Friday, October 28, 2016

கடலூர் கேப்பர்மலை ரகசியம்

-- சிங்கநெஞ்சம் சம்பந்தம்.

தெற்கே பொதிகை முதல் வடக்கே இமயம் வரை, எத்தனை எத்தனையே மலைகள் நம்நாட்டில் உள்ளன.  ஆனால் கடலூரில் உள்ள ஒரே மலை “கேப்பர் மலை“.  உண்மையில் கேப்பர் மலை, ஒரு மலையே அல்ல.

கடலூர் நகரம் முழுவதுமே கடற்கரை சமவெளியில், பத்துமீட்டர் உயரத்திற்குள்ளேயே அமைந்துள்ளது.  மேற்கே சற்று உயரமாக இருபது மீட்டருக்குள் உள்ள செம்மண் மேட்டுப் பகுதி மலை என்று வழங்கப்படுகிறது.  இந் மலை, கடலூர் துறைமுக நகருக்கு மேற்கேயும்,
திருவந்திபுரத்திற்குத் தெற்கேயும் அமைந்துள்ளது.

திருவந்திபுரத்தில் உள்ள ஹயக்ரீவர் மலை கேப்பர் மலையின் ஒரு பகுதியே, இந்த மலைக்குப் போகும் முன் சற்று கேப்பரைப் பற்றிப் பார்ப்போமா?


இந்த மலையைப் பற்றிய குறிப்பு 13.6.1783 –இல் ஆங்கிலேய-பிரெஞ்சு படைகளுக்கு நடைபெற்ற போரைக் குறிப்பிடுகின்ற வரை படத்தில் காணப்படுகிறது.



பிரெஞ்சு மொழியில் உள்ள இந்த வரைபடத்தில், இந்த மலை கூடலூர் குன்று என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த வரைபடத்தில் கடலூர் புதுநகர் காட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முற்காலத்தில் கேப்பர் மலை கூடலூர் குன்று என்றும் செம்புறாங்கல் மலை என்றும் அழைக்கப்பட்டது.  பின்னர் வண்டிப்பாளையம் மலை என்றும் அழைக்கப்பட்ட இந்த மலையின் மீது 1796-ம் ஆண்டு வண்டிப்பாளையத்திற்கு அருகே, ஆங்கிலேய படைத்தலைவர் பிரான்சிஸ் கேப்பர் என்பர் மாளிகை கட்டினார்.  அதைக் குறிக்கும் வகையில் இந்த மலை கேப்பர் மலை என்று அழைக்கப்பட்டது.  1815-ம் ஆண்டு இந்த மாளிகை அரசாங்கத்துக்குச் சொந்தமானது.  பின் சில மாற்றங்களுடன் அது கேப்பர் சிறை ஆக மாற்றப்பட்டது.  இந்த வளாகம் 300மீட்டர் நீளமும் 280 மீட்டர் அகலமும் உள்ளது.  ஆங்கிலேய அடக்குமுறை ஆட்சியின்போது புதுவை கடலூர் எல்லையில் கைது செய்யப்பட்ட பாரதியார் இந்தச் சிறையில்தான் அடைக்கப் பட்டிருந்தார்.

கேப்பர் மலையில் கருங்கற்களே கிடையாது.  மேலே சிவந்த நிறத்தில் செம்புறாங்கள் படிவங்களும், அதன் கீழே கடலூர் மணற்பாறைகளும் காணப்படுகின்றன.  கடலூர் துறைமுகத்தை அடுத்துள்ள கேப்பர் குவாரி அருகே (காரைக்காடு) அகழ்ந்தெடுக்கப்பட்டு இந்த செம்புறாங்கல் முன்பு சாலைகள் போடப் பயன்படுத்தப்பட்டது.  கடலூர் மணற்பாறைகளின் அடியில் இடையிடையே தரமான களிமண் கிடைக்கிறது.  பண்ருட்டிப் பகுதியிலும், வண்டிப்பாளையம் பகுதியிலும் இந்தக் களிமண் கொண்டு நேர்த்தியான பொம்மைகளும்  மண்கலங்களும் செய்யப்படுகின்றன.  விருத்தாசலத்தில் உள்ள பீங்கான் தொழிற்சாலையிலும் இந்தக் களிமண்ணே பயன் படுத்தப் படுகிறது. நெய்வேலியில் வெட்டி எடுக்கப்படும் பழுப்பு நிலக்கரி இந்தப் பாறை அடுக்குகளின் கீழ் கிடைக்கிறது.  கேப்பர் மலையின் அடிவாரத்தில் உள்ள ‘கரையேறவிட்ட குப்பத்தில்‘ கல்லாக மாறிய மரம், கடந்த நூற்றாண்டில் முற்பகுயில் கண்டறியப்பட்டதாகக் குறிப்புகள் உள்ளன.  திருவக்கரை பகுதியில் உள்ள கல்மரங்களும் கடலூர் மணற்பாறைகளிலேயே காணப்படுகின்றன.



கடலூர் மணற்பாறைகளில் இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால் அதன் மேல் உருவாகியுள்ள செம்புறாங்கல் மற்றும் செம்மண் படிவங்கள் சிவந்து காணப்படுகின்றன. செம்மண்டலம், செம்மேடு போன்ற ஊர்களின் பெயர்களே இதற்குச் சான்று ஆகும்.  கடலூருக்கு மேற்கே உள்ள பகுதிகளில் நிலக்கடலை சிறந்த முறையில் பயிர் செய்யப்படுகிறது.  பண்ருட்டிக்கும் நெய்வேலிக்கும் இடையே பரவியுள்ள செந்நிலப் பரப்பில் இரும்புச் சத்து அதிகமாக உள்ளது.  இங்குப் பலா, முந்திரி போன்றவை செழிப்பாக விளைகின்றன.  இவை உலகப் புகழ் பெற்றவை.  இன்றும் பண்ருட்டி -வடலூர் சாலையின் இரு மருங்கும் பலாப்பழங்களும்
முந்திரியும் விற்கப் படுவதைக் காணலாம்.  முந்திரிப் பயிறு ஏற்றுமதி நம் நாட்டிற்கு அந்நிய செலாவணியைப் பெற்றுத் தருகிறது.

தகவல் – இயக்குநர் (ஓய்வு) இந்திய புவியில் ஆய்வு துறை.

நன்றி - மாலை மலர் (கடலூர்)  தீபாவளி மலர்  



 ________________________________________________________ 
 
Singanenjam
singanenjam@gmail.com
________________________________________________________ 


No comments:

Post a Comment