Saturday, December 16, 2017

நிலவும் கதிரும் போல் நிலைத்திடும் எழுத்து


——   தேமொழி



     நிலவும் கதிரும் போல் வாழ்க நின் புகழ் எனப் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் காரிகிழார் வாழ்த்தும் புறநானூற்றுப் பாடலொன்று உள்ளது.  சந்திர சூரியன் உள்ளவரை இக்கொடை  நிலைக்கட்டும் என்று கூறுவதை ‘சந்திராதித்தவரை தொடர்வதாக’ என கல்வெட்டுச் செய்திகளிலும் காணலாம்.  நிலவும் கதிரும் போல் நிலைத்திடும் எழுத்தைப் படைத்த எழுத்தாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஒவ்வொரு மொழிக்கும் ஓரிருவர் தேறலாம்.  பெரும்பாலும் நிலைத்திடும் எழுத்தின் தகுதி எக்காலத்திற்கும்  பொருந்தும் அறிவுரையாகவே இருந்து வந்திருக்கிறது. அழகியல் இலக்கியங்கள் அத்தகுதி பெறுவது சொற்பம்.

     தனது வாழ்நாளில் ஒரே ஒரு நூல் மட்டுமே எழுதி வரலாற்றில் இடம் பிடிப்பது எழுத்தை மூச்சாகக் கருதும் எந்த ஒரு எழுத்தாளருக்கும் இருக்கும் விருப்பமே.  இத்தகைய வாழ்க்கை எழுத்தாளர் யாவருக்கும் அமைவதில்லை.  நாம் யாரென முகமறியாத வள்ளுவர் எழுதி இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்த திருக்குறளை நாம் அறிவோம். இன்றும் உலகில் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்படுகிறது.  இன்றும் அவர் நூல் தொடர்ந்து பதிப்பில் இருக்கிறது. அக்காலத்தில் தமிழர் ஒவ்வொருவரும் தம் வீட்டில் ஒரு மலிவுவிலை திருக்குறள் கையடக்கப் பதிப்பையாவது வைத்திருப்பார்கள். இன்றும் இணையத்தில் பல வலைத்தளங்கள் திருக்குறளைத் தாங்கி இருக்கிறது. தினம் ஒரு குறள் என்ற முயற்சி நடக்கிறது.  குறள்மலை என்ற திட்டம் துவங்கி குறள்கள் அனைத்தையும் கல்வெட்டில் பொறிக்கும்  முயற்சியிலும் இக்காலத் தமிழர் ஈடுபட்டுள்ளனர்.  வடஇந்தியரும் தமிழர் ஆதரவைப் பெரும் நோக்கில் குறள் குறித்துப் பாராட்டுதல்களை மொழிகிறார்கள்.  கங்கைக் கரையில் வள்ளுவருக்கு இடமளிப்பதாக உதட்டளவில் உறுதி கூறுகிறார்கள்.  எந்த ஒரு தமிழருக்கும், பள்ளி செல்லும் சிறுவர் உட்பட ஓரிரு குறள்களை நினைவில் இருந்து கூற இயலும்.

     மக்கள் மத்தியில் புகழ் பெற்ற ஓர் எழுத்தாளர்  எனில் அவர் திருக்குறளுக்கு உரை எழுதி வெளியிட்டிருப்பார், ஒரு சிலர் தாமறிந்த பிற மொழியில் மொழி பெயர்க்கவும் செய்திருப்பார்கள்.  அயல் நாட்டவர், உள்நாட்டவர், தமிழர், பிற மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழார்வலர் எனப் பலரும் இது போன்ற முயற்சிகளை முன்னெடுத்திருப்பர். புகழ் பெற்ற எழுத்தாளர் பட்டியலில் இடம் பிடிக்க விரும்புபவர் தகுதி என்ற ஒரு எழுதப்படாத விதியாகவும் இது அமைந்து விட்டிருக்கிறது. 

     பல உள்நாட்டு அயல் நாட்டு தமிழ்ச் சங்கங்கள் என்றால் திருவள்ளுவர் படமின்றி இருக்காது, திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டி, வினாடிவினா எனப் பல போட்டிகளும் உலகத்தமிழர் அரங்கில் அரங்கேறி வருகிறது. தமிழ் என்றால் அதன் அடையாளம் வள்ளுவர் என்ற நிலையை எட்டி வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்த வான் புகழ் கொண்ட தமிழ்நாடு என்று தான் பிறந்த மண்ணுக்கும் பெருமை சேர்த்துச் சென்றுள்ளார் குறள் மூலம் அறநெறி கூறிய வள்ளுவர். வள்ளுவர் யார் அவர் பின்புலம் என்ன என்று உறுதியாகக் கூற இயலாத தடுமாற்றம் நம்மிடம் இருப்பது போல, அவர் எத்தனை நூல்கள் எழுதினார் என்பதையும் நாம் உறுதியாகக் கூற இயலாது.  அவர் திருக்குறள் செய்து வரும் சாதனையுடன் சில சமய நூல்கள் மட்டுமே போட்டி போட இயலும்.

     தமிழறிஞர் உ. வே. சாமிநாதையரின் ஆசிரியரும், 19-ம் நூற்றாண்டில் தமிழில் அதிக நூல்களை இயற்றியவர் என்ற புகழ் பெற்ற திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையை ஒரு ஒப்பிடுதலுக்காக எடுத்துக் கொள்ளலாம்.  இவர் புராணங்கள், காப்பியங்கள், பிள்ளைத் தமிழ் நூல்கள், அந்தாதி, கலம்பகங்கள், கோவைகள், எண்ணற்ற தனிப் புராணங்கள் என  சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியதாகக் கூறப்படுகிறது.  ஆனால், இன்று ஒரு சராசரி இளைய தலைமுறை தமிழரிடம் கேட்டால் இவர் குறித்து ஒரு சில குறிப்புகளை அவரால் கொடுக்க இயலுமா என்பது ஐயமே. முதுமையை நோக்கிச் செல்பவர்கள் அவரை அறிந்திருந்தாலும் பெரும்பாலோரால் அவர் எழுதிய பாடல் என ஒன்றை தங்கள் நினைவில் இருந்தும் சொல்ல இயலாது, அது போல அவர் நூலில் இருந்து ஒரு பாடலை எடுத்துக் கொடுத்தால் அது அவருடையது என அடையாளம் காட்டவும் இயலாது. இத்தனைக்கும்  பிள்ளைத்தமிழ் நூல்கள் பல இயற்றிய தமிழறிஞர் என்பதால் ‘பிள்ளைத் தமிழ் மீனாட்சி சுந்தரம் பிள்ளை’ என்று சிறப்பிக்கப்பட்டவர். இவரை அழைப்பித்து தமது ஊரின் கோயில் மீது தலவரலாறு எழுத வைத்துப் பலரும் பெருமைப்பட்டுக் கொண்ட அளவில் வாழ்ந்தவர். அவரது தமிழ்ப்பணி பரவலாக அறியப்பட்டுப் பெயரும் புகழும் பெற்றிருந்த  தமிழறிஞர் இவர் என்பது மிக விரைவில் மறக்கப்பட்டு வருகிறது.  துணுக்குச் செய்தி அளவிற்கு அவர் குறித்த தகவல்கள் தெரிந்து கொள்ளும் நிலைக்கு அவர் வரலாறு மங்கி இருக்கிறது.

     அவர் மட்டுமன்று, நாம் ஒவ்வொருவரும் அறிந்த, ஆர்வத்துடன் வாரப்பத்திரிக்கைகளில் படித்த பல வணிக எழுத்தாளர்கள், அவர்கள் நூல்களைத் தேடித்தேடி வாங்கிப் படிக்கும் அளவிற்கு நம்மைக் கவர்ந்தவர்கள், பற்பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதி வந்த எழுத்தாளர்கள் பலரும் காலப்போக்கில் காணாது போய் வருகிறார்கள். நாமறிந்த பல 20 ஆம் நூற்றாண்டு எழுத்தாளர்களின் வரலாறும் மங்கத் தொடங்கியுள்ளது.  அனைவரும் அவர்கள் வாழ்ந்த காலத்தின் உலகைப் படம்பிடித்து கதைகளாகவும், கவிதைகளாகவும், கட்டுரைகளாகவும் நம் சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களே. நம் இளமைக்கால வரலாற்றின் ஒரு பகுதியாக அவர்கள் எழுத்து அமைந்திருந்தது.  அவர்கள் எழுத்துகள் சில நம்மைச் செதுக்கியிருக்கும் அளவிற்கு நம் மேல் தாக்கமும் கொண்டிருக்கும்.

     நம் ஒவ்வொருவருக்கும் நம்மைக் கவர்ந்த, சென்ற நூற்றாண்டில் நம் சமகாலத்தில் வாழ்ந்த எழுத்தாளர் ஒருவரை அடையாளம் காட்ட இயலும்.  மாணவப் பருவத்திலேயே எழுத்தாளராகப் புகழ் பெற்ற லக்ஷ்மி என்ற மருத்துவர் திரிபுரசுந்தரி எழுத்திற்காக வாரப்பத்திரிக்கை வெளிவந்த காலத்தில் காத்திருந்த கூட்டத்தினர் உள்ளனர்.  அவர் நூல்கள் திரைவடிவமும் பெற்று அவரைப் புகழின் உச்சியில் உயர்த்திய காலமும் உண்டு.  ஆனால் இன்றைய இலக்கிய வட்டத்தின் இளைய தலைமுறையினர் எத்தனைப் பேர் அவர் பற்றி அறிவார்கள் என்பதை நம்மால் கூற இயலாது.  ஆனால் அறிந்தவர் மிகக் குறைந்த அளவில் இருப்பர் என்பதை மறுப்பின்றி ஒப்புக் கொள்ளும் மனநிலையில் நம்மில் பலர் இருப்போம்.

     இதே கருத்துகள் பிறமொழி எழுத்தாளர்களுக்கும் பொருந்தும். ஹாரி பாட்டரை விழுந்து விழுந்து படித்த சிறுவர்கள் இன்று வளர்ந்து பெரியவர் உலகில் நுழைந்து விட்டார்கள்.  அவர்கள் இளமைக்கால வாழ்வின் ஒரு பகுதியாக விளங்கிய ஜே. கே. ரௌலிங் எழுதிய எழுத்துகள் அடுத்த தலைமுறைக்கு செல்லுமா என்பதை உறுதியாகக் கூற இயலாது.  தினம் தினம் நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் இணையம் வழி எழுதத் துவங்கும்  பொழுது போட்டியில் வருங்காலத்தில் அவரும் மறைந்து போகலாம். கடந்த கால எழுத்தாளர்களை இலக்கியத்தைப் பாடமாக எடுப்பவர்கள் மட்டுமே அதிகம் அறிந்த நிலையில் இருப்பார்கள். 

     காலம் கடந்து வாழும் சாதனை படைக்கும் ஒரு எழுத்தின் இலக்கணம் என்ன என ஆராய முற்பட்டால் முதலில் தெரிவது வள்ளுவர். குறள் என்ற ஒரு இலக்கியம் இன்றும் யாவருக்கும் பொருந்தும் கருத்துகள் பலவற்றைச் சொல்லிச் செல்வதுடன், அக்கருத்துகளைப் பொன்மொழிகள் போல ஒருவர் தான் கூறும் கருத்தை வலியுறுத்த மேற்கோளாக எடுத்தாளும் எளிமையுடன், நல்வழிப்படுத்தும் அறநெறியாக இருப்பதும் காரணம் என்பது தெரியும். என்றும் வாழும் எழுத்து சுருங்கச் சொல்வதுடன், எக்கால மக்களாலும் தங்களுடன் இணைத்து அடையாளம் காணப்பட்டு, அதனால் ஏதோ ஒரு வழியில் பயன் கொள்ளும் வகையிலும் அமைந்திருக்கத் தேவை எனவே நாம் முடிவு செய்யலாம்.


நன்றி: இலக்கிய வேல்







________________________________________________________________________

தொடர்பு: தேமொழி <jsthemozhi@gmail.com>





No comments:

Post a Comment