Thursday, August 25, 2016

தெற்கிலந்தைக் குளம் மாரியம்மன் கோயில்


- இலந்தையார்




தலையிலே பாம்பு அணிந்திருப்பவள் கருமாரி, மாரியம்மன்தான். பாம்பின் உருவில் பாரினைக்காக்கவே சாம்பல் தருகின்றாள் தாய் என்று சொல்லுவதுண்டு. 
இதோ எங்களூர் மாரியம்மன் பற்றி ஒரு கவிதை.

தெற்கிலந்தைக் குளம் மாரியம்மன் கோயில்


 
எங்களது சிற்றூரில் உறையும் தேவி

                எழிலார்ந்த மாரியம்மன் கோயில் பற்றி

உங்களுக்குச் சொல்லுகின்றேன், முகமும் ஒன்றாய்

                ஓருருவாய் ஒப்பற்ற அழகு சேரச்

சிங்கமதன் மேலமர்ந்து திகழும் காட்சி

                செப்புதற்கு முடியாது,  அம்மன் கண்கள்

பொங்குகிற கருணையினை என்ன சொல்ல?

                புத்தழகுக் கருங்கல்லின் புனிதம் தேவி!



பூசாரி பண்டாரம் அலங்கா ரத்தில்

                புன்னகைக்கும் தேவியவள் அமரும் கோயில்

ஆசார வாசலிலே புகுந்து விட்டால்

                அங்கங்கே பரிவார தேவ தைகள்

வீசாத வெட்டரிவாள், சலங்கை, தண்டு,

                விளங்குகிற பலிபீடம், பிரம்பு, யாவும்

தாசாதி தசர்களாய் ஊரார் எல்லாம்

                தரிசிக்க வைத்திருக்கும் உபச்சாரங்கள்.



இடப்பக்கப் பீடத்தில் சுடலை மாடன்,

                இன்னுமங்கே காந்தாரி, வீற்றி ருக்கத்

தொடக்கத்தில் கணபதியும் உட்பக்கத்தில்

                தொங்குகிற நாக்குடைய நாயின் மேலே

எடுப்புடனே பைரவரும் கோயில் கொள்ள

                இடையினிலே பலிபீடம் அமைந்திருக்க

அடுத்துள்ள வெளியினிலே வேம்பு நிற்க

                அமைந்துள்ள கோயிலொரு அழகுக் கொள்ளை!



வருடத்திற் கிரண்டு முறை கொடைநடக்கும்

                மண்விட்டு வெளியூரில் வாழ்வோர் கூட

கருத்துடனே அங்குவந்து கலந்து கொள்வார்

                கண்கொள்ளாக் காட்சியது, முதல்நாள் மாலை

நிருத்தங்கள் செய்கின்ற கணியான் ஆட்டம்

                நிகழ்த்தியபின் மாரியம்மன் சரிதை சொல்வார்

சரித்திரத்தில் அம்மனது பிறப்புச் சொல்லும்

                சமயத்தில் மருளாடி துள்ளிப் பாய்வார்



சாமிவந்து பாய்கிறவர் மேலும் கீழும்

                தாவிவந்தே ஆடுவதைப் பார்க்கும் போது

தாமுதலாய்ப் பார்ப்பவர்கள் பயந்துபோவார்

                தடியெடுத்தே ஆடுவதும், அரிவாள் தூக்கி

பூமியது அதிரும்வகை துள்ளி வீழ்ந்து

                புரளுவதும் , ஓலமிட்டுக் குறிகள் அங்கே

தாமுரைத்தே ஆடுவதும், சத்தம் போட்டே

                சாடுவதும் பார்ப்பதற்குத் துணிவு வேண்டும்.



ஆடுபவர் உறவினர்கள் அங்க வஸ்த்ரம்

                அவர்களது மார்புக்குக் குறுக்காய்ச் சுற்றிப்

போடுவதும், கணியான்கள் சுற்றிச் சுற்றிப்

                புகழ்ந்தபடி  பாடுவதும் பக்கம் அங்கே

கூடுவதும், கட்குடித்த சிலபேர் அங்கே

                குதிப்பதுவும் , மாதரெலாம் குரவை போட்டே

பாடுவதும், நையாண்டி மேளம் பம்பை

                பரவசமாய் அடிப்பதுவும் அமர்க்களந்தான்!



இரவெல்லாம் தெருக்கூத்து, வில்லுப் பாட்டு

                இளைஞர்களின் சிலம்பாட்டம், உடுக்குப் பாட்டு

கரகாட்டம், ஒயிலாட்டம், உருமி மேளம்

காதுகட்கும் கண்களுக்கும் தீனி போட

மருளாட்டம் நம்முள்ளும் வருமோ என்னும்

      வகையினிலே துடிப்புகளை ஏற்படுத்தும்.

இருளோட்டும் அலங்கார விளக்குக் கூட்டம்

                எழிலாக அங்கங்கே ஜொலிஜொலிக்கும்~



துடுக்கான சாமிகளின் ஆட்ட பாட்டம்

                தொடர்ந்துவர மறுநாளில் சுடலை மாடன்

சுடுகாட்டு வேட்டைக்குச் செல்லும் காட்சி

                சொப்பனத்திலும் பயத்தை வரவழைக்கும்

எடுப்பான சல்லடங்கள் சலங்கை குல்லாய்

                இன்னுமங்கே தும்புவார்ச் செருப்புப் போட்டு

நடுச்சாமம் சுடுகாடு சென்று மீளும்

                நடப்பதனைக் காணுதற்குத் திரளும் கூட்டம்.



காலையிலே பொங்கல் வைப்பர், அதற்குப் பின்னே

                கடாவெட்டு , வெட்டுவதும் ஓர்கலைதான்

மாலையினைப் போட்டிருக்கும் ஆட்டை வெட்ட

                மறுநொடியில் அதன் உடலம் துடிதுடித்துக்

காலுதைக்கும் அக்காட்சி காணுகின்ற

                கண்களிலும் ரத்தம்வரும், அதற்கும் மேலே

கோலமுடன் அம்மன்முன் படையலிட்டே

                கொண்டாடி மகிழ்ந்திருக்கும் அடியார் கூட்டம்.



அதற்குப் பின் சாமிகளின் ஊர்வலங்கள்

                அம்மன்மருள் ஆடுபவர் கரகம் வைத்தும்

கொதிக்கின்ற தீச்சட்டி ஏந்தி  ,நீறு

கொட்டிவைத்த கப்பரையை கையில் வைத்துக்

குதித்தாடி வருகின்ற ஊர்வ லத்தில்

                கூடுகிற சந்திகளில் காவு தந்து

துதிபாடி வீதியினில் செல்லும் காட்சி

                தொடர்ந்துமறு கொடைவரைக்கும் நினைவிருக்கும்



ஊரிலுள்ள எல்லைகளிம் தெய்வங் கட்கு

                ஊர்வலத்தில் செல்கையிலே முட்டைக் காவும்

வீரியத்தைக் காட்டுகின்ற சாமி கட்கு

                மேல்கொண்டை சேவலினைத் திருகிக் கொய்து

சோரியெனப் பொங்குகிற இரத்தம் மாந்தி

                துடிதுடிக்க எறிவதுவும் , அப்பப்பப்பா

யாரிதனை வகுத்தார்கள் தெரியவில்லை

                அச்சமதா அவசியமா புரிய வில்லை



இங்கேதான் மாரியம்மன் கோயில் பக்கம்

                இளவட்டக் கல்லொன்று கண்ட துண்டு

அங்கேயார் அதைத் தூக்கிப் போடு வாரோ

                அவருக்குத் திருமணம்செய் தகுதி கிட்டும்

எங்கேநாம் இருந்தாலும் அற்றை நாளில்

                இருந்ததெலாம் எண்ணுகையில் மனம்களிக்கும்

சிங்கத்தின் மேலமரும் மாரி யம்மா

                சிறப்பெல்லாம் அளித்திடுக வாழ்க, வாழ்க!


படம் உதவி முனைவர் சுபாஷிணி:  
இங்கே காணப்படும் சிலை டென்மார்க் தலைநகர் கோப்பன்ஹாகனில் உள்ள National Museum of Denmark அருங்காட்சியகத்தில் ஆசிய அருங்கலைப்பொருட்கள் சேகரிப்பு உள்ள பகுதியில் இருப்பது. இதற்கு மாரியாத்தாள் எனப்பெயரிடப்பட்டு ஏறக்குறைய 1890ம் ஆண்டில்  உருவாக்கப்பட்ட சிற்பம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. மாரியாத்தாள் காலரா நோயிலிருந்தும் சின்னம்மை நோயிலிருந்தும் மக்களைக் காப்பவள் என்ற குறிப்பும் இங்கே உள்ளது.

______________________________________________________
இலந்தையார்
Subbaier Ramasami
elandhai@gmail.com
______________________________________________________
 
 

No comments:

Post a Comment