Wednesday, January 6, 2016

அப்பாவின் பட்டுவேஷ்டி

-- ஷைலஜா.







அப்பாவின் பட்டுவேஷ்டிமீது
அண்ணனுக்கு ஒருகண்
தம்பிக்கு இரண்டு கண்
பெண்ணானஎனக்கும்
அதன் மீதான
பார்வையைக்கண்டு
அம்மா  சிரிப்பாள்

அகலஜரிகை கரையிட்டு
சற்றே பழுப்புநிறமானாலும்
பளபளக்கும் பட்டுவேஷ்டியை
தாவணியாய் அணிந்துகொள்ள
தணியாத ஆசை இருந்தது
சுபநாட்களில்
கல்யாணப்பந்தலில்
அப்பாவின் பட்டுவேஷ்டி
அவரது மேனியில்
அமர்க்களமாய் ஜொலிக்கும்
திருபுவனம்பட்டாம்
திருமணத்தில் மாமனார் சீராம்
அருமையாய் அதைப்பேணுவார்
’ஆளழகா துப்படிக்காரா என்பதுபோல
செல்வநிலை அதிகமில்லாத என்னை
பட்டுவேஷ்டி பணக்காரனாக்குகிறது’
என்று சொல்லி சிரித்துக்கொள்வார்
கூட்டங்களில் அப்பாவின் கம்பீரத்தை
சட்டென அடையாளம்காட்டும்

அப்பாவால் வேஷ்டி அழகாகிறதா
 வேஷ்டியால்அப்பா அழகாயிருக்கிறாரா
பட்டிமன்றக்கேள்விகள்
பட்டுவேஷ்டியைச்சுற்றியே
வந்துகொண்டிருக்கும்
ஒருநாளும் அதை
யார் தொடவும் அனுமதித்ததில்லை
பொக்கிஷமாய்ப்பேணி
பெட்டிக்குள் பத்திரப்படுத்துவார்
சந்தன சோப்பிட்டு
வேஷ்டிக்கு நோகாமல்  துவைத்து
வெய்யில்மறைந்ததும்
நிழலில்காயவைத்து
நேசமுடன் பாதுகாப்பார்
பட்டுவேஷ்டியை
பத்துமாதக்குழந்தைபோலத்தான்
பெட்டியினின்றும் எடுப்பார்
மடித்த இடம் கத்தியின் கூர்மையாய்
வாளின்பளபளப்பாய்
முப்பதுவருஷமானாலும்
 அழகாய் ஜொலிக்கும்
நாள்பட இருக்கவேண்டுமென
நான்கு வசம்புத்துண்டங்களை
பட்டுவேஷ்டிக்குப்
பக்கதில்போட்டிருப்பார்
எதிர்பாரா அப்பாவின் மரணத்தில்
நிலைகுலைந்து போய்விடவும்
பட்டுவேஷ்டியைப்பற்றியெல்லாம்
பலநாட்கள் நினைக்கவே இல்லை
அன்றுஅப்பாவின்
பெட்டியைத்திறந்தபொழுது
அதில் அந்த பட்டுவேஷ்டி இல்லை.

சின்னக்கவர் ஒன்று தென்படவும்
’திறந்துபார்த்தோம்
அதில்பட்டுவேஷ்டியை
விலைக்குபோட்ட ரசீதும்
இரண்டாயிரம் ரூபாயும் சில்லறையும்
‘எனது மரண காரிய செலவுக்கு..’
என்ற அப்பாவின் கையெழுத்திட்ட
கடிதமும்இருந்தது.





 
 
 
ஷைலஜா
shylaja01@gmail.com
 
 
 
 
   

No comments:

Post a Comment