Thursday, November 5, 2015

தேன் மின்னல்

-- கவிஞர் ருத்ரா.


நான் பார்க்கும் போது
படாரென்று சாத்துகிறாய்.
நான் விலகி நின்று
மீண்டும் உற்று பார்த்தபோதும்
கதவு சாத்தியே கிடக்கிறது.
நானும் வெகு நேரம்
நின்று பார்த்து
மீண்டும் பார்த்தாலும்
சாத்தியே கிடக்கிறது.
எப்போது திறப்பாய்?

வானத்தின்
இந்தக்கோடியிலிருந்து
அந்தக்கோடி வரைக்கும்
யாரோ "ஸிப்" வைத்து
தைத்து விட்டார்கள் போலும்.

கொஞ்சம் சிரியேன்
அப்போதாவது
வானம் வாய்திறந்து
அந்த பல்லாங்குழி சோவிகளை
கொட்டிக் கல கலக்குமே!

மொட்டை மாடியில்
நீங்கள் காயப்போட்ட
வடாம் பூராவற்றையும்
காக்காய் கொத்திக்கொண்டிருக்கிறதே
அதை விரட்டக்கூட‌
மொட்டை மாடிக்கு
வரமாட்டாயா?
ஏனெனில்
காக்காய் கொத்திக்கொண்டிருப்பது
என் இதயத்தை!
அதை கந்தலாக்கலாமா
கண்ணே?

ஏண்டி!
சன்னலைச்சாத்தி சாத்தி
வைக்கிறாய்?
மூச்சு முட்டுகிறது?
சரிம்மா.

இது தான் சமயம்.
சன்னலுக்கு ஓடுகிறேன்.
என்ன செய்வது?
அங்கே
அவள் அம்மா
மஞ்சள் கிழங்காய்
குங்குமப்பொட்டாய்
சன்னல் பூராவும்
சிவப்பாய் சுட்டுக்கொண்டிருந்தாள்.
சட்!
என்ன செய்வது
சலிப்புடன் விலகினேன்.
"க்ளுக்கென்று"
சிரிப்பொலி.
குறும்புக்காரி!
சன்னலின் நேர் மேலாய்
மொட்டை மாடியின்
விளிம்பிலிருந்து
எங்கள் சன்னலைப்பார்த்து
குமுக்குச் சிரிப்பை
சிந்திக்கொண்டிருந்தாள்.
ஆகா!
மறுபடியும் பாய்ந்தேன்
எங்கள் மொட்டை மாடிக்கு.
அங்கே மாடி
சுத்தமாய் திருப்பதிக்கு வேண்டி
மொட்டை அடிக்கப்பட்டிருந்தது.
மீண்டும் சன்னலுக்கு வந்தால்
அது சிறிது திறந்த நிலையில்
முக்கால் வாசிக்கும் மேல்
மூடியிருந்தது.
இடுக்கு வழியே
கண்களும்
புன்னகையுமாய் அவள்!
சன்னல் முழுதும் திறந்து
அந்த தேன் மின்னல்
எப்போது ஒழுகும்?





 
 
கவிஞர் ருத்ரா இ.பரமசிவன்

ruthraasivan@gmail.com


No comments:

Post a Comment