Thursday, February 8, 2018

"கல்வெட்டில்" அரசியல்



——   தேமொழி 



    தமிழக வரலாற்றை ஆய்வு செய்தவரும், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத் தலைவராகவும் இருந்த மறைந்த ஜப்பானியத் தமிழறிஞர் நொபோரு கரஷிமா தமிழ்ச் சமூகத்தின் வாழ்வுமுறையை  அறிந்துகொள்ளும் செய்திச் சுரங்கமாகவே தமிழகம் தந்த கல்வெட்டுச் செய்திகளைக் கருதினார்.     சமூகம் எப்படி இயங்கியது, எப்படி மாறியது என்பது தெரியாமல் ஒரு நாட்டின் அரசியல் வரலாற்றையும் ஆட்சி வரலாற்றையும் புரிந்துகொள்ள முடியாது என்னும் கொள்கையுடன்  கல்வெட்டுச் செய்திகளை ஆய்வுக்குப் பயன்படுத்தி இடைக்காலச் சோழ சமூகத்தைப் பற்றிய ஆய்வுகள் செய்தவர் நொபோரு கரஷிமா. அவர் தமிழ் ஆய்வில் இக்கால அரசியல் தாக்கம் செலுத்துவதை விரும்பாதவராகவும் இருந்தார்.  கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்து நாளிதழுக்கு அளித்த செவ்வி ஒன்றில்  'கல்வெட்டியல் குறித்த அறிவை வளர்த்துக் கொள்ளவிட்டால், இந்த நாட்டின் பண்டைய அல்லது இடைக்கால வரலாற்றை ஆய்வு செய்ய முடியாது' என்று கவலையுடன் எச்சரித்தார்.

    தமிழகத்துடன், தமிழக பல்கலைக்கழக ஆய்வுகளுடனும் 1960கள் முதற்கொண்டு அவர் தொடர்பு கொண்டிருந்த கடந்த ஐம்பது ஆண்டுகளில், பல்கலைக்கழக கல்வெட்டியல், தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வுகள் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுள்ளதாக அவர் கருதினார்.  அத்துடன் மத்திய அரசின் தொல்லியல் துறையான ஆர்க்கியாலஜிக்கல் சர்வே ஆஃப் இண்டியா (ASI) நிறுவனத்தின்  தலைவர் தொல்லியல் ஆய்வுப் பின்புலம் கொண்ட வல்லுநர் என்று இருந்த நிலைமை மாறியதும், அக்கறையற்ற நிலையில், இடையில் பல ஆண்டுகள் தொல்லியல் பின்புலம் இல்லாத ஐ.ஏ.எஸ். பட்டம் பெற்ற இந்திய ஆட்சிப் பணியாளர்கள் வழிநடத்தலில் துறையை   ஒப்படைத்த நிலையும் பின்னடைவுக்குக்  காரணம் என்பது அவரது கருத்து. 

    அவ்வாறே, தமிழகத்தில் உள்ள  தொல்லியல் துறையின் கிளையலுவலக நிலையும் உள்ளது. தொல்லியல் துறைசாரா இந்திய ஆட்சிப் பணியாளர்கள் மேலாண்மையின் கீழ் கவனிப்பாரன்றி, தேவைக்கு ஏற்றவாறு புதிய தொல்லியல் துறை ஆய்வாளர்களையும் பணிக்கு அமர்த்தாத செயல்களே பின்னடைவுக்குக் காரணம்.  ஊட்டியில் 1962 இந்தியத் தொல்லியல் துறையின் தலைமை அலுவலகம் இருந்த காலத்தில் நான் கண்ட  சிறப்பான நிலை இன்று இல்லை.  சிறந்த முறையில்  இத்துறைகளை மாற்றி அமைக்காவிட்டால் தொல்லியல் கல்வெட்டியல் ஆகியவற்றின் வாயிலாக பண்டைய இடைக்கால இந்திய வரலாற்றை அறிய முடியாத நிலை ஏற்படும் என்றக் கவலையையும் அவர் வெளிப்படுத்தினார்.

    தமிழ்பல்கலைக் கழகம் சமீபத்தில்  மைசூர்  ஆர்க்கியாலஜிக்கல் சர்வே ஆஃப் இண்டியாவுடன் இணைந்து சில எண்ணிம வடிவமாக்கும் பணியில் ஈடுபட்டதும், காலியிடங்களில் புதிய பணியாளர்கள் சிலரை நியமித்தும்  நிலைமை மாறும் என்று கொஞ்சம் நம்பிக்கை கொள்ள வைக்கிறது என்றும் கூறினார். அத்துடன், நிலைமையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால், இந்தியா தனது வரலாற்றுக் கருவூலங்களை இழக்கும் என்று அச்சப்படுகிறேன்.  அந்த நிலைக்குச் சென்றுவிட்டால் வரலாற்றுச் சான்றுகள் உதவியின்றி எண்ணங்கள், கருத்துக்கள் கோட்பாடுகளின் அடிப்படையில் இந்திய வரலாற்றைக் கட்டமைக்க நேரும். இது மிகவும் கவலை கொள்ள வேண்டிய ஒரு நிலை என்றும் கூறினார்.

    தமிழ்க் கல்வெட்டுகளின் மதிப்பைத் தமிழர்களைவிட, இந்தியர்களைவிட வெளிநாட்டவர்களே உணர்ந்து அக்கறையுடன் பாதுகாக்கும் எண்ணம் கொண்டிருப்பது தெரிகிறது. முதன்முதலில் தொல்லியல் துறை இந்தியாவில் துவங்கப்பட்டதும் ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்ட பொழுதுதான், 1860-ம் ஆண்டு 'ஆர்க்கியாலஜிக்கல் சர்வே ஆஃப் இண்டியா' என்ற இந்திய தொல்பொருள் ஆய்வகத் துறையை அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் உருவாக்கினார். பிறகு ஆர்க்கியாலஜிக்கல் சர்வே ஆஃப் இண்டியாவின் கல்வெட்டியல் பிரிவு 1886 இல் துவங்கப்பட்டு 150 ஆண்டுகள் கடந்துவிட்டன, சுமார் 73,000  கல்வெட்டுச் செய்திகள் படிக்கப்பட்டு இந்திய வரலாறு அறியப்பட்டுள்ளது. ஆர்க்கியாலஜிக்கல் சர்வே ஆஃப் இண்டியாவின் தென்னிந்தியப் பிரிவு திராவிடமொழி கல்வெட்டுகள் மற்றும் சமஸ்கிரத கல்வெட்டுகளுக்கான பொறுப்பையும்; நாக்பூரில் இருக்கும் வடஇந்தியப் பிரிவு பாரசீக அரேபிய கல்வெட்டுகளிலும் கவனம் செலுத்தி வருகின்றன. முதலில் பெங்களூரில் துவக்கப்பட்ட கல்வெட்டியல் அலுவலகம் ஊட்டிக்கு மாற்றப்பட்டு 1903 ஆண்டில் இருந்து  1966 ஆண்டுவரை 63 ஆண்டுகள் ஊட்டியில் இயங்கியது.  பிறகு அங்குப் பணிபுரிந்த  கர்நாடகாவைச் சேர்ந்த தலைமை அதிகாரி  எடுத்த முடிவின் காரணமாக  தலைமையகம் மைசூருக்கு  மாற்றப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. பின்னர் லக்னோவிலும் சென்னையிலும் கல்வெட்டியல்  துறையின் கிளை அலுவலகங்களும் துவக்கப்பட்டன. 

    நொபோரு கரஷிமாவின் நேர்காணலுக்கு இரண்டு ஆண்டுகள் கழித்து, இந்து நாளிதழில் வெளியான கல்வெட்டியல் துறையின் மேலாளர் டி ஆர். ரவிசங்கர் அவர்களின் நேர்காணலில் அவரும் நம்பிக்கையூட்டும் விதமான செய்திகளை முன்வைக்கவில்லை.  இன்றைய சமூகத்தில் அதிக ஊதியம் தரும் பணிகளை விரும்பிச் செல்லும் இக்காலத்  தலைமுறையினர் தொல்லியல், வரலாறு, கல்வெட்டியல் கல்வியில் ஆர்வமற்றவராக இருப்பது கல்வெட்டியலின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி உள்ளதாகக் கூறியுள்ளார்.    மேலும்  அரசு தக்க நடவடிக்கை எடுத்துப் பாதுகாக்காவிட்டால்  இப்பொழுது உள்ள பெரும்பாலான கல்வெட்டுகள் அழிக்கப்பட்டுவிடும்  ஆபத்தும் உள்ளதாகவும் கூறியுள்ளார். தொல்லியல் தடயங்களின் அருமை அறியாது வணிக நோக்கில் மக்கள் அவற்றைச் சீரழிக்கும் நடைமுறை அதிகரிக்கிறது என்றும், இருப்பவை அழியுமுன்னர் இவற்றைப் பதிவு செய்து ஆவணப்படுத்த வேண்டியத் தேவையுள்ளதாகக் குறிப்பிட்டார். வரலாற்று மரபு வளங்களைப் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவும், பரவலாகப் பள்ளி கல்லூரி மாணவர் வரை கல்வெட்டியல் கல்வியைக்  கொண்டு செல்லவும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதும் அவர் கோணமாக இருந்தது. ஊதியம் அதிகம் கிடைக்கக்கூடிய தொழில்நுட்பக் கல்விக்கே மாணவர்கள் முன்னுரிமை அளிக்கும் பொழுது கல்வெட்டியல் கல்வி புறக்கணிக்கப்பட்டுவிடுகிறது என்பதும் அவர் கருத்து.

    இவ்வாறு தொல்லியல் துறையில் தகுதியுள்ளோர்களை பணிக்கு அமர்த்தாமல் பல காலியிடங்கள் உள்ளன, தக்கோர் தலைமையில் துறை வழிநடத்தப் படவில்லை என்று அயல்நாட்டுத் தமிழறிஞர் ஒருபுறமும்; பணிக்குத் தகுந்த கல்வெட்டியல் திறமையாளர்கள் கிடைக்கவில்லை, மக்கள் வணிக நோக்கில் தொல்லியல் சான்றுகளை அழிக்கிறார்கள் என்று தொல்லியல் துறை கல்வெட்டியல் தலைமை அதிகாரி காரணங்களை அடுக்கும் செய்திகள் வெளியாவது வரலாற்று ஆர்வலர்களுக்கு கவலையளித்து வருவது ஒரு கோணம் மட்டுமே.

    இவ்வகையில் தொல்லியல் ஆய்வு காணும்  முடக்கம் தரும் கவலையையும்  மிஞ்சிவிடுவது,  அழிந்து வரும் கல்வெட்டு படிகளின் நிலை பற்றியும், மொழி அரசியல் காரணமாக கல்வெட்டுப் படிகளின் மறைவது குறித்து தமிழக பத்திரிகைகள் பன்னிரு ஆண்டுகளாகச் செய்திகள் வெளியிட்டுக் கொண்டிருக்கும் அதிர்ச்சி தரும் மற்றொரு கோணம். 

    ''கடந்த நூறாண்டுகளாகக் கண்டு பிடிக்கப்பட்டு வரும் கல்வெட்டுக்கள், படித்துப் பார்க்கப்பட்டு, அவற்றில் உள்ள விஷயங்கள் நூல்களாக வெளியிடப்படவில்லை. படி எடுக்கப்பட்ட காகிதங்களும் சரியான பராமரிப்பின்றி அழிந்து கொண்டிருக்கின்றன'' என்று வரலாற்றாய்வாளர்களின் குமுறல்களை ஜூனியர் விகடன் இதழின்  2006 ஆண்டு வெளியான கட்டுரை ஒன்று  குறிப்பிடுகிறது. அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைப்பேராசிரியர் டாக்டர் எஸ்.சாந்தினி பீ அவர்கள் அவர்கள்  சேகரிக்கப்பட்டுள்ள கல்வெட்டுப் படிகளில் பெரும்பான்மையும் தமிழ்க்கல்வெட்டுச் செய்திகளே என்பதால் இதில் தமிழர்கள் அதிக அக்கறை கொள்ளவேண்டியத் தேவையிருக்கிறது. கண்டுபிடிக்கப்பட்டுப் படியெடுக்கப்பட  கல்வெட்டுகள் மைசூர்  தலைமையகத்தில்  கடந்த நூறு ஆண்டுகளாகத் தக்க முறையில் பராமரிக்கப் படாமல் இருக்கின்றன என்று கவலை தெரிவித்தார்.

    கல்வெட்டுகளின் பராமரிப்பு செலவு அதிகரிப்பதாலும், கல்வெட்டுகளில் 60% தமிழ் என்பதால் மாற்றான் தாய் மனப்பான்மையோடுதான் இந்திய தொல்பொருள் ஆய்வகம் நடந்து கொள்கிறது. தமிழின்  60,000 க்கும் மேற்பட்ட கல்வெட்டுகளில் 10,000 கல்வெட்டுகள் மட்டுமே 22 தொகுதிகளாக வெளியாகியுள்ளன. இவ்வாறு தொகுதிகளாக வெளியானவை  யாவும் ஆங்கிலேயர் ஆட்சியில் (1907 வரை) கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகள்.  தற்கால மொழி அரசியல், நதிநீர் அரசியலில் தாக்கங்களில் வரலாற்று ஆய்வாளர்களுக்கு மைசூர் அலுவலகத்தில் ஆய்வுக்கு ஒத்துழைப்பு கிடைக்கப்படுவதில்லை, இந்த நிலை மாற்றப்பட நடவடிக்கை தேவை என்கிறார்  டாக்டர் எஸ்.சாந்தினி பீ.

    நூலாகத் தொகுத்து அச்சிட அனுப்பப்படுவதும் கவனிப்பாரற்று அங்கேயே தேங்கிவிடுகிறது, பிழை சீர் பார்க்கவும் ஆளில்லை.  துவக்கப்பட்ட சென்னை கிளை அலுவலகத்திலும் படிகளைப் படிக்கவும் ஆள் பற்றாக்குறை.  இருப்பவர்களுக்கும் பணியில் 20 ஆண்டுகளுக்கு மேலாகப் பதவி உயர்வும் கொடுக்கப்படாத நிலை.  கல்வெட்டியல் ஆய்வகத் துறையையே தொல்லியல் துறையில் இருந்து  தனியாகப் பிரித்து விடும் திட்டத்தில் கல்வெட்டியல் துறையில் காலியான இடங்கள்  நிரப்பப்படவில்லை, இவை அனைத்திற்கும் காரணம் தமிழ்க் கல்வெட்டுகள் அதிகம் என்பதும், தென்னிந்திய வரலாற்றுக்கு  முக்கியத்துவம் கிடைக்கக்கூடாது என்ற குறுகிய எண்ணமும்தான் காரணம் என்று பெயர் குறிப்பிட விரும்பாத தொல்லியல் துறையைச் சார்ந்த  தென்னிந்திய  உயர் அதிகாரி  ஒருவர் ஜூனியர் விகடனில் குறிப்பிட்டுள்ளார். 

    இச்செய்தி வெளியானவுடன் ஆட்சியில் இருந்த தமிழக முதல்வர் கருணாநிதி ஊட்டியில் இருந்து  மைசூருக்கு மாற்றப்பட்டுவிட்ட தென்னிந்திய கல்வெட்டியல் தலைமையகத்தை மீண்டும் தமிழகத்திற்கே மாற்றவும், சென்னையில் உள்ள கிளை அலுவலகத்தை ஆய்வு நிறுவனம் என்ற நிலைக்கு உயர்த்தவும் மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசுக்குக்  கடிதம் எழுதினர். அன்றைய  மத்திய அரசின்  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், துறையின் மத்திய அமைச்சராக இருந்த அம்பிகா சோனியும் மைசூர் தலைமை அலுவலகத்திற்குத் தமிழகம் கோரிய மாற்றம் குறித்து பரிந்துரை அனுப்பியுள்ளார்கள். இதை மைசூர் தலைமை அலுவலகம் தட்டிக் கழித்துவிட்டார்கள்.  ஊட்டியின் தலைமை அலுவலகத்தில் கடைசி யாகப் பணியாற்றிய கர்நாடகாவைச் சேர்ந்த  அதன் உயர் அதிகாரி,  தம்முடைய வசதிக்காக அலுவலகத்தை ஊட்டியிலிருந்து மைசூருக்குக் கொண்டு சென்று விட முடிந்தது.  ஆனால், மாநில மத்திய அரசுகளால் செய்ய இயலவில்லை என்பதை எந்த வகையில் சேர்ப்பது என்பதும் வியப்பாக இருக்கிறது.

    மைசூர் அலுவலகத்தில் இருக்கும் கல்வெட்டுப்படிகளை தொகுக்க விரும்பிய தமிழக அரசு அதற்காக சில லட்சங்கள் நிதியை தமிழ்நாட்டின் தொல்லியல் ஆய்வகத்திற்கு (Tamilnadu State Dept of Archaeology -TNSDA) ஒதுக்கி மைசூர் அலுவலகத்திற்கு உதவ உத்திரவிட்டது. இந்த முயற்சியின் விளைவால் ஓராண்டு கல்வெட்டுகள் தொகுக்கப்பட்டன, ஆனால் இவ்வாறு தொகுத்துக் கொடுத்ததை அச்சில் கொண்டுவர ஆர்க்கியாலஜிக்கல் சர்வே ஆஃப் இண்டியாவிற்கு ஐந்தாண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது.

    அடுத்த கட்டமாக ஏற்கனவே படி எடுக்கப்பட்ட சுமார் 50,000 தமிழ் கல்வெட்டுகளை எண்ணிம வடிவில் மாற்ற (Digitalistion) தமிழக அரசு எடுத்த முயற்சியைத் தட்டிக் கழிக்க முடியாமல், தமிழகத்தின் தஞ்சைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மைசூர் கல்வெட்டியல் தலைமையகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுக் கொண்டது. இதற்காக ஒதுக்கப்பட்ட ஓராண்டு காலத்தில் கிழிந்துபோன படிகளையே எட்டு மாதத்திற்கு மைசூர் தலைமையகம் ஒட்டி ஒட்டி  சீர் செய்து கொண்டிருந்தது. அதனால், தமிழக அரசு ஒதுக்கிய 25 லட்சத்தில் ரூபாய் 22 லட்சங்களைப் பயன்படுத்த முடியாமல்  தமிழ் பல்கலைக்கழகம் அரசுக்கே திருப்பி அளித்தது என்று டாக்டர்.எஸ்.சாந்தினி பீ  குறிப்பிட்டுளார்.  ஆனால் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் முறையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை, விரைவில் செயல்படாத நிலைக்கு ஆள் பற்றாக்குறையே காரணம் என்று மைசூர் தலைமையகத்தின் அதிகாரிகள் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்  மீது குற்றம் சாட்டுகிறார்கள். அத்துடன் திறமையானவர்கள் இல்லாமல் போனதால் பணியில் ஓய்வு பெற்றவர்களைக் கொண்டு மிக மெதுவாகப் பணி தொடர்வதால் பல காலம் ஆவதாகவும், இந்தநிலைக்கு மத்திய அரசே பொறுப்பு எனவும் மத்திய அரசையும் குற்றம் சாட்டியுள்ளார்கள்.  இப்பொழுது எண்ணிமப் படுத்தும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

    மைசூர் தலைமையகத்தில்  மட்டுமல்ல, கிளை அலுவலகமான சென்னை தொல்லியல் ஆய்வகத்திலும் பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பல கல்வெட்டியலாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் ASI மற்றும் TNSDA சார்பில் ஒரு வருட பி.ஜி டிப்ளமா பயிற்சி பெற்று தயாராகும் கல்வெட்டியல் மாணவர்களுக்கு  உரியக் காலத்தில் கல்வெட்டியலாளர் பணி கிடைக்காத பொழுது அவர்களும்  வேறுபணிகளுக்குச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

    மார்ச், 2008 ல் மைசூர் தலைமை அலுவலகம் வேறொரு  புதிய கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட போது அங்குப் படி எடுக்கப்பட்டு வைத்திருந்த பல நூறு தமிழ் கல்வெட்டுகள்  பதிப்பிக்கப்படாமலே அழிந்து போய் விட்டதாகக் கூறப்பட்டது. கர்நாடகா அலுவலகத்தில் இவ்வாறு அழிந்து போகும் தமிழ்க் கல்வெட்டுகளுக்கு மொழி அரசியல்தான்  அடிப்படைக் காரணம்  என்பதைச் சராசரி மக்கள் கூறுவதில்லை,  கல்வெட்டு ஆய்வாளர் நெல்லை நெடுமாறன், டாக்டர்.எஸ்.சாந்தினி பீ போன்ற அத்துறையின் வல்லுநர்கள்தான் வருத்தத்துடன் கூறுகிறார்கள். காழ்ப்புணர்வால் தமிழ்க் கல்வெட்டுகள் பராமரிப்பின்றி ஆவணப்படுத்தப்படாமல் போவது கேரளாவிலும் நிகழ்கிறது. அங்குக் கிடைக்கும் தமிழ்க் கல்வெட்டுகளைக் கேரள அரசும் பதிப்பிப்பதில்லை தொல்லியல் துறைவசமும் ஒப்படைப்பதில்லை என்று கல்வெட்டு ஆய்வாளர் நெல்லை நெடுமாறன் சுட்டிக் காட்டியுள்ளார்.

    இதுநாள்வரை சேகரித்துவைக்கப்பட்ட 75 ஆயிரத்துக்கும் மேலான தமிழ்க் கல்வெட்டுகளின் படிவங்களையும் , பாதுகாக்கவும் பராமரிக்கவும் தமிழ் தெரிந்த தொல்லியல் அறிஞர்களைப் பணியில் அமர்த்தாத நிலையில், அவை  தமிழ்ப்பண்பாட்டின் மீது வெறுப்பும்  மொழிவெறியும் கொண்ட தொல்லியல் துறை அலுவலர்களால் அழிக்கப்படுவதாகவும், ஆய்வாளர்கள் ஆய்வுக்காக படிகளைக் கேட்கும்பொழுது அனுமதி மறுக்கப்படுவதுடன் பல காணாமல் போய்விட்டதாகக் கூறப்படுவதாகவும் மீண்டும் செய்திகள் தொடர்ந்து சமீபகாலம் வரை  வெளியாகி வருகின்றன.  இருப்பவை அழியும் முன்னர் அவற்றை அச்சில் கொண்டுவரவும் எண்ணிம வடிவிலும் பாதுகாக்கும் அவசியத்தை ஆய்வாளர்கள் அரசிடம் முன்வைத்தும் வருகிறார்கள்.

    தமிழ் மொழிக் கல்வெட்டுகளைத் தவிர பிறமொழி கல்வெட்டுகள் அச்சிலேறும் பணி விரைவாக நடப்பதாகவும் அப்பணி வரும் பத்தாண்டுகளில் முடிந்துவிடலாம் என்று கணிக்கப்படுகிறது. இதன் மூலம் தமிழ்க்கல்வெட்டுகள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுவதாகத்தான் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது.




கட்டுரைக்குத் துணைநின்றவை:
1) Archaeological Survey of India, Government of India - Epigraphy Branch; http://asi.nic.in/asi_epigraphical_sans_epibranch.asp


2) ஜப்பானியத் தமிழறிஞர் நொபோரு கரஷிமா காலமானார், டாக்டர் இ. அண்ணாமலை, 26 நவம்பர் 2015, பிபிசி செய்தி நிறுவனம்; http://www.bbc.com/tamil/global/2015/11/151126_noburuobit

3) ‘காவிரியும் போச்சு... கல்வெட்டும் போச்சு?’, 18/06/2006, ஜூனியர் விகடன்; https://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=78555

4) தமிழ் கல்வெட்டுகளை அழிக்கும் கர்நாடகா... கண்டு கொள்ளாத தமிழகம்! ஆர். ஷஃபி முன்னா, விகடன், 02/05/2013; https://www.vikatan.com/news/coverstory/14440.html

5) மைசூரில் அழிக்கப்படும் தமிழ் கல்வெட்டுகள் வரலாற்று ஆய்வாளர்கள் அதிர்ச்சி, பிப் 04, 2018, தினமலர்; http://www.dinamalar.com/news_detail.asp?id=1951851

6) ‘Unless knowledge of epigraphy develops, no ancient or medieval history of this country can be studied', Parvathi Menon, December 02, 2010, The Hindu; http://www.thehindu.com/opinion/interview/lsquoUnless-knowledge-of-epigraphy-develops-no-ancient-or-medieval-history-of-this-country-can-be-studied/article15576712.ece

7)‘Epigraphy staring at an uncertain future', R. Krishna Kumar, February 13, 2012, The Hindu; http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/epigraphy-staring-at-an-uncertain-future/article2887483.ece




________________________________________________________________________
தொடர்பு: தேமொழி (jsthemozhi@gmail.com)







No comments:

Post a Comment