Monday, November 16, 2015

மறைந்துப் போன மயிலாப்பூர் ஏரி...

- கோ.செங்குட்டுவன்.


சென்னையின் பாரிமுனையில் இருந்தோ மற்ற இடங்களில் இருந்தோ பேருந்துகளில் மயிலாப்பூர் செல்பவர்கள் “மயிலாப்பூர் டேங்க்” என்று டிக்கெட் எடுப்பதைப் பார்த்திருக்கிறேன்.

கபாலிசுவரர் கோயில் குளத்தின் அருகில் உள்ள நிறுத்தம் இப்படி வழங்கப்படுகிறது. உண்மையில், மயிலாப்பூர் டேங்க், “ஏரி” ஒன்றிருந்தது. அது இருந்த இடம், தேனாம்பேட்டை.

இதுபற்றி தமிழ்த் தென்றல் திரு.வி.க. இப்படிச் சொல்வார்:
“இராயப்பேட்டை, தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர் முதலிய ஊர்கள் ஒரு சிறு கோட்டமெனத் திகழ்ந்தன. இவைகளின் பேரூர் மயிலாப்பூர். இவ்வூர்களின் ஒருமைப்பாட்டுக்கு உயிர் நாடியாயிருந்தது ஒரு சிற்றேரி. அதன் இடம் தேனாம் பேட்டை. ஆனால் அது மயிலாப்பூர் ஏரி என்றே வழங்கப்பட்டது. அவ்வேரி மயிலைக் கோட்டத்தை ஓம்பியது.”

வன்னியர் தேனாம்பேட்டைக்கும் தியாகராயநகருக்கும் இடையேயுள்ள ஆலமர்ந்தாள் எனப்படும் காளி கோயில் குறித்து ஆய்வறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி மிகவும் ஆய்வு செய்தார். அவரது ஆய்வின் முடிவு, ஆலமர்ந்தாள் என்பது ஆலமரத்தடியின் அமர்ந்தவள் என்பதல்ல, ஆலின் (நீரின்) கரையின் அமர்ந்தவள் என்பதாக இருந்தது.

இதற்குக் காரணம், அந்தக் கோயில் மயிலாப்பூர் ஏரிக்கரையின் மீது அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஏரியின் கரைகளில் பலமுறை மயிலையார் நடந்திருக்கிறார். “என்னுடைய வாழ்க்கையிலே நான் கண்ணாரக் கண்ட மயிலாப்பூர் ஏரி. மயிலாப்பூரைச் சேர்ந்த நிலபுலங்களுக்கு நீர்ப் பாய்ச்சிய மயிலாப்பூர் ஏரி” என அவர் சிலாகித்துச் சொல்கிறார்.

ஆம். சென்னை நகரின் பழைய வரைபடங்களில் இந்த ஏரியின் ஒரு பகுதி “லாங் டேங்க் (LONG TANK)” என்றும் இன்னொருப் பகுதி “நுங்கம்பாக்கம் ஏரி” என்றும் குறிப்பிடப்படுகிறது.

இதன் அமைப்பை “மதராசபட்டினம்” நூலாசிரியர் கே.ஆர்.நரசய்யா பின்வருமாறு விவரிப்பார்:
“இந்தப் பெரிய, நீள ஏரியின் வடக்கில் நுங்கம்பாக்கமும், தெற்கில் சைதாப்பேட்டை யும், கிழக்கில் தேனாம்பேட்டையும், மேற்கில் செங்கல்பட்டு ஜில்லாவின் ஒரு பகுதியும் இருந்தன. இந்த ஏரி ஒரு அரை பிறை வடிவைக் கொண்டதாய் இருந்தது. இதன் வடமேற்குப் பகுதி நுங்கம்பாக்கம் என்று அழைக்கப்பட்டது. மவுண்ட் ரோடு இதனையொட்டி வளைந்து சைதாப்பேட்டையை அடைந்தது.”

1920லும் அதற்குப் பின்னும் வெளியான சென்னையின் வரைபடங்களில், லாங் டேங்க் என்றழைக்கப்பட்ட மயிலாப்பூர் ஏரி இடம்பெற்றிருந்தது.

“பின்னர் அது மறைந்தது. மயிலைக் கோட்டத்தின் கட்டுங்குலைந்தது” என வருத்தப் படுகிறார் திரு.வி.க. “என் வாழ்க்கைக் காலத்திலேயே மாடமாளிகைகள் நிறைந்து மக்கள் வாழும் நகரமாக மாறிப்போனதைக் கண்டேன்” என்கிறார் மயிலையார்.

என்ன நடந்தது?
நகரத்தின் வளர்ச்சி எனும் பெயரில் மயிலாப்பூர் ஏரி மறைக்கப்பட்டது.

இன்று, சென்னை வணிகத்தின் இதயமான பிரம்மாண்டமான நகர் அந்தப் பரந்த ஏரியின் மீது விளைந்து, வளர்ந்து, செழித்து நிற்கிறது!

ஆமாம். இன்றைய தியாகராய நகர்தான் அன்றைய மயிலாப்பூர் ஏரி.

“நீரின்றி அமையாது உலகு” என எழுதியதோடு மட்டுமல்லாமல், மழை நீரின் போக்கினையும், இவற்றைக் கட்டுப்படுத்தும் நீர் மேலாண்மைக் குறித்தும் நன்கு அறிந்தவர்கள் தமிழர்கள்.

ஆறுகளையும் ஏரிகளையும் குளங்களையும் வெட்டினார்கள். வெட்டியதோடு நிற்காமல், “இதனைக் காப்பவர் அடி தன் முடி மேலன” என பணிவுடன் கேட்டுக் கொண்டனர்.

அந்த மூத்தோர்ச் சொல் மதிக்கப்படவில்லை.

இதற்கு ஒரு உதாரணமாக மயிலாப்பூர் ஏரி காட்டப்பட்டுள்ளது.




மூத்தோர்ச் சொல் மதிக்கப்படாததன் ஊழ்வினைதானோ என்னவோ, இன்று சென்னை உள்ளிட்ட நகரங்கள் ஓரிருநாள் மழைக்கே தண்ணீாில் தத்தளிக்கின்றன!

இன்னும் என்னென்ன இன்னல்களைச் சந்திக்கப் போகிறோமோ எதிர்காலத்தில்?



உதவியவை:
சங்ககால வரலாற்று ஆய்வுகள் – மயிலை சீனி.வேங்கடசாமி.
திரு.வி.க.வின் வெற்றிப் படிகள் – திருவாரூர் வி.கல்யாணசுந்தரனார்.
மதராசபட்டினம் – கே.ஆர்.நரசய்யா.






கோ.செங்குட்டுவன் 

ko.senguttuvan@gmail.com




No comments:

Post a Comment