Sunday, October 30, 2016

சங்க இலக்கியங்களில் ஆரியர் - 3

அடுத்தது அகநானூறு 336, பாவைக்கொட்டிலார் பாடியது. இவர்பெயர் சற்றுவிதப்பானது. கொட்டுதல்=வளைத்தல். குழல், குடல், கூடு, கூடையென வளைபொருளில் தமிழில் ஏராளம் சொற்களுண்டு. கொட்டு = பிரப்பந்தண்டை வளைத்துச்செய்த கூடை. கொட்டில் = சிறிய பிரப்பங்கூடை. நெற்கொட்டில் = நெல்லிடுங்கூடை. பாவைக்கொட்டில் = பொம்மைகளைப் போட்டுவைக்கும் பிரப்பங்கூடை. இக்காலத்தில் எல்லாவீடுகளிலும் பொத்திகைக் (plastic) கூடையிற்றான் பொம்மைகளைப் போட்டுவைக்கிறார். (elasticற்கு மட்டுமே ”நெகிழி” பயன்படுத்துவது நல்லது. plastic - ஐயும்  elastic - ஐயும் பிரித்துக் கையாளவேண்டாமோ?) அக்காலத்தில் பிரப்பம்புல் (இதைக் கொடியென்பாருண்டு.) தமிழக மருதநிலங்களில் ஆற்றங்கரைகளிலும், ஈரஞ்செறிந்த ஏரிக்கரைகளிலும் பெரிதும்வளர்ந்தது. இன்றுங் கூடச் சீர்காழி-புகார்ப் பாதையில் பிரம்புப்பொருட்களுக்கும், கோரைப்பொருட்களுக்கும் பேர்பெற்ற தைக்காலைக் காணலாம். (பிரம்பும் கோரையும் வேறுபட்டவை.) அவ்வழி போகும் சுற்றுலாக்காரர் ஏதேனும் ஒரு பிரம்பு/கோரைப் பொருளை அங்கிருந்து வாங்காது போகார். http://www.kadalpayanangal.com/2014/07/1.html
 
பிரம்பு மூங்கிலைப்போன்றது; ஆனாற் சற்றுவேறுபட்டது. மிகப் பெரிதாகவும், மெல்லிதாகவுமன்றி, நடுத்தர விட்டங் கொண்ட பிரப்பந்தண்டின் முள்களைச் சீவி, தண்டை நெருப்பிற்காட்டிக் கொஞ்சஞ் கொஞ்சமாய் வளைத்துப் பல்வேறு அறைகலன்கள் (furnitures), அணிபொருட்களைச் (ornamental goods) செய்வர். இதில் பாவைக்கொட்டிலும் ஒன்று. கும்பகோணம்-கதிராமங்கலம் சாலையிற் சென்றால் வரும் திருக்கோடிகாவில் பிரம்பே தலமரமாகும். சென்னைப் பெரம்பூர் என்பது பிரம்பூர் தான். இக்காலத்தில் பிரம்பு தமிழகத்தில் அருகிவிட்டது. எல்லோரும் செயற்கைப் பொருட்களுக்கே ஆலாய்ப் பறக்கிறோம். பெரும்பாலும் பீகார், இராசசுத்தான், ஆசியத் தென்கிழக்கு போன்ற இடங்களிலிருந்து தான் பிரம்பும், பிரப்பம் பொருட்களும் இன்று கொண்டுவரப்படுகின்றன. பிரப்பங்கொட்டில் என்பதுமிகச்சரியான மருதத்திணைப் பொருள். பாவைக்கொட்டிலார் ஒருவேளை சோழநாட்டுத் தைக்காலுக்கருகில் இருந்தாரோ, என்னவோ? எண்ணிப்பார்க்க மனம் குறுகுறுக்கிறது.
 
பாடல் மருதத்திணை. நயப்புப் பரத்தை (விருப்பமானவள்; hero's current lover) இற்பரத்தைக்குப் (concubine; சின்னவீடு...:-)) பாங்காயினார் கேட்பச் சொல்கிறாள். பாட்டிற் பேசப்படுவோர் பரத்தைகள் என்பதைச் சுற்றிவளைத்து உணர்கிறோம். ”என்னாங்கடி, சக்களத்திகளா? என்னிடமா விளையாட்டு? இவ்வூர்த்தலைவன் என்னைச் சுற்றிவரும்படி ஆக்கவில்லையெனில், சோழரின் வல்லக்கோட்டையில் ஆரியர்படை மண்ணைக்கவ்வியதுபோல், நானுங்கவிழ்ந்து என்வளையை உடைத்துக்கொள்வேனடி” என்று சூளுரைக்கிறாள். சென்னைநகரத் தண்ணீர்க் குழாயடியில் பெண்கள் சண்டையடிப்பது போல் தெரிகிறதோ? படியுங்கள். சற்று நீளமான பாட்டு. இதன் விளக்கமும் நீளந்தான். என்னைப் பொறுத்துக்கொள்ளுங்கள்.
 
குழற்காற் சேம்பின் கொழுமடல் அகலிலைப்
பாசிப் பரப்பில் பறழொடு வதிந்த
உண்ணாப் பிணவின் உயக்கஞ் சொலிய
நாளிரை தரீஇய எழுந்த நீர்நாய்
வாளையொ டுழப்பத் துறைகலுழ்ந் தமையின்
தெங்கட் தேறல் மாந்தி மகளிர்
நுண்செயல் அங்குடம் இரீஇப் பண்பின்
மகிழ்நன் பரத்தைமை பாடி அவிழிணர்க்
காஞ்சி நீழல் குரவை அயரும்
தீம்பெரு பொய்கைத் துறைகேழ் ஊரன்
தேர்தர வந்த நேரிழை மகளிர்
ஏசுப என்பவென் நலனே அதுவே
பாகன் நெடிதுயிர் வாழ்தல் காய்சினக்
கொல்களிற் றியானை நல்கல் மாறே
தாமும் பிறரும் உளர்போற் சேறல்
முழவிமிழ் துணங்கை தூங்கும் விழவின்
யானவண் வாரா மாறே வரினே
வானிடைச் சுடரொடு திரிதரும் நெருஞ்சிபோல்
என்னொடு திரியா னாயின் வென்வேல்
மாரியம்பின் மழைத்தோற் சோழர்
வில்லீண்டு குறும்பின் வல்லத்துப் புறமிளை
ஆரியர் படையின் உடைகவென்
நேரிறை முன்கை வீங்கிய வளையே.
 
என்பது பாட்டு. பாடலின் விளக்கம் கூடுவதற்காக, இதனுள் வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப்போட்டு கீழே கொடுத்திருக்கிறேன்.
 
குழல்கால் சேம்பின் கொழுமடல் அகல்இலைப்
பாசிப் பரப்பில் பறழொடு வதிந்த
உண்ணாப் பிணவின் உயக்கம் சொலிய,
நாள்இரை தரீஇய, எழுந்த நீர்நாய்
வாளையொடு உழப்பத் துறை கலுழ்ந்தமையின்,
தெங்கள் தேறல் மாந்தி,
மகளிர் நுண்செயல் அம்குடம் இரீஇப்
பண்பில் மகிழ்நன் பரத்தைமை பாடி,
அவிழ் இணர்க் காஞ்சி நீழல் குரவை அயரும்
தீம் பெரு பொய்கைத் துறை கேழ் ஊரன்,
தேர் தர வந்த நேரிழை மகளிர்
ஏசுப என்ப என் நலனே அதுவே
 
பாகன் நெடிது உயிர் வாழ்தல் காய் சினக்
கொல் களிற்று யானை நல்கல் மாறே
தாமும் பிறரும் உளர் போல் சேறல்
முழவு இமிழ் துணங்கை தூங்கும் விழவின்
யானவண் வாராமாறே
 
வரினே
 
வான் இடைச் சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல்
என்னொடு திரியான் ஆயின்
 
வென்வேல் மாரியம்பின் மழைத்தோற் சோழர்
வில் ஈண்டு குறும்பின் வல்லத்துப் புற மிளை
ஆரியர் படையின் உடைகவென்
நேரிறை முன்கை வீங்கிய வளையே.
 
இனிச் சில சொற்பொருள்களையும் விளக்கக்குறிப்புகளையும் பார்ப்போம்.
 
கொழகொழவென்ற சேப்பங்கிழங்கிற் செய்த மோர்க்குழம்பைச் சுவைத்ததுண்டோ? சேப்பங்கிழங்குப் பொரியல்? வறுவல்? இதைச் சாப்பிடுவதில் நல்லது, கெட்டது இரண்டுமேயுண்டு. ஒருபக்கம் குருதிப் பெருக்கு அடக்கி, மலத்தை இளக்கி, உடலுக்குக் குளிர்ச்சிதரும் சேம்பு, இன்னொருபக்கம் வெப்பு, தடிப்பு, கோழைக்கட்டென்று கெடுதலையும் உண்டாக்கலாம். உடலுக்குள் வாயுவையும் பெருக்கலாம். நீர்ப்பாங்கான மண்ணில் பயிர்விளைந்தும், கிழங்கு சாம்பி (நீர்வற்றி)க் காண்பதால் சாம்ப/சாம்பைக் கிழங்கு என்றாயிற்று. சாமம்/சாமை, சேம்பு/சேம்பை, சேமம்/சேமை, சேப்பு/சேப்பை எனப் பல்வேறு திரிபுகளில் இன்று சொல்லப்படுகிறது. வடமொழியிற் கேமுகவென்று திரியும். ஆங்கிலத்தில் Indian Kales Root என்பர். Colacasia esculenta என்பது புதலியற் பெயர். பென்னம்பெரிய சேம்பிலையில் நீர்நாய் தங்கும் விவரிப்போடு இப்பாடல் தொடங்குகிறது..சேம்பு, நீர்நாய் என இரண்டுமே மருதத் தொடர்புடையவை.
 
குழல்கால்-குழல்போன்ற சேம்புத்தண்டு; கொழுமடல் அகலிலை-அகண்ட சேம்பு இலை. சிலபோது இது யானைக்காதளவிற்கு வளருமென்பர். (இலையை/தண்டைப் புளிசேர்த்துச் சாப்பிட்டால், மூலம் நீங்குமாம். பொதுவாகச் சேம்பிற்குப் புளிசேர்த்துண்பது நாட்டுவழக்கம். ”சிறியார்க்கு இனியதைக்காட்டாதே, சேம்பிற்குப் புளியிடமறவாதே” என்பது சொலவடை. மோர்க்குழம்பின் புளிப்பு புரிகிறதா?) பாசிப்பரப்பு = பசும்பரப்பு. பறழ் = குட்டி, உண்ணாப் பிணவு = உண்ணாதிருக்கும் பெண் நீர்நாய்; உயக்கம் சொலிய = வருத்தம் போக்கவேண்டி, நாள் இரை தரீஇய எழுந்த நீர்நாய் = அன்றாட உணவைத் தர எழுந்த நீர்நாய் (Otter);
 
[இக்காலத்தில் நீர்நாய் நம்மூரிற் கிட்டத்தட்ட அழிந்தே போய்விட்டது. இரோப்பாவில் ஓரளவாவது வளர்கிறது. மக்கள் வாழ்வில் உரையாட்டுகளுள்ளன. சிறார்க்கு அதை அடையாளங்காட்டி, அதன் வாழுமை போற்றப்படுகிறது. வேதிப்பொறியியல் ஆய்விற்காக சிலவாண்டுகள் நெதர்லாந்தில் நான் வாழ்ந்தபோது தெல்வ்ட் (Delft) நகரின் தாந்தாவ் (Tanthof) பகுதியில் எங்கள் வீடு நீர்நாய்ச் சந்தில் (Otter laan) இருந்தது. இத்தெருப்பெயரின் அழகுகண்டு நான் வியந்திருக்கிறேன். நீர்நாய் போன்ற சொற்களையும், இயற்கையையும் சேர்த்தே நாம் இழந்திருக்கிறோம். நம் பிள்ளைகளுக்கு ஆண்டாள் சொல்லும் ஆனைச்சாத்தான் குருவியை அடையாளங் காட்டமுடியுமா? கைபேசி வந்ததிலிருந்து சிறுகுருவிகள்கூட நம் நகரங்களைவிட்டு ஓடியேபோயின. குருவிச்சத்தம் உங்களுக்குக் கேட்கிறதோ?]
 
வாளையொடு உழப்ப - நீரிற்கிடக்கும் வாளைமீனோடு போராடி அதைச்சாய்த்துக் கவ்வும் செயலால்; துறை கலுழ்ந்தமையின் = நீர்த்துறை கலங்கியதால்.
 
[இனிக் கள். தென்னை பற்றியதோர் இடைவிலகல். கள்/மது போன்றவை உணர்வு கலங்குதல்/மலங்குதற் பயன்பாட்டின் வழியெழுந்த பெயர்களாகும். இன்னொரு விதமாய், சருக்கரைப்பொருளையும், சுவைப்பொருள்களையும் சேர்த்து நொதிக்கவிட்டுப் (fermented) பின் தெளிவித்துச் (clarified) வடித்துக் கள்/மது செய்வதால், உருவாக்கவழிப் பெயர்களுமுண்டு  துல் எனும் வேர்ச்சொல் துலங்குவதைக் (clear) குறிக்கும் துல்>தெல்>தெல்லல் வினையிலிருந்து தெள்ளல், தெளிதல், தெரிதல், தெளிவித்தல் தேறல், தேற்றம், தெற்று போன்றசொற்கள் பிறந்தன. நொதித்துத்தெளியும் பொருளைத் தெளிவென்றும், தேறலென்றும் அழைத்தார். நொதித்தல் குறைந்தது தேனென்றும் தேமென்றுஞ், தீமென்றும் சொல்லப்பட்டது. துல்>தில் இலிருந்து தித்திப்பென்ற சொல்கூட எழுந்தது. கள்ளிற்கு இன்னொரு பெயராய்த்தேன், தேறல், தெளிவு போன்றவையும் ஏற்பட்டன. உங்களுக்குத் தெரியுமோ? கள்ளிற்குத் தமிழில் 48 சொற்களுக்கு மேலுண்டு. ஆகக் ”கள்” நம்மோடு நெடுநாள் வந்தது. இன்றெமக்கு எமனுங் கூட. 
 
இனித் தென்னைக்கு வருவோம். இது ஆசியத் தென்கிழக்கிலிருந்து தமிழகங் கொண்டுவரப்பட்டதென்று புதலியலார் (botanists) சொல்வார். சங்க காலத்திற்கும் முன் இது நடந்திருக்கலாம். நம்மூரைச் சேர்ந்த பனைபோலவே இதிலும் தெல்>தெள்>தெளிவு இறக்கமுடியுமென அறிந்த தமிழன், இதன்சுவை இன்னும் அதிகமென்பதால் தெல்மரமென்ற புதுப்பெயரையே இதற்கிட்டான். பனங் கள் சற்று கடுக்கும்; தென்னங் கள் அவ்வளவு கடுக்காது. கடுப்பெல்லாம் வெறியக்காடி-acetic acid செய்யும் வேலை. ”தெல்” என்பது கள்ளின் வேரானதால், தெளிவைத் தரும் தெல்ங்குமரம் தெங்குமரமாயிற்று; தெல்நை, தென்னையாயிற்று. தெங்கங்காய் நாளடைவில் தேங்காயெனச்சுருங்கிற்று. தெங்கள்=தெங்கின் கள். ”தெல்”லென்ற வேர்ச்சொல்லே இவற்ற்றிற்கு அடிப்படை. ஞாவகம் வைத்துக்கொள்ளுங்கள்தெல் எனும் திசைக் குறிப்பும், தெல் எனும் மரக்குறிப்பும் வெவ்வேறு சொற்பிறப்பின. தென்னையென்ற பெயரின் வழி, கள்மரப் பொருள் குறிப்பதாலேயே, ”அது நம்மிடம் இயல்பாய் இருந்ததல்ல; இறக்குமதி” என்பது புரிந்துபோகும். பனை நம்முடையது; தென்னை வெளியிலிருந்து வந்தது. விவரமறியாப் பலருக்கும் இது வியப்பாகலாம்
 
தெல்லின் நீட்சியாய், அதன் வெறியத்தைக் (ethanol) ஓரளவு கட்டுவதாய், அரைநொதிப்பு நீர்மத்தில் சுண்ணாம்பிட்டு நீரிய அயனிச்செறிவை (hydrogen ion concentration) மாற்றி அமிலவரங்கிலிருந்து (acidic range), களரியரங்கிற்கு (alkali range) கொணர்ந்து திண்மத்துகள் (solid particles) கீழிறங்க, மீண்டும் தெளிய/தேற (settling) வைப்பர். தெளிவு/தேறலென்று இதையுஞ் சொல்வார். இப் பதநீரை, தென்பாண்டி நாட்டில் விற்கவுஞ் செய்வார். பதநீரின் வெறியச் செறிவு 2-4% ஆகும். பொதுவாக நம்மூர்க் கள்ளில் 7% க்கு மேலிருக்கும். கட்டங்கள் (கடுங்கள்) 9% க்கும் மேலிருக்கும். சப்பானிய அரிசிக்கள் (சாக்கே) 15-20% அளவிருக்கும். தயக்கமின்றி, ஆண், பெண், சிறார் அனைவரும் தென்தமிழ்நாட்டில் குறைவெறியப் பதநீரைக் குடிப்பார்; இதைத் தவறென்று யாரும் கொள்வதில்லை. ”பதநீரு வாங்கலையோ, பதநீரு?...” வீதியிற் குரல்கேட்டாலே வாயில் நீரூறும். பதநீரைப் பனையிலும் இறக்கலாம், தென்னையிலும் இறக்கலாம்.]
 
தெங்கள் தேறல் - இங்கே பதநீர்; மகளிரைப் பேசுகையில், இதைக் கள்ளாகக் கொள்ளுவது பாட்டின் கட்டுகைக்குப் (context) பொருந்தாது; தெங்கள் தேறல் மாந்தி - தாகத்திற்குப் பதநீர்குடித்தபின், சேம்பின் காலுக்கு அருகில் கால்வாய் நீர் கலங்காதிருந்தால் தெளிந்த நீரையே மகளிர் குடித்திருப்பர். ஆனால் அது கலங்கிய காரணத்தால் இங்கே பதநீரைக் குடிக்கிறார். நுண்செயல் அம்குடம் இரீஇ = நுணுகிச்செய்த அழகுக்குடங்களைத் தம் பக்கத்திருத்தி;. (அரிய வேலைப்பாடுள்ள மண்குடங்களை ஆதிச்சநல்லூர், கொடுமணம்,பொருந்தல், தற்போது கீழடி என விதவிதமாய் அறிகிறோமே?) “நுண்செயல் அங்குடம்” - ஓர் அழகான விவரிப்பு. குயவரைப் பற்றிய பாடல்களும் சங்க இலக்கியத்தில் அதிகம் தான்.         
 
மகிழ்நன் என்பான் கணவனல்லன். உடன்பழகி மகிழ்கிறவன் = consort; இக்காலத்தில் boy friend என்பாரே, அதற்கிணையாகக் கூட இதைச்சொல்லலாம். மகிழ்நன், கணவனாகலாம்; வேறொருத்தியை மணந்து இவளோடு மகிழ்வோனாகலாம்; ஏன், யாரையும் மருவாது(marry) காதலனாய்க்கூட அமையலாம்; மகிழ்நனென்றவுடன் உடலுறவு ஞாவகம் வந்துவிடத் தேவையில்லை. பண்பில் மகிழ்நன் = பண்பில்லாத மகிழ்நனின். (அவன் ஒரு பெண்ணோடு மட்டும் உறவுகொள்ளவில்லை. அவன் பரந்திருப்பதால் பரத்தன்.) பரத்தமை = பலரையும் பரந்துசார்ந்த ஒழுக்கம்.
 
அடுத்தது காஞ்சி மரம். இதுவும் மருத மரங்களிலொன்று. காஞ்சியை ஆற்றுப்பூவரசு/ஆத்துப்பூவரசு/ஆற்றரசு/ஆடலரசு/செடிப்பூவரசு, ஆயில்/ஆயிலி/ஆவில், கச்சி/கஞ்சி, கடற்கேசிதம், ஆனத்துவரை/ சன்னத்துவரை, நாய்க்குமிழ், பிண்டாரம் என்றெலாம் அழைப்பர். பிண்டாரத்தையொட்டி வடபுலமொழிகளிலும் பெயரிருக்கிறது. ”காஞ்சி” கன்னடத்திலும், ஆற்றுப்பூவரசு/ ஆற்றரசு மலையாளத்திலும் பயில்கிறது. பம்பரக் கும்பில் என்றுகூட மலையாளத்திற் சொல்வர். எல்லா நீர்க்கரைகளிலும், குறிப்பாகக் அகழிக்கரைகளிலும் இம்மரம் பயிரிட்டிருக்கிறார். ஆற்றங்கரையில் வளரும் காஞ்சிமரங்கள், மண்ணையிறுக்கி, ஊருக்குள் வெள்ளம்புகாதவாறு காத்துதவுமென்பார். (சென்னை அடையாறு, கூவம் ஆற்றுக்கரைகளில் இதைவளர்த்தால் நன்றாக இருக்குமே?) பப்பாளி, பனை. பலா போலஇம்மரத்திலும் ஆண், பெண் வகைகளுண்டு. ஆண்பூக்கள் மஞ்சளாயும், பெண்பூக்கள் பச்சை/நீலமாயும் இருக்கும். இதன் புதலியற்பெயர் trewia nudiflora.
 
மாற்றுநாட்டைக் கவரவிரும்பி ஓர் அரசன் வலிந்து படையெடுப்பதை வல்ஞ்சி>வஞ்சித்துறையென்பார். (வஞ்சிப்போரின் அடையாளம் வஞ்சிப்பூவாகும்.) வஞ்சிப்போரின் எதிர்ப்பில் தற்காப்பாய் (defence) எழுந்தது காஞ்சிப்போராகும். (கள்>கள்வு>கவ்வு>கா என்ற திரிவில் காக்குஞ்செயல் வெளிப்படும். கள்+சு = கச்சு என்பது மெய்புதைக்கும்/காப்பாற்றிக்கொள்ளும் ஆடையாகும். மூக்கொலிபெற்றுக் கச்சு கஞ்சுகமென்றாகும். கஞ்சி>காஞ்சி என்பவை நாட்டைக் காக்கும் செயற்பாடுகள். இவற்றின் அடையாளமாய் rebus principle இன் படி தற்காப்பாளர் காஞ்சிப்பூ சூடினார். (காஞ்சி மரங்கள் மிகுந்த கச்சிப்பேடு, காஞ்சிபுரமானது.) காஞ்சித்திணை, காஞ்சிப்பொதுவியல், காஞ்சித்துறை என்பவை நாடு, கருத்து, மெய்யியல் போன்றவற்றைக் குறித்துத் தற்காக்கும் நிலைப்பாடுகளாயின.
 
அவிழ் இணர்க் காஞ்சி நீழல் குரவை அயரும் - பூவுதிர்க்கும் காஞ்சிமர நிழலடியில் குரவையாடி அயரும் மகளிர்;. காஞ்சியென்ற குறிப்பையும் பார்த்தே, கூடியோர் பரத்தை மகளிரென்ற முடிவிற்கு நாம் வருகிறோம். ஏனெனிற் காஞ்சியையொட்டிப் பரத்தையர் கூடுவது ஒருவிதச் சங்க இலக்கிய மரபுக்குறிப்பு. (காஞ்சி காப்பாற்றும் மரமல்லவா?) காஞ்சியைச் சுற்றிக் குருக்கத்திக் கொடி படர்வதாய், தொண்டைமான் இளந்திரையனைப் பாடும் கடியலூர் உருத்திரங் கண்ணனாரின் பெரும்பாணாற்றுப் படை 375-377 ஆம் வரிகளில் 
 
குறுங்காற் காஞ்சி சுற்றிய நெடுங்கொடிப்
பாசிலைக் குருகின் புன்புற வரிப்பூ
  
என்ற காட்சி விரியும். காதல் மகளிரை (குறிப்பாய்ப் பரத்தைகளை) குருகிற்கு (சிலம்புமாதவியும் குருக்கத்திப்பெயர் கொண்டவளே!) ஒப்பிடுவது தமிழ்ப்புலவருக்கு ஆகிவந்த பழக்கம். அகம் 55 ஈச்ச மரத்தைக் காதலனுக்கும் சுற்றிப்படருங் குருக்கத்திக்கொடியைக் காதலிக்கும் உவமையாகக் கொள்ளும். (இதேபோலக் குருக்கத்திக்கொடி மாமரஞ் சுற்றியதாய் காளிதாசனின் சாகுந்தலத்தில் ஓர் உவமை வரும். காளிதாசனை முதலாகவும் சங்கப்புலவரைப் பின்னாகவும் காட்டும் இந்தாலசி அறிஞர்களை என்னசொல்வது?) இங்கே காஞ்சி நீழலில் குருக்கத்தியர் கூடிக் குரவையாடுகிறார். குரவை என்பது 7 பேரோ, 9 பேரோ ஆடும் மகளிர் ஆட்டம். அவ்வப்பொழுது கைசேர்த்தாடும் ஆட்டம். குரவை பற்றித் தனிக்கட்டுரையே எழுதமுடியும். இங்கு தவிர்க்கிறேன்.
 
தீம் பெரு பொய்கைத் துறை கேழ் ஊரன் = ஊரார் கூடி நீராடும் இனிய துறைநிறைந்த ஊர்த்தலைவன்; தேர் தர வந்த = தேரில் வந்ததுகண்டு; நேரிழை மகளிர் ஏசுப என்ப = அழகிய இழை (சங்கிலி) அணிந்த மகளிர் கேலிபேசி ஏசினாரோ? என் நலனே அதுவே = அதுவுமெனக்கு நல்லதுதான். (காஞ்சிமர நிழலில் கூடியவர் குரவையாடி ஊரனைப்பற்றி வம்புபேசி ஏசுகிறார். ”பேசட்டும், எனக்கும் அது நல்லது தான்”.என்கிறாள் நயப்புப்பரத்தை.)
 
பாகன் நெடிது உயிர் வாழ்தல் = (ஞாவகம் வச்சுக்குங்கடி) யானைப்பாகன் நெடுநாள் உயிர்வாழ்தலென்பது; காய்சினக் கொல்களிற்று யானை நல்கல் மாறே = கோவம்வரின் இழுத்துப்போட்டு மிதிக்கும் யானையின் நல்கையெனத் தெரிந்துகொள்ளுங்கள். (இடைவிடாது துன்புறுத்தும் பாகனை கோயில்யானைகள் அடித்து மிதித்துவிடும். பாகனின் கொடுமை/குசும்பிற்கும் அளவுண்டு); தாமும் பிறரும் உளர் போல் சேறல் = தாமும் மற்றவரும் மட்டுமே உலகிலுள்ளது போற் செல்லுதல்; முழவு இமிழ் துணங்கை தூங்கும் விழவின் = முழவடிக்கத் துணங்கை தூக்கி ஆடும் விழாவில் (துணங்கை குரவையின் இன்னொரு வேற்றம். குரவை பற்றி எழுதும்போது இதையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்); யானவண் வாராமாறே = நான் அங்கே வராவரைக்குந்தான். வரினே = அப்படி வந்து, வான் இடைச் சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல் = வான்படு சூரியனுக்குத் தக்கத் தன்னைத் திரித்துக்கொள்ளும் நெருஞ்சிபோல்.
 
நெருஞ்சி (நுள்>நெள்>நெரி>நெரிஞ்சி>நெருஞ்சி) என்னும் புல் (Tribulus terrestris) சூரியனைப் பார்த்தாற்போல் கிடையாகப் பலகிளைகள் விட்டுப்படரும் நிலத்திணையாகும். நெருஞ்சங்காய்/பழம் போன்றவற்றின் முள்ளாலே இப்பெயரேற்பட்டது. முள்பற்றிய கதைகள் தமிழில் நிறையவுண்டு. அத்துணைசிறிய நிலத்திணைக்கு இங்கேயோர் அரிய புதலியல் அவதானம் சுட்டப்படுகிறது. நெருஞ்சியின் ஒரு கணுவில் வளரும் கூட்டிலைகளில் ஒன்று பெரிதாகவும், மற்றொன்று சிறிதாகவுமிருக்கும். அடுத்த கணுவில் பேரிலையிருந்தபக்கம் சீரிலையும், சீரிலையிருந்தபக்கம் பேரிலையாகவும் மாறியிருக்கும். இப்படிக் கிளைநெடுகிலும் ஒன்றையொன்று மறைக்காமல் எல்லா இலைகளும் ஞாயிற்றொளியைப் பெறூம்வகையில் புல்வளரும். மொத்தத்தில் சூரியவொளி தனக்கு முற்றிலும் கிடைக்கும்படி ஆண்டு முழுக்க இப்புல் திரிந்துகொண்டேயிருக்கும். மேற்கூறிய வரி இப்பொழுது விளங்குகிறதா?
 
இங்கே ஞாயிறு நயப்புப்பரத்தைக்கும், நெருஞ்சி மகிழ்நனுக்கும் உவமையாகின்றன. உவமையில் என்னவொரு மமதையும் இளக்காரமும் வருகின்றன? - பாருங்கள் அதே பொழுதில் என்னவொரு பொருத்தம்? சங்க இலக்கியச் சிறப்பே இதுதான். இயற்கை பற்றிய கூர்த்த அவதானம்; அதை மாந்த வாழ்க்கைக்குப் பொருத்தும் பட்டறிவு. இயற்கையோடு இணையும் போக்கு. இற்றைவாழ்க்கையின் அவலமே இதற்கு மாற்றாய் நடப்பதுதான். இயற்கையை விட்டு நாம் நெடுந்தொலைவு வந்துவிட்டோம் என்றே தோன்றுகிறது. சூழலியற்காரர் மீளமீள இதைத்தான் சொல்கிறார்.    .
 
என்னொடு திரியான் ஆயின் = என்னைச் சுற்றித் திரியானெனில்; வென்வேல் மாரியம்பின் மழைத்தோற் சோழர் = வெல்லும் வேலும், மாரிபோல் அம்பும், மேகம்போற் கிடுகும் உடைய சோழரின்; வில் ஈண்டு குறும்பின் வல்லத்துப் புற மிளை = வில்பொருந்திய வல்லக்கோட்டையின் வெளிக்காவற்காட்டில்; ஆரியர்படையின் உடைகவென் = ஆரியர்படை சுக்குநூறானது போல்; நேரிறை முன்கை வீங்கிய வளையே. = நேரே தாழ்ந்திருக்கும் முன்கையில் திரண்டுள்ள என் வளைகள் உடையட்டும்.
 
கடைசி 4 வரிகளில் ஆரியருக்கும் சோழருக்கும் இடைநடந்த போர்ச்செய்தி சொல்லப்படுகிறது இதைப்புரிந்துகொள்ளச் சற்று மெனக்கெடவேண்டும். நந்தரிலிருந்து, மோரியர், சுங்கர், கனகர் வரை அவரவர் பெயரிற் சொல்லியதுபோக பொத்தாம்படையாயும் சங்க இலக்கியத்தில் ஆரியர்பற்றிச் சிலசெய்திகளுண்டு. அப்படியொரு செய்தியிது அடுத்துவரும் நற்றினை 170 இலும், இதே செய்தியுண்டு. தவிரச் சிலம்பின் மதுரைக்காண்டத்தில்  ”வடவாரியர் படைகடந்து, தென்றமிழ்நாடு ஒருங்கு காணப் புரைதீர் கற்பின் தேவி தன்னுடன் அரைசுகட்டிலிற் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியனோடு ஒரு பரிசா நோக்கிக் கிடந்த மதுரைக் காண்டம் முற்றிற்று” என்றும் கூறப்படும். (அரைசுகட்டிலிற் துஞ்சிய நெடுஞ்செழியன் வடக்கே போகவில்லை. வடக்கிருந்தவந்த படையைக் கடந்தான். அவ்வளவுதான்.அதேபொழுது இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனும், செங்குட்டுவனும் வடக்கே போனதற்குச் சிலம்பிற் சான்றுள்ளது.)
 
வடக்கே மோரியரின் பின் மகதர் ஆட்சிப்பரப்பு சிச்சிறிதாய்க் குறைந்தது. அலெக்சாந்தரின் மிச்சப்படைகள் வழி வடமேற்கெழுந்த இந்தோ-கிரேக்கர் (கிரேக்கம், உரோமானியரென நேரே வந்தவரையும், இந்தோ-கிரேக்கரையும் சேர்த்தே தமிழர் யவனரென்பர்), சகர் போன்றோர் மகதராட்சி குன்றிய வடபகுதிகளைத் தாமே ஆளத்தொடங்கினர். உச்செயினிக்கு மேற்கிருந்த சத்ரபரும் சகர்வழி வந்தவரே. பின் இவரெல்லாம் விந்தியந்தாண்டித் தெற்கே வரத்தொடங்கினார். தங்களைச் சத்திரியரென்றே சொல்லிக்கொண்ட இவர் எங்கெல்லாம் வலுக்குறைந்ததோ, அங்கெலாம் நுழைந்தார். அவரிலொரு பகுதியார் உத்தேய (>யுத்தேயே>யௌதேய) கணமென்றும் ஆயுதகணமென்றும் சொல்லப்பட்டார். முடியரசில்லாது குடியரசாயும் இனக்குழு ஆட்சியும் கொண்டிருந்தார். போர்மூலம் பொருள்திரட்டி நகர்ந்துகொண்டிருந்தார். அகண்ட அரசை ஏற்படுத்தவில்லை. ஆங்காங்கே கூட்டங்கூட்டமாய்ச் சிலகாலம் வாழ்த்து பின்பிரிந்து வேறிடஞ்சென்று விரிந்துகொண்டிருந்தார். அக்கால robber - barons, mercenaries என இவரைச்சொல்லலாம். எங்கெலாம் வளமிருந்ததோ, அங்கெலாம் உழிஞை, வஞ்சிப்போர் நடத்துவார். கொள்ளையடிப்பார்; நகர்ந்துபோவார். தென்னாடுநோக்கி இவர் படையெடுத்ததை இவர்நாணயம் தெற்கேகிடைத்ததனாலும், இவருடைய ”கார்த்திகேயன், சுப்ரமண்யன், சண்முகன்” வழிபாடும், நம்மூர் குறிஞ்சிமுருகன் வழிபாடும் இரண்டறக் கலந்துபோனதாலும்அறிகிறோம். இவற்றைப் பின்னிப்பிணைந்து நம் திருமுருகாற்றுப்படையும், பரிபாடலும் சொல்லுங் கதைகள் பற்பல. (இந்த வழிபாட்டுக் கலப்பு ஒரு தனியாய்வு. யாராவது செய்யவேண்டும்.)
 
இன்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன் ஆராய்ச்சிப் பேரறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி செந்தமிழ்ச் செல்வியின் சிலம்பு 46 ஆம் இதழில் ”ஆரியப்படை கரந்த, அரசு கட்டிலில் துஞ்சிய, பாண்டியன் நெடுஞ்செழியன்” என்ற கட்டுரையும், கல்வெட்டுக் கருத்தரங்கம் 1966 ஆம் இதழில் ”ஆரியப்படையும் யௌதேய கணமும்” என்ற கட்டுரையும் உத்தேய கணம்பற்றி வெளியிட்டார். இவற்றின் மறுபதிப்பு: ”மயிலை சீனி வேங்கடசாமி தமிழுக்கு வழங்கிய கொடை - பாகம் 1” என்று சென்னைத் தமிழ்வளர்ச்சிப் பேரவை வெளியிட்ட நூலில் உள்ளது. தவிர, https://en.wikipedia.org/wiki/Yaudheya,https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D போன்ற தளங்களிலும் ஆங்கிலத்திலும், தமிழிலும் யௌதேயவென கூகுளித்தால் செய்திகள் கிடைக்கும். ”தமிழருக்கும் உத்தேயருக்கும் இடையாட்டம்” பற்றிய ஆய்வு இன்னும் நிறைவுபெறவில்லை. இதுநாள்வரை தொட்டும் தொடாமலுமே சிலசெய்திகள் தெரிந்துள்ளன.
 
உத்தேயரெனும் ஆரியரின் தாக்கம் நூற்றுவர்கன்னர் (சதகர்ணிகள்) மீதுமிருந்தது. சகரை முற்றிலும் தொலைத்துப் பின்னாளில் நூற்றுவர்கன்னர் வடக்கேயும் எழுந்தார். நூற்றுவர் கன்னரைத் தாக்கியவர் தகடூர் வரை வந்து தமிழரைத் தாக்குவது எளிது. மலையமான் திருமுடிக்காரியை முள்ளூருக்கருகிலும், சோழரை வல்லத்திலும், பாண்டியரை மதுரைக்கருகிலேயேயும் உத்தேயர் தாக்கியிருக்கிறார். மொத்தத்தில் இது அடுத்தடுத்து ஏற்பட்ட படையெடுப்பு (expedition). இதன் இயலுமையை அறியுமுன் சங்ககால மக்கள்தொகையைக் கருத்துமூலமாகவாவது நாம் உணரவேண்டும். இப்படியொரு படை அக்காலத்தில் எவ்வளவு பெரிதாயிருந்திருக்கும்? 3000, 30000, 100000 - இதில் எது சரி? வல்லக்கோட்டைக்குள் (வல்லத்தின் கோட்டை; இதன் நினைவாகவே சென்னைக்கருகில் வல்லக்கோட்டை என்ற ஊர் எழுந்திருக்கலாம். அதன் முருக வழிபாட்டுச் சிறப்பும் உத்தேயக் கணத்துள் எழுந்திருக்கலாம்.) எத்தனைபேர் இருந்தார்? 3000, 30000, 100000?
 
இற்றைத்தமிழகத்தில் 7 3/4 - 8 கோடிக்குத் தமிழருள்ளோம். மற்ற மாநிலங்களிலும், நாடுகளிலுமுள்ள தமிழர்தொகை கணக்கிட்டால் சிலர் ஒன்றரைக் கோடியென்றும், இன்னுஞ்சிலர் 2 கோடியென்றும் சொல்வார். எது உண்மையோ தெரியாது. மொத்தத் தமிழர் குறைந்தது 9 1/2 கோடியாவது தேருவோம். பொருத்தமான, தோராயமான கணக்குகளையிட்டால் இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழர் தொகையென்பது கிட்டத்தட்ட 5/6 இலக்கமே தேறும். சங்ககாலத்தின் போது மூவேந்தர் நாடுகள் ஒவ்வொன்றிலும் நிரவலாய் 2 இலக்கத்திற்கும் குறைவாகவே மக்கள் இருந்திருப்பர். 
 
[இப்படியொரு கணக்கை 1999 - 2000 களில் ஒருமுறையிட்டேன். மலேசியாவில் நடந்த முதல் உலகத் தமிழ்மாநாட்டில் இதற்கான கட்டுரையொன்று வெளிவந்தது. என் தந்தையார் நூலகத்திலிருந்து அந்த ஆங்கிலக்கட்டுரை எனக்குப் படிக்கக்கிடைத்தது. ஏசுகிறித்து காலத்திலிருந்த பாலத்தீன மக்கள்தொகை, அன்றைய மக்கள்தொகைப் பெருக்கவீதம் போன்றவற்றை மேலையர் சான்றுகளிலிருந்து அவ்வாசிரியர் கொடுத்திருந்தார். ஆசிரியர் பெயர் இப்பொழுது எனக்கு நினைவில்லை. இதோடு, இந்தியா விடுதலை பெற்றபின் தமிழரின் பெருக்கவீதம். பெருக்கவீதங்கள் எப்படி உயர்ந்துகுறைந்தன என்றெலாம் இயன்றமை ஊன்றுகோள்களைக் கொண்டு, குத்துமதிப்பான கணக்கைப் பாலாப்பிளையின் தமிழிணையம் மடற்குழுவில் கட்டுரையாய் வெளியிட்டேன். ”அகத்தியரிலும்” பின்னாற் படியிட்டநினைவு எனக்குண்டு. இப்பொழுது அம்மடல் என்கணியிற் கிடையாது. அதை இணையத்தில் எப்படித்தேடியெடுக்க வேண்டுமென்றுந் தெரியவில்லை. ஆனால் 5/6 இலக்கம் என்றமுடிவு  நினைவுள்ளது. இக்கணக்கை யாராவது திருப்பிப்போடவேண்டும்.]
 
அதை ஒருபக்கம்வைத்து இன்னொருபக்கம் விளைவுகளைப் பார்ப்போம். 4, 5 பெருநகரங்களுக்கு மேலின்றி, மற்றபடி சிறுநகரங்கள், சிற்றூர்களுடன் பெரும்பாலும் வயல்கள், காடுகள் ஊடிருந்த காலம் அது. உறையூர், புகார் ஆகிய பெருநகரங்கள் தவிர்த்து ஆவூர், வல்லம் போன்ற கோட்டைகளுள்ள சிறுநகரங்கள் சோழநாட்டில் அன்றிருந்தன. சிலப்பதிகாரத்தில் புகாரின் கிழக்கு மேற்கு அகலத்தை 1 காதமென இளங்கோ நாடுகாண் காதையிற் சொல்வார். பெரும்பாலும் ஊடே ஆறுபோகும் பெருநகரங்கள் 1:2 என்ற மடங்கிலிருப்பதால் புகாரின் நீளம் 2 மடங்கென்று கொண்டால், நகரப்பரப்பளவு 2 சதுரக்காதம். = 90 சதுரக்கிலோமீட்டர் என்றாகும். (என்கணக்கில் தென்புல வாய்பாட்டின் படி 1 காதம் = 6.70503 கி.மீ. இதேநகரம் வடபுல வாய்ப்பாட்டின் படி 4 மடங்கு சிறிதாயிருக்கும்.) 2011 இல் இந்திய மக்கள்தொகை அடர்த்தி 382 என்பர். 2000 ஆண்டுகளுக்குமுன், புகார் நகர அடர்த்தியை 100 எனக் கொண்டால், அதன் மக்கள்தொகை 10000 க்கும் குறைவாயிருக்கும். (இற்றைச் சென்னையும் சென்னையைச் சுற்றிலும் கணக்கிட்டால் மக்கள்தொகை 1.5 கோடிக்குத் தேரும்.) வல்லம் போன்ற கோட்டைகளில் 3000, 4000 பேருக்கும் மேலிருந்தால் அதிகமென்றே தோன்றுகிறது.
 
வல்லம் உறையூர்ச்சோழனுக்கு ஆட்பட்டது. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் செங்குட்டுவன் காலத்தவன். என் ’சிலம்பின் காலம்’ நூலில் செங்குட்டுவன் வடக்கே இரண்டாம்முறை படையெடுத்துப் போன காலம் பொ.உ.மு.80 க்கு அருகிலென்று சொல்லியிருப்பேன். செங்குட்டுவன் ஆட்சிதுறந்தகாலம் பொ.உ.மு. 76 என்றுகொண்டால் பட்டஞ்சூடியது (பதிற்றுப்பத்துப் பதிகத்தின் படி) பொ.உ.மு.131 ஆகும். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் இறந்தபோது பெண்காமத்தில் அவனுக்கு ஈடுபாடிருந்ததென்று சிலம்புகூறும். எனவே இறக்கும்போது அவன் அகவை 60க்கு மீறாது. 25 அகவையில் அவன் பட்டமேறியதாய்க் கொண்டால், 35 ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கலாம். அப்படியெனின் அவன் பட்டமேறியது பொ.உ.மு. 115. பட்டமேறிய சிலவாண்டுகளில் ஆரியப்படை கடந்தானெனில் உத்தேயர் படையெடுப்பு பொ.உ.மு 120 க்கு அருகில் நிகழ்ந்திருக்கலாம். (http://valavu.blogspot.in/2010/05/8.html) இது செங்குட்டுவன் முதற்படையெடுப்பிற்குப் பிந்தியதென்றே இப்பொழுது எனக்குத் தோன்றுகிறது. ஆனால், இவன் இமையம் போகவில்லை, நெடுஞ்சேரலாதன் வடசெலவிற் வெற்றிபெற்ற காரணத்தாற் இப்படியோர் பெயரைப் போட்டியாய்த் தனக்குச் சூட்டிக்கொண்டான் போலும்.
 
இனி வல்லம் எந்தச் சோழனின் ஆளுகைக்கு உடபட்டது?
.     
செங்குட்டுவனின் தாய் நற்சோணை ஞாயிற்றுச்சொழனின் மகள். ஞாயிற்றுச்சோழனுக்குத் (ஆ)தித்தன் என்ற பெயருமுண்டு. அவன் சேரரோடு (மணவுறவு) கொண்ட காரணத்தால் மணக்கிள்ளி (கிள்ளிச் சம்பந்தியென்றே இதற்குப்பொருள்) இவன்மகன் தித்தன்வெளியன். இவன் தந்தையோடு முரணி வளநாட்டின் (சோழநாடு வளநாடு, நாகநாடு என 2 பகுதிகள் கொண்டது.) துறைமுகம் கோடிக்கரையில் (நாகநாட்டிற்கு புகாரே தலைநகரும் துறைமுகமுமாகும்.) இருந்துகொண்டு ஆட்சி செய்ததும் சங்க இலக்கியத்திற் பதிவு செய்யப்படுள்ளது. தித்தன் வெளியன் வீர விளையாட்டுக்கள், இசை, நடனக் கூத்துக்களென்றே சிலகாலங் கோடிக்கரையிற் கழித்தான். தித்தனுக்குப் பின், வேற்பல் தடக்கை பெருவிறற்கிள்ளி (பல்வேறு தடங்களில் - வழிகளில் - வேல்வீசுந் திறன்கொண்ட கிள்ளி) என்றும்போர்வைக்கோப் பெருநற்கிள்ளி (போர்வையெனும் ஊரின் அரசன்; இற்றை உறையூருக்கு அருகிலுள்ள பேட்டைவாய்த்தலை, போர்வையெனப்பட்டதாம்.) என்றும் அழைக்கப்பட்டு, தித்தன்வெளியன் பின்னாளில் தந்தைக்கு அப்புறம் உறையூரிலிருந்து ஆண்டிருக்கிறான்.
 
நெடுஞ்சேரலாதனின் மைத்துனன் தித்தன்வெளியனே. பின் சேரலாதன், தித்தன் வெளியன் என்ற இருவருக்கும் சண்டையேற்பட்டு போர்க்களத்திலிறந்ததைக் கழாத்தலையார், புறம் 62, 368 பாக்களால் உறுதிசெய்வார். இவனுக்குப்பின் இவனுடைய இள அகவை மகனோடு (பெரும்பாலும் இவன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவன் ஆகலாமென உய்த்துணருகிறோம்.) பகைகொண்ட 9 அரசருடன் செங்குட்டுவனே போரிட்டு உறையூரை நிலைநிறுத்த உதவினான். இச்செய்திகளெல்லாம் சிலம்பின் வஞ்சிக்காண்டத்தில் வருவதை அறியமுடியும். இச்செய்திகளை தமிழுலகம், தமிழ்மன்ற, தமிழாயம் மடற்குழுக்களில் அகம் 152 பற்றி நானெழுதிய கட்டுரைத்தொடரில் பேசியிருக்கிறேன். எனவே உத்தேயர் வல்லத்தின் மேற் படையெடுத்தபோது, வல்லம் வேற்பல் தடக்கை பெருவிறற்கிள்ளியின் ஆட்சிக்கு உட்பட்டிருந்திருக்கலாம் என்று முடிவுசெய்கிறோம்.. இன்றைக்கு திருச்சிராப்பள்ளியிலிருந்து தஞ்சாவூர் போகும்பாதையில் தஞ்சைக்கு வெகு அருகில் 8/9 கி.மீட்டரில், வல்லம் இருக்கிறது.
 
அங்கே பெரியார் மணியம்மை பல்கலைக்கழகமும், சற்று தொலைவில் தமிழ்ப்பல்கலைக் கழகமும் இருக்கின்றன.  
 
அகம் 336 ஆம் பாட்டின் மொத்தப்பொருள்:
 
குழல்தண்டிற் பொருந்திய அகண்ட சேம்பிலையின் பசும்பரப்பில், குட்டியொடு தானும் உண்ணாதிருக்கும் பெண்நீர்நாயின் வருத்தம் போக்கவேண்டி, அன்றாட உணவுதர எழுந்த நீர்நாய் நீரிற்கிடக்கும் வாளையொடு போராடி, அதைச்சாய்த்துக் கவ்வுஞ்செயலால் நீர்த்துறை கலங்கியதால். தாகத்திற்குப் பதநீர்குடித்தபின், நுணுகிச்செய்த அழகுக்குடங்களைத் தம் பக்கத்திருத்தி. பண்பிலா மகிழ்நனின் பரத்தமையைப் பேசிக்கொண்டும். பூவுதிர்க்கும் காஞ்சிமர நிழலடியில் குரவையாடியும், அயரும் மகளிர் கூடிநீராடும் இனியதுறை நிறைந்த ஊர்த்தலைவன் தேரில்வந்தது கண்டு கேலிபேசி ஏசினாரோ? அதுவும் எனக்கு நல்லதுதான்.
 
(ஞாவகம் கொள்ளுங்கள்;) யானைப்பாகன் நெடுநாள் உயிர்வாழ்தலென்பது கோவம் வரின் இழுத்துப்போட்டு மிதிக்கும் யானையின் நல்கையெனத் தெரிந்துகொள்ளுங்கள். தாமும் மற்றவரும் மட்டுமே உலகிலுள்ளதுபோற் செல்லுதலென்பதும், முழவடிக்கத் துணங்கைதூக்கி ஆடும்விழாவிற்கு நான் அங்கே வராவரைக்குந்தான். அப்படிவந்து, வான்படு சூரியனுக்குத் தக்கத் தன்னைத் திரித்துக்கொள்ளும் நெருஞ்சிபோல் அவன் என்னைச் சுற்றித் திரியானெனில், வெல்லும் வேலும், மாரிபோல் அம்பும், மேகம்போற் கிடுகுமுடைய சோழரின் வில்பொருந்திய வல்லக்கோட்டையின் வெளிக் காவற்காட்டில், ஆரியர்படை சுக்குநூறானது போல், நேரேதாழ்ந்திருக்கும் முன்கையில் திரண்டுள்ள என் வளைகள் உடையட்டும்.
 
அன்புடன்,
இராம.கி.

No comments:

Post a Comment