Wednesday, August 16, 2017

குன்று முட்டிய குரீஇயும், குறிச்சி புக்க மானும்

-- நூ.த.லோக சுந்தரம்
"சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதி பதிப்பாசிரியர், திரு. S. வையாபுரிபிள்ளை, B.A.,B.L., அவர்களால், பரிசோதிக்கப்பட்டு திரு. S. கனகசபாபதி பிள்ளையவர்களால் வெளியிடப் பெற்ற தொல்காப்பியப் பொருளதிகார முதற்பாகம், பயிலும் பலர்க்கும் பேருபகாரமாக விளங்குகின்றது. அதனை, ஊன்றிப் படித்து வருங்கால், அதனுட் பொருந்தாப் பாடங்கள் சில விளங்குவதைக் கண்டேன். அப்பாடங்களை அவ்வாறே கொள்ளின், உண்மைப் பொருள் காணவியலாது குன்று முட்டிய குரீஇப் போலவும், குறிச்சிபுக்க மான் போலவும், பயில்வோர் இடற்படுவர் ஆதலின், உண்மைப் பாடங் களை வெளியிடின், அவர்க்கு நன்மை பயக்கும் என்று கருதி இதனை எழுதலானேன்."

என்று 'தொல்காப்பியப் பொருளதிகாரப் பதிப்பாராய்ச்சி' (தமிழ்ப் பொழில் (13/5), பக்கம்: 161-170; https://books.google.com/books/about?id=eUYkDwAAQBAJ) மற்றும் 'தொல்காப்பியப் பொருளதிகாரப் பதிப்பாராய்ச்சி' (https://ta.wikisource.org/s/8r4h) ஆகிய கட்டுரைகளில் புலவர் கா. கோவிந்தன்  குறிப்பிடுகிறார்.

"குன்று முட்டிய குரீஇப் போலவும், குறிச்சிபுக்க மான் போலவும், பயில்வோர் இடற்படுவர்" என்பதன் உட்பொருள் படிக்கும் பொழுது எளிதில் விளங்குவதில்லை. அதனை அறியாமல் உவமையின் சிறப்பும் விளங்குவதில்லை.


"குன்று முட்டிய குரீஇப் போலவும், குறிச்சிபுக்க மான் போலவும்"

"குரீஇ"
   
குரீ இ- செய்யுள்களில் குருவி எனும் சொல்லின் நீட்டிய விளி  நிலை 
குரீ இ - இ கர  உயிர் அளபெடை= அதாவது இயல்பான தனது 2 நொடி ஒலிக்கும் ரீ ( ர்+ஈ) யின் கால அளவினைக் காட்டிலும் ஓர் நொடி மேலும் நீட்டி ஒலிக்க இ எனும் மேலும் ஓர் எழுத்து அடுத்து வைத்து  நெடிலின் நிலை காட்டும் தொல்காப்பிய இயல் மரபு.

அதற்கும்  மேலும் ஒரு நொடி (4 நொடி) இகர ஒலி  நீட்டிக்க வேண்டுமானாலும், இரண்டு இ (இஇ) இட்டால் 4 நொடிநேரம் நீட்டி ஒலிக்கலாம் என்பது பெறப்படும் பொருள். ஆனால், இது பாடல் வரிகளில் பொதுவாகத் தேவைப்படாது. உரை நடைகளில் கொள்ளலாம்.  பால் கறவை மாடு 'மாஆஆஆ' எனக் கூவினது  எனக்கூறல், அது மிக நீண்டு ஒலிக்கும் நிலையை எழுத்திலும் காட்ட முடியக்கூடிய ஒரு நிலைப்பாடு.

ஓர் முறை என் இனிய நண்பர், மேலை நாட்டினர்,  ஓர் பாடலில் 'ஞேஎ ' என ஓர் சொல் பயனில் வர, இதுபற்றி வினா வைக்க, அது அந்தப்பாடல் வரியில் அதன் வழியில் நோக்க, ஓர் ஆட்டு இடையன் தன்  ஆட்டு மந்தையை ஓட்டிச் செல்லும் போது எழுப்பும் 'போலி ஒலிக்குறிப்பு' எனக்காட்டியது மலரும் நினைவாகின்றது.  

மேலும்,  "குன்று முட்டிய குரீஇ" என்பது
சிறிதே களிப்பாக (மண்வகை) உள்ள மணற்படுகைகள் உள்ள, 
சிறிதே உயர்ந்த = மண் அரித்தெடுத்த ஆற்றுப்படுகை சுவற்றினில் சிலவகை தவிட்டு நிறக் குருவிகள் மைனாக்கள் (கூடு) வளை  கட்டி வாழும்.  இருப்பிடம் தேர்வு  செய்து கொண்டு தன இன பிணையுடன் வாழ மண்சுவற்றினை  தன் அலகினால் குத்திக்குத்தி வளை அமைக்கும் செயலைக் குறிக்கின்றது இவ்வடி. 

வேறு,
குன்று / குன்றம் எனும் சொல் சில இடப்பெயர்களில் மிக்க தவறுதலாக பொருந்தாத நிலையில் உள்ளமை போல் காணலாம்.  அப்பெயர் எவ்வடி (எப்படி) வந்தது என்பதனுக்கு எடுத்துக்காட்டு, முதுகுன்றம்  (விருத்தாசலம்-இது ஒரு வேதாரணியம் போல் பொருந்தாத  வடமொழி மொழி சொல்மாற்றம்). இந்த இடப்பெயர் அருகில் எந்தவிதமான பெரு / சிறு மலையோ சிறு குன்றோ  இல்லாதபோது அவ்வடி முதுகுன்றம் எவ்வாறு அமையும் என ஆய்ந்தபோதுதான் விளங்கியபொருள்  புற்று =  மிக மிக்க உயரமாகக் குன்றாக வளர்ந்துள்ள கரையான் புற்று அவற்றை நம்முன்னோர் மண்ணின் 5 பெரும்பூதங்களில் எடுத்துக்காட்டாகக் கொண்டு வணங்கி வந்தனர் என்பது உணரலாம்.

தேவாரத்தில் மூவர் முதலிகளாலும் பாடப்பெற்ற 'முதுகுன்றம்' எனும் தலம் நடுநாட்டில் மணிமுத்தாறு எனும் ஓர் ஆற்றங்கரையில் 'அம்மணிகத்து ஒவ்வூர்'. 


இன்றும் எல்லா ஊர்களிலும் உள்ள கரையான் புற்றுகள் வணங்கப்படும் தெய்வமாகி உள்ளது மறுக்கமுடியாத உண்மை அல்லவா? குன்று எனும் சொல் மண் வகையில் அதாவது கடின கல் வகை அல்லாது, உயர்ந்து காணும் ஓர் சுவரினுக்கு ஈடான ஒன்றிணைக்கக் குறித்தது.  இப்போது 'மண்' எனும் ஐந்து பெரு பூதங்களில் ஒன்றாகும். மண்ணிற்கு அடுத்த போட்டியாக வந்துள்ளது இந்த விருத்தாசலம். மற்றவை காஞ்சியம், திருவாரூர், திருஒற்றியூர், திருவான்மியூர் என மிக நீளும்; நூற்றுக்கணக்கில்  எங்கிருந்தாலும்  புற்று வணங்கப் படுகின்றதோ அங்கெல்லாம். 

Inline image 2
Inline image 1 
  Inline image 3
 

இன்று நாம் 'மைனா' எனக்குறிப்பது ஓர் வகை 'குரீஇ'. அதாவது கண்ணின் கடையில் மை  தீட்டிய தோற்றம் காட்டும்  குருவி ஆகும் என, கீழே குறுந்தொகை 72  பாடலில் காணலாம். ஆனால் நற்றிணை 56 பாடலில் வெளிப்படையாகவே கண்ணகத்து எழுதிய என வருவதால் அறிக.

குன்று முட்டிய குரீஇ யின் இடர் நிலைக்காரணம்:
மிக வலிமைக் குறைந்த மண் சுவர்களில் = மண் அரித்த ஆற்றின்  சுவர்களில் (Walls  of Revin),  குரீஇ க்கள் வளை  அமைத்து வாழும் போது, மழைபெய்தலாலோ, மிக்கு காய்ந்து விடுவதாலோ அவ்வகை மண் சுவர்கள் இளுத்து விழ  (இளகி) வளைக்குள் மாட்டிக்கொண்டோ,  வேறுவிதமாகவோ குஞ்சுகளோ, தாய் தந்தைப் பறவைகளோ உயிர்  நீக்க நேரிடும். அதாவது, தான் முற்றிலும் அறியாது தானறிந்த கிட்டிய ஒன்றின் துணைகொண்டு   அமைத்துக்கொண்ட இல்லமே  தனக்கு சிலபோது இடராவது போல் என்பது எடுத்துக்காட்டு  தாங்கும் பொருள்.

திருவண்ணாமலை அருளாளர் இரமண மகரிசி அடுத்து வந்த ஓர் மடத்து தமிழ் அறிஞர் இயற்றிய தமிழ் வெண்பா யாப்பினில் அமைந்த தத்துவ நூலில்  'சிலந்தி தான் பின்னிய வலையில் தானே மடிவதுபோல்' எனும் எடுத்துக்காட்டு  மேலதற்கு இணையானது எனலாம். புறம் 19 பாடலில் இந்த குரீஇ இனம் இடர்படுவதைப் பாடியுள்ளமைக் காண்க.

சங்க நூல்களில், குரீஇ எனும்சொல்  களவழி நாற்பதிலும்,  புறம் 19 பாடலிலும்,  நற்றிணை 366 பாடலிலும் குன்று எனும் சொல்லுடன் இணைந்து வருவது காண்க.

குரீஇப் பூளை குறுநறுங் கண்ணி - 72         குறிஞ்சிப்பாட்டு

பருவிரும்பு பிணித்துச் செல்வரக் குரீஇத் - 80    நெடுநல்வாடை

நிரைபறைக் குரீஇ யினம் காலைப் போகி - 11    அகநானுறு 303

பெருவரை அடுக்கத்துக் குரீஇ ஓப்பி - 5         அகநானுறு 388

*குன்றத்து இறுத்த குரீஇ இனம் போல - 8        புறநானூறு 19
  
தூக்கணம் குரீஇத் தூங்குகூடு ஏய்ப்ப - 11    புறநானூறு 225

 மனைஉறை குரீஇ க் கறையணற் சேவல் - 4    புறநானூறு 318

கூம்பிய சிறகர் மனையுறை குரீஇ - 2         குறுந்தொகை 46

குரீஇ ஓப்புவாள் பெருமழைக் கண்ணே - 5    குறுந்தொகை 72

உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல் - 2    குறுந்தொகை 85

முடங்கல் இறைய தூங்கணங் குரீஇ - 5        குறுந்தொகை 374

கண்ணகத்து எழுதிய குரீஇப் போல - 4        நற்றிணை 56

உள் இறைக் குரீஇக் கார் அணற் சேவல் - 1    நற்றிணை 181

உள் ஊர்க் குரீஇக் கரு உடைத்தன்ன - 6         நற்றிணை 231

முதுக் குறைக் குரீஇ முயன்று செய் குடம்பை - 9    நற்றிணை 366

எண்ணருங் குன்றிற் குரீஇயினம் போன்றவே    களவழி நாற்பது 7


'குன்று முட்டிய குரீஇப் போலவும்'  என்பதைப் பயன்கொண்டவர்களின் பயன்பாட்டில் பொதுவாக இடர்ப்படுதலுக்கு காட்ட வந்த ஓர் முதுமொழி அது. அவ்வளவே அவரவர் தம் எடுத்துக்  காட்டுகளுக்கு  பயன் கொண்ட சூழ்நிலைகள்தான் வேறு, வேறு, வேறு.

அவர்களின் பயன்பாட்டில் நுணுகிக்  கூர்ந்து நோக்க, சாதாரண மக்கள் முதலில் அவர்தம் மனதில் பளிச்சிடும்  கருத்தினைத்தான் வைத்துள்ளனர் என்பதோடு,  அவர்கள் கற்பனையான ஒன்றை உலகத்தில் நடவாத ஒன்றை தனக்கு துணையாகக் காட்ட முன் நிறுத்துகின்றனர் என்பதுதான் தகும் மெய்நிலையும் கூட. 

மலையைப்பார்த்து நாய் குரைக்கின்றது என்பது ஓர் எடுத்துக்காட்டு வரி.  இது கற்பனையில் விளைந்ததேயன்றி எந்த நாயும் மலையைப்பார்த்துக் குரைப்பதில்லை, குரைக்காது. குரைத்தல் என்பதே கிடையாது.

அதுபோல்தான் குருவி எங்கேயாவது பறந்து போய் ஓர் குன்றின் மீது முட்டுமா? இதனை யாரவது பார்த்ததுண்டா? இல்லை, இல்லை, இல்லை அல்லவா?  ஒரு கருத்தை நடக்காத ஒன்றினை நடந்ததாகக் காட்டுவது தன்கருத்தினுக்கு ஆதரவாக வந்த ஓர் வகை கற்பனை எடுத்துக்காட்டு அவ்வளவே.

*இங்கு சங்கநூல்களின் வரிகளை  வைத்திட்டேன் அதனில்,
"குன்றத்து இறுத்த குரீஇ இனம் போல" -- வரி எண்  8 - புறநானூறு 19  பாடல் வரியில் ஓர் குருவி தங்கியது பற்றியல்ல ஓர் முழு இனமும் (குரீஇ இனம்) தங்குவதற்குக்  குன்றினை கையாண்டமைக் காணலாம் ஏதோ பயித்தியமாக  முட்டியது பற்றியல்ல, மாறாக  தம்மினம்  தங்குவது தொடர்புடையதுதான்.  இவ்வடி பழமையான ஆசிரியரது மட்டுமல்ல கேவல(சாதாரண) நிலையினைக் காட்டுவது அல்ல அல்ல அல்ல.
_________________________________________


"குறிச்சி புக்க மான்"
                                                 
'குறிச்சி' என்பது குறவர்கள் வாழும் இடம்.  குறிஞ்சி என்றால் மலையும் அது சார்ந்த இடமும் ஆகும் என்பது நன்கே அறிவீர். பழம் சங்க நூல்களில் குறிச்சி எனும் சொல்  காணவில்லை.  சேக்கிழார் போன்ற 12-13 நூற்றாண்டு புலவர் பெருமக்களால் இயற்றப்பட்ட நூல்களில்தான் குன்றக் குறவர்கள்   வாழ்விடமாகக் காண்கின்றது.

குறவர் இனத்தவர்களுக்கு பயிர்த்தொழில் பெரிதும் தெரியாது, விலங்குகளை வேட்டையாடி வாழ்வதே பெரும் வாழ்க்கை எனலாம்.  மலைகளில் சிறு சிறு படிபோல் அமைத்த தட்டு வடிவ புலங்களில்  தினை, வரகு, சாமை முதலிய  சிறுதானியங்களையும் விளைவிப்பர். காட்டு விலங்குகளிலிருந்தது பாதுகாத்து வாழ கூட்டங்களாகவே கூடி வாழ்வர்.  பலபோது இவர்களின் வாழ்விடம்  பாதுகாப்பிற்காக  ஓர் வேலி போன்ற மிக எளிதான அமைப்பினைக் கொண்டதும் ஆகும்.  இவ்வகை  வாழ்விடங்களை 'குறிச்சி' என்பார் சேக்கிழார் பெருமான்.

இந்த குறவர் நாளும் வேட்டையே தொழிலாக, விலங்குகள் இயல்பாக வாழும் இடங்களுக்கு தேடிச் சென்று வேட்டை ஆடுவர்.  பின் குறிச்சிக்குத் திரும்புவர்.  வேட்டையில் விற்பன்னரான அவர்கள் வாழ்விடத்திலேயே அறியாது புகுந்து விட்ட மானின் நிலை  என்னவாகும்,  தப்பித்தல் என்பது நடவாது. இதனைக்காட்டவே குறிச்சியில் புகுந்த மான் மிக எளிதாக வேட்டையாடப்படுவது (இடர்ப்படுவது )நடக்கும் என்பதைக்காட்ட வந்ததே அந்த முதுசொல் 'குறிச்சி புக்க மான்'.

இவை திருத்தொண்டர் புராணம் அதனில்,  கண்ணப்பநாயனார் புராணம் பகுதியில் காணலாம்: 

இருங் குறவர் பெருங்குறிச்சி க்கு இறைவன் ஆய - 12.692
கொண்ட சீர் விழவு பொங்கக் குறிச்சியை வலம் கொண்டார்கள் - 12.687
சினை மலர்க் காவுகள் ஆடி செறிகுடிக் குறிச்சி சூழ்ந்த - 12.674
வில் தொழில் விறலின் மிக்கான் வெஞ்சின மடங்கல் போல்வான்
மற்றவன் குறிச்சி வாழ்க்கை மனைவியும் தத்தை என்பாள் 12.657

இவ்வெடுத்துக்காட்டுகளில் மிக்க தெளிவாக கானவர்,  வேடர் வாழும் இடம் குறிச்சி என வழங்கப்பட்டமை காண்கின்றோம்.  
இது ஓர்  உரைகாரரின்  எடுத்துக்காட்டு முதுசொல் ஆட்சி, இதனில் உள்ள இரு சூழ்நிலையும் வேறு வேறு வகைத்ததாயதை இணைத்துப் பயன்கொண்ட நிலை  என்பதை அறியலாம்.

இவ்வாறாக இதற்கு விளக்கம் அளிப்பது, செம்மொழியாம் தமிழில் ஆய்வுக்கு ஊன் அளித்தமைக்கு ஈடாகப் பழம் சொற்களின் மறை  நிலைப் பொருள்களைக் காட்ட ஓர் வாய்ப்பு அமைந்தது, ஓர் தமிழ் மொழிசார் மாநாட்டில் வைக்கப் படும் பேராளர் என என் கருத்துரையை வைக்க வாய்ப்பு  அமைந்தமைக்கு நிகரானது என்பேன். 




________________________________________________________ 








நூ த லோ சு (நூ.த.லோக சுந்தரம்)
மயிலை
selvindls61@gmail.com
________________________________________________________  

1 comment:

  1. 🙏 சிறப்பான விளக்கம் .
    நன்றிங்க ஐயா.

    ReplyDelete