வேதாசலம் (திருச்சி வழக்கறிஞர்), முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம், ராவ்பகதூர் ஏ.ஒய்.அருளானந்தசாமி நாடார் (தஞ்சை நகரசபை தலைவர்), டி.சண்முகம் (தஞ்சை ஜில்லா போர்டு தலைவர்), பி.இரத்தினசாமி பிள்ளை (சேலம் நகரசபை தலைவர்), வி.எஸ்.வீரபத்திரன் (திருப்பத்தூர் நகரசபை தலைவர்), கே.எஸ்.பழனிசாமி கவுண்டர் (திருப்பூர் நகரசபை தலைவர்), ஆர்.கே. வெங்கடசாமி (ஈரோடு நகரசபை தலைவர்), கே.முத்துகிருஷ்ண நாயுடு (தாராபுரம் நகரசபை தலைவர்), எஸ்.சின்னசாமி முதலியார் (கரூர் நகரசபை தலைவர்), சி.என்.நாராயணன் செட்டியார் (காரைக்குடி நகரசபை தலைவர்), திருவாங்கூர் வி.எஸ்.கிருஷ்ணப்பிள்ளை எம்.எல்.ஏ., ஆர்.எஸ்.நாயுடு, பார் அட் லா (மதுரை மீனாட்சியம்மன் கோயில் நிர்வாக அதிகாரி), எம்.எஸ்.எம்.ராஜன் (இலங்கை) உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.

இக்குழுவில் விழுப்புரம் நகரசபை தலைவர் என்.கோவிந்தராஜுலு நாயுடுகாருவும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விழுப்புரம் (பழைய) பேருந்து நிலையத்தில் 01.05.1955 அன்று நகராட்சி சார்பில் உந்து வண்டி நிலையம் திறக்கப்பட்டது, நகரமன்றத் தலைவராக எம்.சண்முகம் இருக்கிறார். ஆனாலும் உந்து வண்டி நிலையத்தைத் திறந்து வைத்தவர் முன்னாள் தலைவரான எம்.கோவிந்தராஜுலு நாயுடு என்பது குறிப்பிடத்தக்கது. 

அன்றைய அரசியலில் நாயுடு பெற்றிருந்த முக்கியத்துவத்தை இவை நமக்கு உணர்த்துகின்றன.

கோவிந்தராஜுலு நாயுடுவின் நினைவைப் போற்றும் நினைவுச் சின்னங்கள் எதுவும் விழுப்புரத்தில் இல்லை.

கிழக்குப் பாண்டி ரோடில் அவருக்குச் சொந்தமான மிகப்பெரிய பங்களா இருந்தது. “நாயுடு பங்களா” என்றழைக்கப்பட்ட அந்த பங்களா, 20 ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டுவிட்டது. இப்போது அந்த இடத்தில் எல்.ஐ.சி. அலுவலகம் நின்று கொண்டிருக்கிறது.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் காணப்படும் அடிக்கல் மட்டுமே கோவிந்தராஜுலு நாயுடு காருவின் நினைவாய் இருந்து கொண்டிருக்கிறது.


இந்த அடிக்கல்லும் இன்னும் எத்தனை நாளைக்கு இருக்குமோ யாருக்குத் தெரியும்?



துணை நின்றவை:
திராவிட இயக்க வரலாறு - நாவலர் நெடுஞ்செழியன்
ஏழிசை மன்னர் எம்.கே.டி.பாகவதர் - மாலதி பாலன்
விழுப்புரம் வரலாற்றுச் சுவடுகள் - கோ.செங்குட்டுவன்
விழுப்புரம் நகரமன்ற நடவடிக்கைக் குறிப்புகள் 1919 -2010

 


கோ.செங்குட்டுவன் 

ko.senguttuvan@gmail.com

No comments:

Post a Comment